'சேட்டை'ய ராஜாக்கள் - 20
தயக்கத்துடன் நின்றுகொண்டிருந்த பாபுவை உள்ளே அழைத்தான் நட்டு. வாசலில் செருப்பை விட்டுவிட்டு, மெதுவாக உள்ளே நுழைந்தான் பாபு.
ஹாலில் கால் நீட்டியபடி குமார் படுத்திருக்க, அருகில் அமர்ந்திருந்தான் ஷங்கர். பாபுவைப் பார்த்தவுடன் எழுந்து உட்கார்ந்தான் குமார்.
"வா டா..." என்றான் மெலிதாக புன்னகைத்தபடி.
குமாரின் அருகில் வந்து அமர்ந்தான் பாபு.
"சாரி டா.... " என்று சொல்லும்போதே, கண்களிலிருந்து கண்ணீர் எட்டிப்பார்த்தது. பாபு கண்கலங்குவதைப் பார்த்து, குமாருக்கும் அழுகை வந்தது.
"நான் தான்டா சாரி சொல்லணும்" என்றான் குமார் கண்கலங்கியபடி.
எல்லோரும் கண்கலங்குவதைப் பார்த்த நட்டு, அந்த அசௌகரியமான சூழலிலிருந்து விடுபட, ஏதேனும் ஒரு ஜோக் அடிக்க வேண்டும் என்று முடிவு செய்து, உடனே அதை செயல்படுத்தினான்.
"குமாருக்கு இவ்வளவு சீக்கிரம் கால்கட்டு போடுவாங்கன்னு நினைக்கவே இல்ல...." என்றான்.
சிரிப்பதற்கு மாறாக, நட்டை அனைவரும் முறைத்தனர்.
"ஜோக் சொன்னா சிரிக்கணும். இது கூட தெரியாது? ஸ்டுப்பிட் ஃபெல்லோஸ்" என்றான் நட்டு.
"இப்போ இந்த கேவலமான மொக்கையை நீ போடலேன்னு இங்க யாரும் அழல.... எப்படி டா உன்னால மட்டும் முடியுது?" என்றான் ஷங்கர்.
ஷங்கர் போட்ட அஸ்த்திவாரத்தில் வீடு கட்ட ஆரம்பித்தனர் குமாரும் பாபுவும். அனைவரது கவனமும் நட்டின் பக்கம் திரும்பியது. வரிசையாக அவனை கலாய்க்க ஆரம்பித்தனர்.
"டேய், நிறுத்துங்க டா... ஏதோ உங்க எமோஷனைக் குறைக்கலாமேன்னு ஒரு ஜோக் அடிச்சா.... எல்லாரும் அதை விட்டுட்டு, என்னை கலாய்க்க ஆரம்பிச்சிட்டீங்க"
"எதுவா இருந்தா என்ன நட்டு.... உன் உயர்ந்த நோக்கம் நிறைவேறியாச்சு.... சந்தோஷம் தானே?" என்றான் ஷங்கர்.
"என்னைக் கொளுத்திவிட்டுட்டு குளிர் காயாதீங்க டா...."
"சரி விடு, இது வழக்கமா நடக்குறதுதானே...."
குமாரிடம், "இப்போ எப்படி இருக்கு?" என்று கேட்டான் பாபு.
"வலி இருக்கு.... நல்ல வேளை... ஃபிராக்ச்சர் ஆகல"
"எப்படி டா ஆச்சு?"
"டேய்..... போதும் டா.... நம்ம வாசகர்கள் ரொம்ப பாவம். மறுபடியும் ஆரம்பத்துல இருந்து கடைசி வரைக்கும் ஹிஸ்டரி ஆப் தி ஆக்சிடன்ட், ஜியோக்ராபி ஆப் தி இன்சிடன்ட் எல்லாம் சொல்ல முடியாது. அவனுங்க ரெண்டு பேரையும் இங்க வர சொல்லுங்க டா.... மொத்தமா எல்லாருக்கும் ஒரு தடவை கதை சொல்லிடலாம்" என்றான் ஷங்கர்.
மொட்டைக்கும் கிருஷ்ணாவிற்கும் ஃபோன் பறந்தது. அடுத்த அரை மணிநேரத்தில், இருவரும் அங்கு வந்து சேர்ந்தனர். நடந்த கதை அத்தனையும் அனைவருக்கும் சொல்லியானது. இரவு வரை பேசிக்கொண்டிருந்துவிட்டு, சபையை கலைத்தனர்.
இரெண்டு மாதங்கள் உருண்டோடின....
இன்னும் பத்து நாட்களில் பொதுத்தேர்வு. வாழ்க்கையின் முதல் பொதுத்தேர்விற்காக அனைவரும் மும்முரமாக தயாராகிக் கொண்டிருந்தனர். பள்ளியில், ரிவிஷன் எக்சாம் என்ற பெயரில் தேர்வு மீதே வெறுப்பு வரும் அளவிற்கு அடுத்தடுத்து தேர்வுகளை நடத்திக் கொண்டிருந்தனர். பள்ளிக்கு வெளியிலும் யாரைப் பார்த்தாலும் "பப்ளிக் எக்சாம்" என்று பில்ட் அப் கொடுத்துக்கொண்டிருந்தனர்.
வாழ்க்கையின் முதல் நடைமுறைத்தேர்வு அப்போது தான் முடிந்திருந்தது. அவற்றை சிறப்பாக முடித்திருந்த திருப்த்தியில் பள்ளியின் மைதானத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
"எக்ஸ்டெர்னல் எக்ஸாமினரை மிக்சர், ஸ்வீட் எல்லாம் கொடுத்து மங்கு ஆக்கிட்டாங்க... உட்கார்ந்த இடத்தை விட்டு எந்திரிக்கவே விடல" என்றான் கிருஷ்ணா.
"ஆமா டா.... ஸ்வீட் காரம் சாப்பிடறதுக்கே கிளம்பி வந்துடறானுங்க" என்றான் பாலா.
"அதை எல்லாம் விடுங்க டா... தலைவர் படம் "படையப்பா" ரிலீஸ் ஆகுது டா.. ஆனா, அது ரிலீஸ் ஆகுறப்போ நமக்கு பப்ளிக் எக்சாம் நடந்துக்கிட்டு இருக்கும்" என்றான் ஷங்கர்
"என்ன கொடுமை இது? தலைவர் படத்த ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ பாக்க முடியல...." என்று புலம்பினான் பாபு.
"ஜியாக்ரபி பரீட்ச்சையை எழுதிட்டு நேரா தியேட்டருக்கு போயிட வேண்டியதுதான்" என்றான் ஷங்கர்.
"ஆமா டா..... எப்படியாச்சும் டிக்கெட் வாங்கிரணும்" என்றான் பாபு.
"நீ கவலையே படாத.... எப்படியும் நமக்கு டிக்கெட் உஷார் பண்ணிடறேன்"
"அது போதும்...."
"இன்னிக்கி நைட்டு எங்க வீட்டுல குரூப் ஸ்டடி பண்ணலாமா?" என்று நட்டு கேட்டதற்கு, அனைவரும் கோரசாக இருகரம் கூப்பி,
"வேண்டாம் டா சாமி...." என்றனர்.
"போதும் டா நம்ம குரூப் ஸ்டடி பண்ணது. இனிமேலும் படிக்கலேன்னா வேலைக்கு ஆகாது"
படிப்பு, படிப்பு என்று மாய்ந்து மாய்ந்து படித்துக் கொண்டிருந்ததால், பொதுத்தேர்வு தொடங்கும் வரை இவர்கள் வாழ்வில் சுவாரசியமாக எதுவுமே நிகழவில்லை. அதனால், நேராக பொதுத்தேர்வு ஆரம்பிக்கும் நாளுக்குத் தாவுகிறோம்...
காலை 6 மணி - ஷங்கர் வீடு.
டெலிஃபோன் மணி ஒலித்தது. ஷங்கர் எடுத்தான்.
ஷங்கர் : ஹலோ
(எதிர்முனையில்) கிருஷ்ணா : டேய், என்னடா கிளம்பியாச்சா?
ஷங்கர் : மணி 6 தான் டா ஆகுது.
கிருஷ்ணா : தெரியும் டா. எங்க அம்மா நல்ல நேரம் போறதுக்குள்ள வீட்டை விட்டுக் கிளம்பிடணும்ன்னு என்னைத் துரத்துறாங்க...
ஷங்கர் : அவ்வளவு சீக்கிரம் கிளம்பி வந்து என்ன பண்ணப்போற? எவனும் இருக்க மாட்டான்.
கிருஷ்ணா : அதனால தான் ஃபோன் பண்ணறேன். நீ கொஞ்சம் சீக்கிரமா வாடா.... எல்லாருக்கும் சொல்லிட்டேன். நீயும் வந்துடு.
ஷங்கர் : ட்ரை பண்ணறேன்
போனை துண்டித்தான்.
---------------------------------------------------------------------------
காலை 7.40 மணி - பள்ளி வகுப்பறையில்...
கிருஷ்ணா அமர்ந்து படித்துக்கொண்டிருந்தான். அப்போது, பாபுவும் நட்டும் அங்கு வந்தார்கள். இருவரும் நெற்றி நிறைய விபூதி வைத்திருந்தார்கள். பக்தி, பரீட்ச்சை சீசனில் மட்டும் வந்து போகும். எப்போதெல்லாம் பரீட்ச்சை வருகிறதோ, அப்போதெல்லாம் பக்தியும் வரும். பாபுவும் நட்டும் நெற்றியில் விபூதி வைத்திருந்ததைப் பார்த்து, கிருஷ்ணா கிண்டலடித்தான்.
"இப்போ மட்டும் பக்தி பொங்கிருமே" என்றான்.
"டேய், நீ மட்டும் என்ன? நெத்தியே மறைஞ்சி போற அளவுக்கு பட்டை போட்டுட்டு கிளம்பிருப்ப... வியர்வையில அழிஞ்சிருக்கும்"
---------------------------------------------------------------------------
காலை 8.20 மணி
நேரம் செல்ல செல்ல, ஒவ்வொருவராக வந்து கொண்டிருந்தனர். பொதுத்தேர்வு எழுத, அருகிலிருக்கும் "அல்-அமீன்" பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்பதால், மாணவர்களை இங்கிருந்து அழைத்துச் செல்ல, பள்ளியின் பேருந்துகள் தயாராக இருந்தன.
பொதுத்தேர்வில் காப்பி அடித்தாலோ, பிட் அடித்தாலோ என்னென்ன பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மேடம் எச்சரித்துக் கொண்டிருந்தார். அந்த பள்ளிக்கு சென்று, ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும் என்றும், பள்ளியின் பெயரைக் காப்பற்ற வேண்டும் என்றும் அறிவுரைகளைக் கூறிக்கொண்டிருந்தார்.
பள்ளியைவிட்டுக் கிளம்புவதற்கு முன், வகுப்பறையிலேயே சிறப்புப் பிரார்த்தனை நடத்தப்பட்டது. அனைவரும் மண்டியிட்டு வணங்கினர். பிரார்த்தனை முடிந்தவுடன், அனைவரும் பேருந்தில் ஏறி, அந்த பள்ளிக்கு பயணப்பட்டனர்.
தொடரும்...
3 comments:
pavam kumar......
plz da innum naan comedianaagave irukan... eppada enna herovaakapora???
hi da ,
After long time i back to read ur 20 the episode...Still u people enjoying ur each moments in that...Really greenish ...
Better u can direct "Kana Kanum Kallangal"!!
just kidding!!
Post a Comment