என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறினான் ஷங்கர்.
"அவன் கோபித்துக்கொண்டு எங்கேயாவது சென்றிருப்பானோ?"
"அப்படி எல்லாம் இருக்க வாய்ப்பில்லை.... இதுக்கெல்லாமா எங்கேயாவது போவான்?"
அவனே கேள்வி கேட்டுக்கொண்டு, அவனே பதிலும் சொல்லிக்கொண்டான்.
ஒருவேளை, தான் முட்டாள்தனமாக பயப்படுகிறோமோ என்று கூடத் தோன்றியது ஷங்கருக்கு. வண்டியை எடுத்துக்கொண்டு வெளியே கிளம்பினான். எங்கு சென்று தேடுவது என்று தெரியவில்லை. குமாருக்கு, இவர்களை விட்டால் பெரிதாக நண்பர்கள் என்று சொல்லிக்கொள்ளும்படி யாரும் இல்லை. மனம் போன போக்கில் வண்டியை செலுத்தினான் ஷங்கர். வண்டி, நேராக நட்டு வீட்டு வாசலில் நின்றது.
"என்னடா, அதுக்குள்ள....?"
"குமாரைக் காணும் டா...... இங்க வந்தானா??"
"என்னடா உளர்ற? அவன் இங்க வரல.... அவன் எப்போவோ கிளம்பிட்டானே?"
"அவன் கிளம்பின நேரத்துக்கு, இந்நேரம் அவங்க வீட்டுக்கு போய் சேர்ந்து ஒரு மணி நேரம் ஆகியிருக்கணும்"
நட்டு பதிலேதும் பேசாமல் ஷங்கரையே பார்த்தான்.
"என் கூட வா..."
இருவரும் வண்டியில் நால் ரோடு பக்கம் வந்தனர். நால் ரோடு வழியாக, இரயில் நிலையம் வந்து, அப்படியே மஹாமஹக்குளத்தை அடைந்தனர்.
"எங்கேன்னு போய் தேடுறது?" என்றான் நட்டு.
"பாபு அவனை ரொம்ப திட்டிட்டானோ?" என்றான் ஷங்கர்.
"அதை இவ்வளவு சீரியஸா எடுத்துப்பான்னு நான் நினைக்கவே இல்ல டா..." என்றான் நட்டு.
"சரி, ஒரு முடிவுக்கு வரலாம். நேரா குமார் வீட்டுக்கே போறேன். அவன் அங்கே இருக்கானான்னு பாக்கலாம். அப்படி இல்லைன்னா, அவங்க அம்மா அப்பாகிட்ட சொல்லிடறது தான் நல்லது" என்றான் ஷங்கர்.
அதை ஆமோதித்தான் நட்டு. மஹாமஹக்குளத்தைக் கடந்து சென்றுகொண்டிருந்த போது, 'விடிவெள்ளி' பள்ளியின் அருகே கூட்டமாக இருந்தது.
"இங்கே என்னடா இவ்வளவு கூட்டம்?" என்று வண்டியை நிறுத்தினான் ஷங்கர்.
வழக்கம்போல, வட்டமாக நின்று எதையோ வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருந்தது கூட்டம்.அங்கிருந்த ரிக்க்ஷாக்கரர்கள், கூட்டத்தை விலக்கி, வண்டிகளை அனுமதித்துக் கொண்டிருந்தனர். கூட்டத்தைக் கடந்து ஷங்கர் வண்டியை ஓட்டிக்கொண்டு சென்றபோது, அவசரமாக நிறுத்தினான் நட்டு.
"டேய்.... குமார் வண்டி மாதிரி இருக்கு" என்று கூறியவன், வண்டியிலிருந்து குதித்தான். ஷங்கரும் அதிர்ச்சியாகி, உடனே வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு, நட்டின் பதிலுக்காக படபடப்புடன் காத்திருந்தான். கூட்டத்தை விலக்கி உள்ளே சென்ற நட்டு, குமார் காலில் இரத்தம் சொட்ட அமர்ந்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து நின்றான். ஒரு நிமிடத்தில் சுயநினைவிற்கு வந்தவனாய், ஓடிச்சென்று ஷங்கரை அவசரமாக சைகை காட்டி அழைத்தான். ஷங்கரும் அங்கு ஓடி வர, குமார் இவர்களைப் பார்த்தவுடன், உடனே எழ முயற்சி செய்து, பலனில்லாமல் மீண்டும் அமர்ந்தான். அவனால் காலை நகர்த்த முடியவில்லை.
கீழே விழுந்து கிடந்த குமாரின் வண்டியை எடுத்தான் ஷங்கர். குமாரின் வண்டிக்குக் கீழே ஒரு சைக்கிள் உருக்குலைந்து கிடந்தது.
"சைக்கிள்காரன் எங்க?" குமாரிடம் கேட்டான் ஷங்கர்.
"ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டுப் போயிருக்காங்க..."
"என்னடா ஆச்சு??"
"தண்ணி அடிச்சிட்டு குறுக்க வந்துட்டான். பிரேக் போட்டும் நிறுத்த முடியல" என்றான் குமார்.
"உனக்கு வேற எங்க அடிபட்டிருக்கு?" குமாரிடம் கேட்கும்போதே, கூட்டத்திலிருந்து ஒரு குரல் கேட்டது.
"தம்பி.... நீங்க இந்த பையனோட பிரெண்டா? இந்த பையனோட போன் நம்பர் சொல்லுங்க.... அவங்க அப்பாவை வர சொல்லணும். இவரு இடிச்சதுல சைக்கிள்காரருக்கு தலையில பயங்கர அடி. ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டுப்போயிருக்கங்க"
"நானே போன் பண்ணறேன். அதுக்கு முன்னால, இவனையும் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டிப் போகணும்"
"இவருக்கு பெருசா அடி ஒண்ணும் இல்லையே... அவங்க அப்பா வந்து சைக்கிளுக்கும் ஆஸ்பத்திரி செலவுக்கும் காசு குடுக்கட்டும்"
"அடிபட்டவருக்கு நீங்க யாரு?"
"அவரும் எங்களை மாதிரி ரிக்க்ஷாக்காரர் தான். நீ முதல்ல அவங்க அப்பாவை கூப்பிடு. போன் நம்பர் சொல்லு" என்று கிட்டத்தட்ட அதட்டினார்.
அப்போதுதான் அடிபட்டது ஒரு ரிக்க்ஷாக்காரர் என்று புரிந்தது ஷங்கருக்கு. பொதுவாகவே அங்கே இருக்கும் ரிக்க்ஷாக்காரர்கள் சரியான ரௌடிகள் என்று அனைவருக்கும் தெரியும்.
"பணத்துக்கு நான் பொறுப்பு. நான் இங்கேயே இருக்கேன்... அவன் ஆஸ்பத்திரிக்குப் போகணும்" என்று சொல்லிவிட்டு, நட்டை அழைத்தான் ஷங்கர்.
"நீ இவனை அழைச்சிக்கிட்டு ஆஸ்பத்திரிக்குப் போ. இதையெல்லாம் நான் பாத்துக்குறேன்" என்று ஒரு ஆட்டோவைப் பிடித்து, நட்டையும் குமாரையும் அதில் அனுப்பி வைத்தான் ஷங்கர். குமாரின் வண்டிச் சாவியை யாரோ வைத்திருந்தார்கள். ஷங்கர் அருகிலிருக்கும் கடைக்குச்சென்று, குமாரின் அப்பாவிடம் நடந்ததைக் கூறினான். அடுத்த பத்தாவது நிமிடத்தில் அவரும் அவரிடம் வேலை பார்க்கும் ஒருவரும் அந்த இடத்திற்கு வந்தனர். அங்கே பஞ்சாயத்து பண்ணிவிட்டு, நேராக ஆஸ்பத்திரிக்குச்சென்றனர். குமாருக்கு காலில் அடிபட்டிருந்தாலும், நல்லவேளையாக எலும்பு முறிவு எதுவும் இல்லை என்று டாக்டர் கூறினார். சைக்கிளில் வந்தவனை மருத்துவமனையில் நேரில் பார்த்து, 2000 ரூபாய் செலவிற்காக கொடுத்துவிட்டு வீடு திரும்பினர்.
குமார் வீடு.....
இந்தக் களேபரம் எல்லாம் ஓரளவிற்கு ஓய்ந்தது. காலில் கட்டு போட்டிருந்தான் குமார். நட்டும் ஷங்கரும் அருகில் அமர்ந்திருந்தனர்.
"ஒரு கொலை கேஸ் ஆகியிருக்க வேண்டியது, சைக்கிள்காரன் செத்துருப்பான்..." என்றான் ஷங்கர்.
"சைக்கிள்காரன் இல்ல.... ரிக்க்ஷாக்காரன்" என்றான் நட்டு.
"சரி, சைக்கிள்ல வந்த ரிக்க்ஷாக்காரன். போதுமா? " என்றான் ஷங்கர்.
"அவ்வளவு நேரம் எங்கே டா போயிருந்த? உன்னை எங்கேயெல்லாம் தேடுறது? "
"'காந்தி பார்க்'குல தனியா உட்கார்ந்திருந்தேன்"
"அப்படி என்னடா கோபம்? மேட்ச் தோத்துட்டோமேங்குற எரிச்சல்ல அவன் ஏதோ சொல்லிட்டான்..."
"..........."
"அந்த சைக்கிள்காரன் எப்படி வந்து விழுந்தான்?"
"நான் ரொம்ப வேகமா வந்தது உண்மை தான். ஆனா, அவன் தண்ணியடிச்சிட்டு போதையில, நேரா வந்து என் வண்டியில மோதிட்டான். பிரேக் போட்டும் தடுக்க முடியல. நல்லவேளை, அது நடந்த அஞ்சு நிமிசத்துக்குள்ள நீங்க வந்துட்டீங்க"
குமாருக்கு கால் வலி அதிகமாக இருந்தது. ஷங்கரை பிடித்துக் கொண்டேதான் நடந்தான். ரொம்பவும் சிரமப்பட்டு நொண்டியடித்தான். நட்டும் ஷங்கரும் கைத்தாங்கலாக குமாரை அழைத்து வந்து ஹாலில் அமர்த்தினர். இருவரும் விடைபெற்றுக்கொண்டு கிளம்பிய போது, குமார் வீட்டில் வேலை செய்பவர் எதிரில் வந்தார்.
"அந்த குடிகாரன் நம்மகிட்ட ரூபாய் வாங்கிக்கிட்டு, போலீஸ் கம்ப்ளைன்ட் குடுக்கப்போறானாம்" என்ற தகவலை சொன்னார்.
குமாரின் அப்பாவிற்கு கவலை அதிகமானது. குமாரிடம் ஓட்டுனர் உரிமம் வேறு கிடையாது. சட்டப்படி, விபத்து நடந்து 24 மணிநேரத்திற்குள் போலீசில் புகார் கொடுக்கலாம். அப்படிப்புகார் கொடுத்துவிட்டால், என்ன ஏது என்று விசாரிக்கக்கூட, போலீஸ் குமாரை போலீஸ் ஸ்டேஷனிற்கு அழைத்து செல்ல நேரிடலாம். இதெல்லாம் அவர் கண்முன்னே ஒரு நிமிடம் வந்து போனது. பதற்றத்துடன், "இப்போ என்ன பண்ணறது?" என்று கேட்டார்.
"இன்னும் நிறைய காசு எதிர்பாக்குறான் போல இருக்கு. அது மட்டுமில்ல... அவனுக்கு ரொம்ப அடிபட்டிருக்கு. அவன் கூட்டாளிங்க எல்லாம் ரொம்ப கோபமா இருக்காங்க" என்றார் அவர்.
"கேட்குற காசை குடுத்துத்தொலைக்க வேண்டியது தான்" என்றார் குமாரின் அப்பா.
"மொத்த மருத்துவ செலவுகளையெல்லாம் ஏத்துக்கிட்டாலும், அவனுக்கு தனியா பத்தாயிரம் வேணுமாம்" என்றார் அவர்.
"அவன் போலீஸ் கம்ப்ளைன்ட் குடுக்குறதுக்குள்ள நாம ஏதாச்சும் பண்ணனும்"
இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த ஷங்கருக்கு ஒரு யோசனை தோன்றியது.
"அவன் கம்ப்ளைன்ட் பண்ணட்டும், ஆனா போலீஸ் அவன் கொடுக்குற கம்ப்ளைண்ட்டை வாங்கிக்கக்கூடாது. அப்படிப்பண்ணிட்டா என்ன?" என்று கேட்டான்.
"எப்படி?" என்பது போல் அனைவரும் அவனைப் பார்த்தனர்.
"இந்த ஏரியா கவுன்சிலரை எங்க அப்பாவுக்கு நல்லாத்தெரியும். அவர்கிட்ட சொல்லி, போலீஸ்கிட்ட பேசசொல்லலாம்" என்றான்
இந்த யோசனை அனைவருக்கும் பிடித்திருந்தது. ஆனால், அது உடனே நடக்க வேண்டுமே! கவுன்சிலரைப் பிடித்து, அவர் போலீசிடம் சொல்லி..... இதெல்லாம் நடப்பதற்குள் பதிவாகிவிட்டால்?? விசாரிப்பதற்கே குமாரை போலீஸ் ஸ்டேஷனிற்கு அழைத்துக்கொண்டு போய்விடுவார்களே....
"அதுவரைக்கும்?"
"குமார் தலைமறைவா இருக்கிறது தான் நல்லது" என்றான் ஷங்கர்.
தொடரும்....
3 comments:
hey gowri ipadi suspense vechu thodarumnu potutiye....hmmm
story viruvirupaathaan poguthu.....
un idea ellarukume thevai paduthu....andha chinna mandaikulla ivlo ariunaa aachiriyaamaana vishayam thaan...
vizlayaattu mudindhu, vibathudan thudangi viruviruppaga pogirathu.. ;)
nenga sonnadhu yosanaiya, allathu sodhanaya yendru adutta eppisodil theriyum... :P
Sir vara vara Rajesh kumar novel maadhiri viruvirupa podhu sir..
Settaiya Rajakal- Vettaiya Rajakal
Post a Comment