Monday, May 26, 2008

'சேட்டை'ய ராஜாக்கள் - 4

இன்றிலிருந்து புதிய கிளாஸ். எப்படியாவது கடைசி இரெண்டு பெஞ்சுகளில் இடம் பிடித்துவிட வேண்டும் என்ற முடிவோடு, ஷங்கர் பள்ளிக்குக் கிளம்பினான். பிரேயர் பெல் அடிப்பதற்கு இன்னும் பத்து நிமிடங்கள் இருந்தன. கிளாசில் பாதி பேர் கூட இல்லை. காலியாக இருந்ததால், இடம் பிடிப்பது அவ்வளவு சிரமமாக இல்லை. கடைசி பெஞ்சில் உட்கார்ந்தால், ரோந்து போகும் டிசிப்ளின் சாரிடம் மாட்டிக்கொள்ள நேரலாம் என்பதால், அதை விடுத்து அதற்கு முன் இருந்த பெஞ்சில் அமர்ந்தான்.. அருகில் யாரை உட்காரச் சொல்வது என்று யோசித்துக்கொண்டிருந்தான். எப்படியும், குமாரை அழைக்க முடியாது. அவன் முதல் பெஞ்சில் தான் உட்காருவேன் என்று அடம் பிடிப்பான். யோசித்துக் கொண்டிருக்கும்போதே, அங்கு செழியன் வந்து சேர்ந்தான்.

"நேத்து மேட்சுல உன் தலைவர் வழக்கம் போல சொதப்பிட்டாரு போல..." என்று பேசிக்கொண்டே வந்து அருகில் அமர்ந்தான்.

" ஆமா... ஆனா, இந்த சீரீஸ்ல ஒரு செஞ்சுரி கண்டிப்பா போடுவான் பாரு" என்றான் ஷங்கர்.

"இப்ப அவன் இருக்குற ஃபார்ம்ல செஞ்சுரி எல்லாம் போட முடியாது, சிக்கன் மஞ்சுரி வேணா ட்ரை பண்ணலாம்" என்று நக்கலடித்தான்.

"பொறுத்திருந்து பார்" என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே, பாபுவும் அங்கு வந்து சேர்ந்தான்.

"டெஸ்ட் மாட்சுக்கு வேணும்னா டிராவிட் இருக்கலாம், ஒன் டே மேட்சுக்கு வேஸ்ட்டு டா" என்று அவன் பங்கிற்கு கடுப்பேற்றினான்.

"சரி டா... என்ன பெட்? இந்த சீரீஸ்ல ஒரு செஞ்சுரி கண்டிப்பா அடிக்கிறான்" என்று ஷங்கர் சவால் விடவும், பிரேயர் பெல் அடிக்கவும் சரியாக இருந்தது.

பிரேயருக்குக் கிளம்பும் போது அவசர அவசரமாக வகுப்பின் மற்ற மாணவர்கள் வகுப்பினுள்ளே நுழைந்தார்கள்.

பிரேயர் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, வகுப்பாசிரியராக யார் இருப்பார்கள் என்று ஷங்கரும் பாபுவும் விவாதித்துக் கொண்டே இருந்தார்கள்.

"டேய், நம்ம ஆத்தா கிளாஸ் மிஸ்ஸா இருந்தா எப்படி இருக்கும்?" என்று ஷங்கர் கேட்க,

"அதை எல்லாம் கிளாஸ் டீச்சரா போட மாட்டாங்க டா" என்று அலுத்துக் கொண்டான் பாபு.

"ஆத்தா" என்று அன்போடு அழைக்கப்படுவது வரலாறு பாடம் நடத்தும் ஆசிரியை. வயது ஐம்பதைத் தாண்டி இருக்கும். நாலரை அடி உயரம். அவர், வகுப்பில் உட்கார்ந்த இடத்தை விட்டு நகர மாட்டார் என்பதால், அவரது வகுப்பில் மாணவர்கள் "கபடி" யே ஆடுவார்கள். பிரேயர் முழுவதும் இந்த விவாதத்திலேயே நகர, வகுப்பிற்குத் திரும்பினார்கள்.

குமார், எதிர்பார்த்த படி முதல் பெஞ்ச்சில் தஞ்சம் அடைய, ஷங்கர், பாபு மற்றும் செழியன் ஆகியோர் அவர்கள் இடத்தில் அமர்ந்தனர். அவர்களது பெஞ்ச்சில் இன்னொரு இடம் காலியாக இருக்க, யாரை அழைப்பது என்று ஷங்கர் யோசித்துக் கொண்டிருந்தான். முதல் வகுப்பு எப்பவுமே வகுப்பாசிரியரின் வகுப்பாகத்தான் இருக்கும் என்பதால், யார் வரப்போகிறார்கள் என்று அனைவரும் எதிர்ப்பார்த்தவண்ணம் இருந்தனர்.

யாரோ வகுப்பிற்குள் நுழையும் சத்தம் கேட்டதும், அனைவரும் ஆவலுடன் திரும்பிப் பார்த்த போது, அங்கு கிருஷ்ணா, வியர்வையில் குளித்தபடி வகுப்பிற்குள் நுழைந்தான்.

"வாழ்க்கைல ஒரு நாளாச்சும் சீக்கிரமா வாடா" என்று சொல்லிக்கொண்டே, பாபு அவனுக்கு அருகில் உட்கார இடம் கொடுத்தான். அவர்கள் இருவரும் ஏழாம் வகுப்பு முதல் ஒன்றாகப் படிப்பவர்கள். கிருஷ்ணாவும் ஷங்கரும் இதற்கு முன் ஒரே வகுப்பில் படித்ததில்லை என்றாலும், இருவருக்கும் அறிமுகம் இல்லாமல் இல்லை.

கிருஷ்ணா வந்து அமர்ந்ததும், "நட்டும் மொட்டையும் எங்கடா இருக்கானுங்க?" என்று கேட்டான். அவர்கள் இருவரும், எதிர்வரிசையில் இருந்த பெஞ்சுகளில் அமர்ந்திருந்ததைக் காண்பித்தான் பாபு.

"அவனுங்கள இங்க வர சொல்லு டா, பொழுது போகும்" என்றான்.

ஷங்கருக்கு முன்னால் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்த இருவரின் முதுகில் தட்டினான் ஷங்கர்.

அவர்கள் திரும்பியதும், "நீங்க ரெண்டு பேரும் அங்க போய் உக்காருங்க" என்றான்.
இருவரும் கோரஸாக "எதுக்கு?" என்று புருவத்தை சுருக்கி கேட்டனர்.

"எனக்கு முன்னால உட்கார்ந்திருக்குறவங்களோட மண்டைல அடிக்கடி தட்டி தட்டி விளையாடுவேன்.... பரவாயில்லையா?" என்று நக்கலாக கேட்டான்.

இதற்க்கு மேல் பேசி பலனில்லை என்று தெரிந்து கொண்டு, இருவரும் அமைதியாக எழுந்து செல்ல, நட்டும் மொட்டையும் அங்கு வந்து அமர்ந்தனர்.

ஒரு வழியாக இடப்பிரச்சனை ஓய்ந்தது. சிறிது நேரத்தில் கணக்கு ஆசிரியை வானதி வகுப்பிற்குள் நுழைந்தார்.

“என்னடா, ஓ.பி. அடிக்கிற மாதிரி யாரவது வருவாங்கன்னு பாத்தா, நமக்கு BP ஏத்துற மாதிரி வர்றாங்க.” என்று புலம்பினான் ஷங்கர்.

பாபு, "இதை விடு, zoologyக்கு புதுசா ஒரு மிஸ் வந்திருக்காங்க... சூப்பரா இருக்காங்க... நமக்கு வரணும்னு வேண்டிக்க டா" என்று எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாகக் கிளப்பி விட்டான்....

"என்னடா சொல்லற?" என்று ஷங்கர் கேட்டுக்கொண்டிருக்கும் போதே, கிருஷ்ணா zoology பீரியட் எப்போது என்று டைம் டேபிளைப் பார்த்தான்....

"டேய், அடுத்தது zoology பீரியட் தான் டா..." என்று கிருஷ்ணா கூற, அனைவரது முகங்களிலும் 'பல்பு' எரிந்தது.

தொடரும்...

Monday, May 19, 2008

'சேட்டை'ய ராஜாக்கள் - 3

ஒன்பதாம் வகுப்பு முழுப்பரீட்ச்சை விடுமுறையின் போதே பத்தாம் வகுப்பிற்கான "ஸ்பெஷல்" கிளாஸ் ஆரம்பிப்பதால், விடுமுறை சுருக்கப்பட்டிருந்தது. ஷங்கருக்கு, விடுப்பு நாட்கள் கம்மியானதில் வருத்தம் இருந்தாலும், மீண்டும் நண்பர்களைப் பார்க்கப்போவதாலும், முக்கியமாக "யூனிஃபார்ம்" அணிந்து செல்ல வேண்டியதில்லை என்பதாலும், கொஞ்சம் உற்சாகமாக இருந்தது. ஸ்பெஷல் கிளாஸ் ஆரம்பிக்கும் நாளன்றே ஒன்பதாம் வகுப்பின் ரிசல்ட் என்றும் அறிவித்திருந்தார்கள். என்னதான் ஃபெயிலாவதற்கு துளியும் வாய்ப்பில்லை என்று தெரிந்தாலும், ஷங்கரின் மனதில் ஒரு வித “anxiety” இருந்து கொண்டே இருந்தது. பத்தாம் வகுப்பின் தேர்ச்சி விகிதம் குறைந்து விடக் கூடாது என்பதற்காக, சந்தேகக்கேஸ்களை முன்னெச்சரிக்கையாக ஒன்பதாவதிலேயே நிறுத்தி வைத்து விடுவது அனேக பள்ளிகளின் வழக்கம். இதில், அந்த பள்ளியும் விதிவிலக்கில்லை. சந்தேகக்கேஸ்கள் என்றால், ரொம்ப சுமாராகப் படிக்கும் மாணவர்கள் என்று பொருள்.

ஒன்பதாம் வகுப்பின் நான்கு செக்ஷன்களும் கூடியிருந்தன. காலையிலிருந்து வகுப்பிற்கு எந்த ஆசிரியரும் வரவில்லை என்பதால், மாணவர்களின் கூச்சல் சத்தம் உச்சத்தை அடைந்திருந்தது. ஷங்கரும் அவன் நண்பர்களும் கிரிக்கெட் பற்றியும், அப்போது ரிலீசான புதுப்படங்களைப் பற்றியும் அலசிக் கொண்டிருந்தார்கள். கிரிக்கெட் மைதானத்தில் சச்சின் டெண்டுல்கர், நன்றாக ஆடிக்கொண்டிருக்கும் போது அவுட் ஆனால் திடீரென்று மைதானமே அமைதியில் மூழ்குமே.... அதே போல இங்கும் ஒரு திடீர் அமைதி பிறந்தது. இந்த திடீர் அமைதிகளுக்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்க முடியும். அது, 'மாஸ்டர்' அல்லது 'மேடம் 'மின் வருகையால் தான் இருக்கும். அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தவர்கள் எல்லாம் கிடைத்த இடத்தில் அடித்துப் பிடித்துக் கொண்டு அமர்ந்தார்கள்.

ஷங்கரும் சிவகுருவும் அருகருகில் அமர்ந்திருந்தார்கள். சிவகுரு அந்த பள்ளியில் ஏழாம் வகுப்பில் தான் சேர்ந்தான். ஷங்கருக்கு கணக்கு சுத்தமாக வராது என்பதாலும், சிவகுரு கணக்கில் புலி என்பதாலும், இருவரும் எளிதாக நண்பர்களாயிருந்தார்கள்.

எதிர்ப்பார்த்தது போல கையில் செங்கோலுடன், மேடம் அங்கு வந்தார். தேர்வு முடிவுகள், நோட்டீஸ் போர்டில் ஒட்டப்பட்டிருப்பதாகவும், அதைப் பார்த்து விட்டு தேறியவர்கள் மட்டும் தமிழ் ஸ்டாஃப் ரூமிற்கு அருகில் இருக்கும் வகுப்பறைகளில் கூடியிருக்குமாறும் அறிவித்தார். முடிவுகளைப் பார்க்க அனைவரும் அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடினர்.

சிவகுருவும் ஆவலுடன் விரைந்து போக எத்தனித்தான். "வாடா, போய் பாக்கலாம்" என்று ஷங்கரை அழைத்தான்...

"நம்ம எதுக்கு அடிச்சி புடிச்சிக்கிட்டு ஓடணும்? நாம போறதுக்குள்ள எவனாச்சும் பாத்து சொல்லிருவான்" என்று அலட்சியமாக பதிலளித்தான்.

"ஆமா, நீ எதைப் பத்தி தான் கவலைப்பட்டிருக்க?"

தனக்கு இருக்கும் “anxiety”யை வெளிக்காட்டிக் கொள்ளாமல் "ஏன்? ஃபெயில் ஆயிருவனு பயமா இருக்கா??" என்றான் ஷங்கர்.

சிவகுரு பதில் சொல்வதற்குள், "டேய், நம்ம எல்லாரும் பாஸ் ஆயிட்டோம். நம்ம நரம்படி கார்த்திக்கு மட்டும் 'வித்-ஹெல்டு' னு போட்ருக்காங்க" என்று ஃப்ளாஷ் நியூஸ் சொல்லிவிட்டு வேகமாக நடந்தான் பக்கத்து கிளாஸ் பிரேம்.

முகத்தில் பெரிய புன்னகையோடு சிவகுரு ஷங்கரைப் பார்த்தான்.

ஷங்கர், "சொன்னேன்ல..... வா போகலாம்" என்று சொல்லிவிட்டு வகுப்பறையை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

கையில் ஒரு பேப்பருடன் மேடம் வந்து நின்றார். பத்தாம் வகுப்பிற்கு "செக்ஷன்" பிரித்திருப்பதாகவும், யாரெல்லாம் ஒரு செக்ஷனில் இருக்கிறார்கள் என்றும் பெயர்களை படிக்கத்தொடங்கினார்.

மாணவர்களுக்கு இரெண்டு செக்ஷன்களாகவும், மாணவிகளுக்கு ஒரு செக்ஷனாகவும் பிரிக்கப்பட்டு இருக்கிறது என்று என்னவோ நற்செய்தி அறிவிப்பது போல், முகத்தில் அத்தனை சந்தோஷத்துடன் சிரித்துக் கொண்டே அறிவித்தார். இது எதிர்ப்பார்த்தது தான் என்றாலும், ஷங்கர் எரிச்சலுடன் மெதுவாக "தூ..." என்று துப்பினான். வகுப்பில் அப்போது இருந்த அமைதியால், இந்த சத்தம் ஓரளவிற்கு நன்றாகவே கேட்டது. அருகில் இருந்த சிவகுரு, அவசர அவசரமாக, ஷங்கரின் காலை மிதித்தான். பக்கத்தில் அமர்ந்திருந்த மாணவர்கள் கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டார்கள். நல்ல வேளையாக மேடம் அதை கவனிக்கவில்லை. மாணவர்களுக்காக பிரிக்கப்பட்ட இரெண்டு வகுப்புகளில், நன்றாகப் படிக்கும் மாணவர்கள் 'ஏ' வகுப்பிலும், கொஞ்சம் சுமாராகப் படிக்கும் மாணவர்கள் 'பி' வகுப்பிலும் பிரிக்கப்பட்டு இருந்தார்கள்.

ஷங்கரும் சிவகுருவும் நன்றாக படிக்கக் கூடியவர்கள் என்பதால், 'ஏ' செக்ஷனில் போட்டிருந்தார்கள். இருவரும் ஒரே செக்ஷனில் இருந்தாலும், சிவகுரு அடுத்த வருடம் அவனோடு படிக்கப் போவதில்லை என்பதால், இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து மெல்லிய வருத்தத்தோடு புன்னகைத்துக் கொண்டனர். சிவகுருவின் தந்தைக்கு திருச்சியில் மாற்றலாகியிருப்பதால், அவன் திருச்சியில் பத்தாம் வகுப்பைத் தொடரப்போவதாக ஏற்கெனவே ஷங்கரிடம் சொல்லியிருந்தான்.

அப்போது மணி மூன்று கூட ஆகவில்லை, ஆனாலும், வீட்டிற்கு போகலாம் என்று அறிவித்துவிட்டு, மேடம் சென்று விட்டார். அன்று தான் சிவகுருவுடன் கடைசி நாள் என்பதால், ஷங்கரும் அவனும் நீண்ட நேரம் வகுப்பறையிலேயே பேசிக்கொண்டிருந்தர்கள்.

ஷங்கர், சிவகுருவிற்கு விடை கொடுத்துவிட்டு புதிய கிளாசில் நண்பர்கள் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று பார்க்க ஆரம்பித்தான்.

தொடரும்...

Thursday, May 15, 2008

A day with my demigod - SUPER STAR RAJINIKANTH

7th May, 1992 - This day happened to be the most important and unforgettable day of my life, when I met my Demi-God, Super Star Rajinikanth. I was a 7 year old kid then, when this happened. I was happily spending my vaccation in chennai with my parents. Everybody in my family knew that I am a big time Rajini fan and even in that age I never miss to watch any of his movies in theatres. As for every other fan, it was like a dream for me to meet the legendary Super Star and pose for a photograph with him. Thanks to Sethu mama for having made that happen!!

He is a photographer by profession and though he is not into cinema, fortunately for me, he was in touch with the "Kavithalaya" production house which belongs to the veteran director K.Balachander. Knowing that am a frenzied fan of the super star, he took interest to arrange a meeting with him by taking the help of his friends working in the "Kavithalaya" unit.

Before I pen down the incident, I should explain why I chose to write about it now, after about 16 years. It is needless to explain about the intensity of that incident, which was one of the rarest moment of my lifetime and the impact it had was absolutely unimaginable. As I mentioned earlier, it happened during my 3rd standard vacation. I had about a month for the school to re-open. Unlike other times, I was so keen to go to the school and share my joy and ofcourse show the autograph and the photograph to every one and relish it. That was a typical school kid's attitude! It had an impact not only with me, but also with my family members as well. My parents and my grandmother also accompanied me during the visit. Not just me, they were also pretty thrilled about this and we just kept on talking about this for so many years! Now, just when I get to interact with so many fellow fans, I felt that it is necessary to share that ultimate moment with them.

Back to the main track - It came in as a pleasant shock when I was told to get ready to meet the super star in less than an hour. Hurriedly, I purchased an autograph book and started. My parents and my grandma also accompanied me with my uncle and we were travelling to the place where the shooting was taking place. The shooting was happening somewhere in the outskirts of chennai, in a big bungalow. When we entered the bungalow, we saw the man himself sitting in a sofa alongside with Janagaraj in the break time of the shooting. I was undergoing a mixture of emotions. I was extremely happy and at the same time, I was very nervous - a typical feeling that comes when you are extremely overwhelmed and it was hard to believe the reality! Immediately when he saw my parents coming towards him, he stood up, paired his hands together and said "vanakkam". This is no big surprise as everyone knows the humbleness and simplicity of this great man, but even then my parents were awestruck by this gesture. I hardly spoke anything to him as I was shy and stood near my mom. It was my grandma who introduced me to him as his die-hard fan. He smiled at me and asked my name, when I gave him my autograph book. He wrote my name on it and autographed it and gave it back to me, with a gentle tap on my cheeks. I was so dumb that I didnot even care to smile at Janagaraj or get his autograph as I remained there staring at the super star.



"Shot ready" was the call from the director Suresh Krishna and he wasted no time in moving towards the spot. It was my first experience to watch a cinema shooting and I was anxiously waiting to see it. There was a small room in the front side of that bungalow, out of which a board saying "Mahalakshmi bank" was hung. They shot the scene where Rajini collects money from the bank, ties up in his towel and stands up to stare at the camera, which also happens to be the beginning of the "Vetri Nichayam" song. It didnot take much time to shoot that scene and it was "okay"ed by the director in a couple of takes.

When he came out of that room, my uncle went near him and requested for a photograph with me. I was again tensed and stood beside my mom. Immediately after my uncle requested him, he showed no hesitation and said, "Ya, sure..." and even called me by my name and gently pulled my hand towards him, hugged from behind and elegantly posed for the photograph. It all happened in a flash! After the camera was clicked, he went on for shooting the next scene. It was truly amazing that he remembered my name and showed great respect to my parents despite being such a big super star.



This was the ultimate moment! Could you see the director Suresh Krishna "out of focussed" at the background?

It was like a dream come true and I apologize to the readers since am finding it really tough to narrate my emotions. It not only made my day but also made me more popular in my neighbourhood, school and among relatives. Even today, I am proud to show this photograph to everyone and I would continue to do it until I get to meet him again and take another photograph with him. This time - me hugging him!

Monday, May 12, 2008

'சேட்டை'ய ராஜாக்கள் - 2

இந்த கதையின் முக்கிய கதாபாத்திரங்களான 'சேட்டை'ய ராஜாக்களின் அறிமுகம்....

பெயர் : பாலா

அழைக்கப்படுவது : மொட்டை

பெயர்க்காரணம் : எட்டாம் வகுப்பில் மொட்டை அடித்த போது, 'மொட்டை' என்று அழைக்க ஆரம்பித்தது, முடி வளர்ந்த பின்னரும் தொடர்ந்தது. பள்ளியில் இரெண்டு மூன்று 'பாலா'க்கள் இருந்ததால், 'மொட்டை' என்ற பெயரே நிரந்தரமாகிப் போனது.

தனி அடையாளம் : 'முள்' போன்ற தலைமுடி

பொழுதுபோக்கு : நண்பர்கள் வீட்டிற்கு சென்று சாப்பிடுவது.

நீண்ட நாள் சாதனை : எல்லோரையும் நம்ப வைத்தது.

விரும்புவது : வாக்குறுதிகளை அள்ளி வீசுவது.

வெறுப்பது : அவற்றை நிறைவேற்றுவது.

பஞ்ச் : "நான் சொன்னதையும் செய்ய மாட்டேன், சொல்லாததையும் செய்ய மாட்டேன்"

அரசியல்வாதி ஆகக்கூடிய அனைத்துத் தகுதிகளும் உடையவன். பார்க்க சாதுவாக இருந்து கொண்டு, ஊமைக் குசும்புகள் நிறைய செய்பவன். "6 மணிக்கு அங்கே இருப்பேன்" என்று வாக்கு கொடுத்து விட்டால், நிச்சயமாக 7 மணி வரை அங்கு வரப்போவதில்லை என்று அர்த்தம்.
________________________________________________________

பெயர் : குமார்

தனி அடையாளம் : 'ஸ்டீரியோ' எஃபெக்ட்டில் உரக்க படிப்பது

பொழுதுபோக்கு : படிக்கிறேன் பேர்வழி என்று ஊரைக் கூட்டுவது.

விரும்புவது : வகுப்பில் முதல் ரேங்க்

விரும்பாதது : தினமும் வகுப்பிற்கு வருவது

நீண்ட நாள் சாதனை : பல முறை பெற்றோரை அழைத்து வருமாறு பள்ளியில் உத்தரவிட்ட போதும், கடைசி வரை அழைத்து வராமல் டபாய்த்தது.

பஞ்ச் : "வி வில் மீட்.... வில் மீட்....... மீட்........."
இந்த பஞ்ச் டயலாகிற்கும், இவனுக்கும் சம்மந்தம் இல்லை. இவன் விஜயகாந்தின் ரசிகன் என்பதால் ச்சும்மா இந்த பஞ்ச்....

நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்கே உரிய பொதுவான குணங்களான தவறாமல் வகுப்பிற்கு வருவது, ஊர் சுற்றாமல் வீட்டிலேயே இருப்பது, போன்ற எதுவும் இல்லாத, ஆனாலும் நன்றாகப் படிக்கும் மாணவன். இவனும் ஷங்கரும் எல்.கே.ஜி யிலிருந்து ஒன்றாகப் படித்தவர்கள்.
_________________________________________________________

பெயர் : நட்ராஜ்

அழைக்கப்படுவது : நட்டு

பெயர்க்காரணம் : பெரிதாக ஒன்றும் இல்லை. நட்ராஜின் சுருக்கம் தான் 'நட்டு'

தனி அடையாளம் : எதையோ பரபரப்பாக துரத்துவதைப் போன்ற நடை.

பொழுதுபோக்கு : தமிழ் ஆசிரியரிடம் அடி வாங்குவது

விரும்புவது : கிருஷ்ணாவை ஓட்டுவது.

விரும்பாதது : கிருஷ்ணாவால் ஓட்டப்படுவது.

நீண்ட நாள் சாதனை : தொலையாமல் வீடு போய் சேர்ந்தது.

ஞாயிற்றுக்கிழமையை திங்கட்கிழமை என்று நினைத்துக் கொண்டு பள்ளிக்கு வருவான். திங்கட்கிழமையன்று விடுமுறை என்று நினைத்துக் கொண்டு வீட்டிலேயே இருந்து விடுவான். அப்படியே தப்பித் தவறி சரியாக பள்ளிக்கு வந்துவிட்டாலும், காலையில் சைக்கிளில் வந்து விட்டு, மாலை வீடு திரும்பும் போது மறதியில் ஸ்கூல் பஸ்ஸில் ஏறி விடுவான். இவனுக்கு பஞ்ச் டயலாக்கெல்லாம் ஒன்றும் இல்லை. கடவுளே இவனை மறந்து போய் படைத்து விட்டார்.
_________________________________________________________

பெயர் : பாபு

அழைக்கப்படுவது : டமக்கு டப்பான்

பெயர்க்காரணம் : அவன் நடைக்கு ஏற்ற பேக்கிரவுண்டு மியூசிக் என்பதால் இந்த பெயர்.

தனி அடையாளம் : வகுப்பில் நோட்ஸ் கலெக்ட் செய்வது, ஆசிரியருக்கு சாக் பீஸ் எடுத்துக் கொண்டு வருவது போன்ற பொறுப்புகளை அள்ளி சுமப்பது.

பொழுதுபோக்கு : ஆசிரியர்களிடம் வில்லங்கமான சந்தேகங்களைக் கேட்பது.

விரும்புவது : சாப்பிடுவது மற்றும் தூங்குவது.

விரும்பாதது : சாப்பிடும் போது பங்கு கேட்பது, தூங்கும் போது எழுப்புவது.

நீண்ட நாள் சாதனை : எட்டாம் வகுப்பில் வளர்ந்த மீசையை இன்று வரை சவரம் செய்யாமல் வைத்திருப்பது.

பஞ்ச்: "உண்க வயிறார உண்க உண்டபின்
உருளுக அதற்கு தக"

வகுப்பில், ஆசிரியர்கள் கூறும் வேலையை பொறுப்புடன் செய்வதால், இவன் ஆசிரியர்களின் செல்லம். என்னதான் உண்மையில் இவன் கேடி என்றாலும், ஆசிரியர்களுக்கு இவனைப்பற்றி இருக்கும் நல்ல அபிப்பிராயத்தால், மாணவர்களின் கோரிக்கைகளை மேலிடத்திற்கு எடுத்துச் செல்லும் வகுப்பின் எம்.எல்.ஏ இவன் தான்.
_________________________________________________________

பெயர் : கிருஷ்ணா

அழைக்கப்படுவது : சீனா தானா

பெயர்க்காரணம் : கண்ணாடியை கழற்றி விட்டு, கொஞ்சம் கண்ணை சுழற்றிப் பார்த்தால் 'சீனா'க்காரர் மாதிரி இருப்பான் என்பதால் இந்த பெயர்.

தனி அடையாளம் : மூக்குக்கண்ணாடி. பாக்கியராஜ் மாதிரி அடிக்கடி அதை தூக்கி விட்டுக் கொள்ளும் மேனரிசம்.

பொழுதுபோக்கு : 'நட்'டை வெறுப்பேற்றுவது.

விரும்புவது : வெளியில் 'இமேஜ்' மெயின்டைன் பண்ணுவது.

விரும்பாதது : கஷ்டப்பட்டு மெயின்டைன் பண்ணும் 'இமேஜ்', 'டேமேஜ்' ஆவது.

நீண்ட நாள் சாதனை : ஒரு நாளும் பள்ளிக்கு சரியான நேரத்தில் வந்ததில்லை.

பஞ்ச் : "நான் பாக்க மட்டும் தான் டீசன்ட்டு, வாயைத் திறந்தா, படு லோக்கலு"

இடியே விழுந்தாலும், சட்டை மடிப்போ அல்லது தலை முடியோ கலைந்து விடாமல் பார்த்துக் கொள்வான். அனைவரும் ரஜினி வெறியர்களாக இருக்க, இவன் மட்டும் கமல் ரசிகன். டீசென்சி, இமேஜ் மெயின்டைன் பண்ணுவதெல்லாம் வெளியில் தான். கூட்டத்தோடு சேர்ந்து விட்டால், கும்மாளம் தான்.
_________________________________________________________

பெயர் : ஷங்கர்

தனி அடையாளம் : நாக்கில் நர்த்தனம் ஆடும் நக்கல்.

பொழுதுபோக்கு : ஓட்டுவது (வண்டிகளை அல்ல)

விரும்புவது : கணக்கு பண்ணுவது (ஃபிகர்களை அல்ல)

விரும்பாதது : கணக்கு போடுவது

நீண்ட நாள் சாதனை : ‘நல்லா படிக்கிற பையன்’ என்று ஆசிரியர்களை நம்ப வைத்தது.

பஞ்ச் : அளவுக்கு அதிகமா scene போடுற பொண்ணுங்களையும், ஜொள்ளு விடுற பசங்களையும் நான் ஓட்டாம இருந்ததா சரித்திரமே இல்ல...

ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை ஆசிரியர்களின் செல்லமாகவும், பத்தாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களின் வில்லனாகவும் இருந்தவன். இவன் ஆசிரியர்களைப் போல மிமிக்ரி செய்வது, மாணவர்களிடையே மிகவும் பிரபலம். வகுப்பில் அடிக்கடி ஏற்ப்படும் கூச்சல், குழப்பங்களுக்கு முக்கியக் காரணமாக இருப்பவன். இந்த குரூப்பின் ஆர்கனைசர். இவர்களுக்குள் பஞ்சாயத்து, நல்லது, கெட்டது அனைத்திற்கும் இவனே பொறுப்பு.

இவர்களுக்கெல்லாம் இருக்கும் பொதுவான விஷயம் - கிரிக்கெட். இவர்களின் கிரிக்கெட் அனுபவங்களை வைத்து சென்னை-28 போல ஒரு படத்தையே எடுக்கலாம். அடுத்தது - ஊர் சுற்றுவது. கும்பகோணத்தில் ஸ்பென்ஸர் பிளாசா போன்றோ, மெரீனா 'பீச்'சைப் போன்றோ "ஹேங்-அவுட்" இல்லை என்றாலும், இவர்கள் தாறு மாறாக ஊர் சுற்றித் திரிவார்கள்.
அடுத்த பதிவில், இவர்களெல்லாம் ஒன்றாய் சேர்ந்த கதை...

Monday, May 05, 2008

'சேட்டை'ய ராஜாக்கள் - 1


ஒரு வழியாக, தலைப்பு முடிவாகிவிட்டது. 'சந்திரமுகி'யை கலக்கியது 'வேட்டைய'ராஜா, எங்கள் பள்ளியை கலக்கியது 'சேட்டைய' ராஜாக்கள். இது எப்படி இருக்கு??? ச்சும்மா ஒரு பஞ்ச் டயலாக் முயற்சி செய்து பார்த்தேன். சொதப்பி விட்டது... ஹி ஹி

பி.கு. இக்கதையில் வரும் கேரக்டர்களின் நிஜப் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. இத்தொடரின் மூலம் யாரையும் புண்படுத்துவது எங்கள் நோக்கம் அல்ல.
நல்லதை மட்டும் எடுத்துக்கங்க, கெட்டதை விட்டுடுங்க...

கிறிஸ்து ராஜா மேல்நிலைப் பள்ளி, கும்பகோணம் - இங்கு தான் நாங்கள் படித்தோம் என்று சொல்வதை விட,இது தான் நாங்கள் துள்ளித் திரிந்த இடம் என்று சொல்லலாம். எங்கள் ஊரிலேயே கண்டிப்பான பள்ளி என்று பெயர் பெற்றிருந்தது. கண்டிப்பான விதிமுறைகள் நிறைய உண்டு.
எங்கள் பள்ளியை 'ஜெயில்' என்று சக மாணவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறோம். எங்களைப் பொறுத்தவரையும் அப்படித்தான். ஆனால், அது விதிமுறைகளை மதித்தவர்களுக்கு. எங்களுக்கு அல்ல.

சாலையின் இரு புறமும் அமைந்திருக்கும் கட்டிடங்களில் ஒன்றாம் வகுப்பு முதல், பன்னிரெண்டாம் வகுப்பு வரை இருக்கும் வகுப்புகளும், அதே சாலையில் கொஞ்சம் தள்ளியிருக்கும் மற்றுமொரு சிறிய கட்டிடத்தில் எல்.கே.ஜி, யு.கே.ஜி போன்ற வகுப்புகளும் நடைபெறும்.

எங்கள் பள்ளியில் வினோதமான விஷயங்கள் நிறைய உண்டு. கோ-எஜுகேஷன் என்று சொல்லுவார்கள். ஆனால் மாணவர்களையும் மாணவிகளையும் தனித்தனி வகுப்புகளில் அமர்த்துவார்கள். இவ்வளவு ஏன்? காலை பிரேயர் கூட தனித்தனியாகத் தான் நடக்கும். எங்கள் ஊர் பள்ளிகளிலேயே எங்கள் பள்ளியில் தான் “ஸ்போக்கன் இங்கிலீஷ்” உண்டு என்று மார்தட்டுவார்கள். ஆனால், அந்த இங்கிலீஷைக் கேட்டால், காதில் இரத்தமே வந்து விடும். இதில் கொடுமை என்னவென்றால், அங்கு இருந்த ஆசிரியர்களில் முக்கால் வாசி பேருக்கு ஆங்கிலம் பேசவே வராது. உதாரணத்துக்கு, "நாளைக்கு வருவியா?" என்று கேட்பதற்கு, "டுமாரோ யூ கம்மிங்கா?" என்று கேட்டு நம்மை வாயடைக்க வைத்துவிடுவார்கள். சிலசமயங்களில் ஆயா கூட, அந்த ஓட்டை ஆங்கிலத்தில் பேசி "ஆப்பு" அடிப்பார். முட்டிக்கொள்வதற்கு அருகில் ஏதேனும் சுவர் இருக்கிறதா என்று பார்க்கத் தோன்றும்.

இந்த ஓட்டை ஆங்கிலத்தை வைத்துக் கொண்டு இல்லாத படம் காட்டுவார்கள். பள்ளிக்குள், தமிழ் வகுப்பைத் தவிர மாற்ற வகுப்புகளிலும், பள்ளி வளாகத்திலும் தமிழில் பேசக்கூடாது. மீறி யாராவது பேசினால், உடனடி தண்டனை. அந்தக் கொடுமையான ஆங்கிலத்தைக் கேட்பதற்கு அந்த தண்டனையே மேலாகயிருக்கும். அதிகமாக மீறப்படும் விதிமுறையும் இதுவாகத்தான் இருக்கும். ஆசிரியர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்தக் கடுமையான(?) விதிமுறையினால், நாங்கள் அனைவரும் எப்போதுமே 'பீட்டர்' விட்டுக்கொண்டு திரிவோம் என்று நீங்கள் நினைத்தால், அது தவறு.

காலை 9.15 க்கு பிரேயர் தொடங்கும். அனைவரும் கட்டாயமாகக் கலந்து கொள்ள வேண்டும். அரை மணி நேரம் நடக்கும் பிரேயரில், முதல் கால் மணி நேரம் இயேசு கிறிஸ்துவின் பாடல்கள்(மட்டுமே) பாடப்படும். அடுத்த கால் மணி நேரம், பைபிள் வாசிக்க வேண்டும். லேட்டாக வருபவர்களுக்குத் தனியாக பிரேயர் நடக்கும். அதைத் தனியாக நடத்துபவர் தான் எங்கள் பள்ளியின் 'அஞ்சா நெஞ்சன்', 'பீட்டர்' நாயகன், திரு. ஒழுக்க வாத்தியார் அவர்கள். அதாவது 'டிசிப்ளின் சார்'. இப்படி செல்லமாக(?) இவர் அழைக்கப் பட்டாலும், இவரது உண்மையான பெயர் பல பேருக்குத் தெரியாது. எனக்கும் தான். இவரைப் பற்றி, பின்னால் பார்க்கலாம்.

யாரும் ‘இல்லை’ என்று சொல்லிவிடக் கூடாது என்பதற்க்காக, "லைப்ரரி" க்கென்று ஒரு சிறிய அறையை ஒதுக்கியிருப்பர்கள். வாங்கிய புத்தகத்தை ஒரு வாரத்தில் திருப்பிக் கொடுத்து விட வேண்டும். இல்லையென்றால், ஆயா மூலம் வகுப்பிற்கு தூது விடப்படும். சொற்ப நூல்களுடன் இயங்கிய அந்த "so called" லைப்ரரியை என்னைப் போன்ற முன்னாள் மாணவர்கள் மறந்தே போயிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

எங்கள் பள்ளியின் விளையாட்டு மைதானம், ஒரு தீவு போல காட்சி அளிக்கும். சுற்றிலும் கீற்றுக் கொட்டகையில் வகுப்புகள். நடுவில் மைதானம். அங்கு விளையாடப்படும் அதிகபட்ச விளையாட்டுக்கள் - பாட்மின்டன் மற்றும் கிரிக்கெட். எப்போதாவது நடக்கும் 'ஸ்போர்ட்ஸ் டே' அன்று ஓட்டப் பந்தயம், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல் போன்றவை போக, பாட்மின்டன் மட்டும் நடக்கும். கிரிக்கெட் போட்டிகள் பள்ளியில் நடந்ததே இல்லை. ஆனால், நாங்கள் திருட்டுத்தனமாக அங்கு கிரிக்கெட் விளையாடுவோம்.

இந்த தொடர் முழுக்க, பள்ளியின் பல கேரக்டர்கள் உலா வருவார்கள். அவர்களில் முக்கியமானவர்களைப் பற்றிய அறிமுகம் இங்கே...

முதலில் - மேடம். எங்கள் பள்ளியின் முதல்வர். எப்போதுமே கையில் சாவிக் கொத்தை மாட்டிக் கொண்டு வலம் வருவார். தேவைப்பட்டால் மட்டும் செங்கோலைக்(பிரம்பு) கையில் எடுப்பார். இவரைப் பார்த்தால், மாணவர்கள் மட்டும் அல்ல, ஆசிரியர்களும் 'மம்மி'யைப் பார்த்த எம்.எல்.ஏ வைப் போல பம்முவார்கள்.

மாஸ்டர் - 'ஜான்' பிள்ளையானாலும் 'ஆண்' பிள்ளை என்னும் பழமொழிக்கு இவரை விட ஒரு சிறந்த உதாரணம் இருக்க முடியாது. உயரம் கம்மியாக இருந்தாலும், மனதால் உயர்ந்தவர். மின்னலடிக்கும் வெள்ளை நிற சட்டையையும், லூசாகத் தைத்த பேன்ட்டையும் போட்டுக்கொண்டு கையில் செங்கோலுடன் வலம் வருவார். கிட்டத்தட்ட "டி.ஆர்" மாதிரி தாடி வைத்திருப்பார். அதை அடிக்கடி, தடவி விட்டுக்கொண்டிருப்பது இவருடைய மேனரிசம். தாடி வைப்பதே அதற்காகத் தானே. நான் பள்ளியில் படித்த பன்னிரெண்டு ஆண்டுகளில், இவர் எத்தனை முறை சிரித்திருப்பார் என்பதை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

இவர்களுக்கு அடுத்தபடியாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவர் - லீலா மிஸ்.
எலிமெண்டரி ஸ்கூலின் முதல்வர். ஆங்கில ஆசிரியரும் கூட. மாணவர்களிடம் ரொம்பவும் கண்டிப்பாக இல்லாமல் அதே சமயம் ரொம்பவும் ஃபிரீயாகவும் விடாமல் 'balanced' ஆக இருக்கும் கேரக்டர்.

லாஸ்ட், பட் நாட் தி லீஸ்ட் - எங்கள் பள்ளியின் 'டிசிப்ளின்' மாஸ்டர் - இவர், மிலிட்டரி ஹோட்டலில் மாஸ்டராக, ச்சீ... மன்னிக்கவும்...மிலிட்டரியில் ஆபீசராக இருந்து ஓய்வு பெற்றவர். எப்போதுமே மிடுக்கான உடையில் காணப்படுவார். கையில் செங்கோல் இல்லாமல் இவரைப் பார்க்கவே முடியாது. இவரது முக்கியமான வேலை, எங்களுக்கு ஒழுக்கத்தை கற்றுக் கொடுப்பது. பொழுதுபோக்கு - வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, ரவுண்ட்ஸ் வந்து, ஆசிரியருக்கு டிமிக்கி குடுத்து விட்டு வகுப்பறையில் சேட்டை செய்யும் மாணவர்களை அமுக்குவது. இவர் உடம்பில் எங்கு அடிப்பார் என்று எவராலும் கூற முடியாது. பிரம்பை சாட்டையாகக் கருதி, கண் மண் தெரியாமல் அடிப்பார்....

இவர்கள் தான் பள்ளியின் பெரிய தலைகள். பள்ளியைப்பற்றிய மற்ற தகவல்கள் எல்லாம், இடைச்செருகல்களாக அவ்வப்போது வரும். 'சேட்டைய' ராஜாக்களின் அறிமுகம் அடுத்த பதிவில்....