'சேட்டை'ய ராஜாக்கள் - 22
மற்ற பரீட்ச்சைகளை விட, கணக்குப் பரீட்ச்சைக்கு ஷங்கர் அதிக முக்கியத்துவம் கொடுப்பான். அதற்குக் காரணம், அவனுக்கும் கணக்குப்பாடத்திற்கும் ஏழாம் பொருத்தம். கணக்கு என்றாலே எகிறி குதித்து எஸ்கேப் ஆகும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களுள் ஷங்கரும் ஒருவன். ஆரம்பத்திலிருந்தே கணக்கில் தடுமாறும் ஷங்கருக்கு, பத்தாம் வகுப்பில் முதல்தாள், இரெண்டாம் தாள் என்று இரெண்டு தேர்வுகள் வேறு இருந்தன. மொழித்தேர்வுகள் எல்லாம் முடிந்து, கணக்குப் பரீட்ச்சை வந்தே விட்டது!
அதிகாலையில் எழுந்து, அசுர வேகத்தில் தயாராகி, பள்ளிக்குக் கிளம்பிச்சென்றான் ஷங்கர். வகுப்பறை காலியாக இருந்தது. அப்போது வகுப்பறைக்குள் நுழைந்த கிருஷ்ணா, தனக்கு முன்னால் ஷங்கர் வந்து அமர்ந்திருப்பதைப் பார்த்து திடுக்கிட்டான்.
"என்னடா இது, எனக்கு முன்னாலேயே வந்துட்ட? அன்னைக்கு நான் வரசொன்னப்போ ரொம்ப படம் போட்ட?"
"இன்னைக்கு கணக்குப் பரீட்ச்சை....."
"ஓஹோ.... அதான் நெத்தியில பட்டை எல்லாம் பட்டையைக் கிளப்புதோ?"
"பேசுங்கடா, பேசுங்க..... இந்த கணக்குப் பரீட்ச்சை மட்டும் முடியட்டும்"
நேரம் செல்ல செல்ல, அனைவரும் வரத்துவங்கினர். மண்டியிட்டு பிரார்த்தனை புரிதல் எல்லாம் முடிந்த பிறகு, அனைவரும் அல்-அமீன் பள்ளிக்கு கிளம்பிச்சென்றனர். இத்தனை தேர்வுகளின் பொது ஏற்படாத பயம் கலந்த எதிர்பார்ப்பு உண்டானது ஷங்கருக்கு. கணக்குப் பரீட்ச்சைகளை நல்லபடியாக எழுதிவிட்டால், பொதுத்தேர்வே முடிந்த மாதிரி. வினாத்தாள் எளிதாக இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டான்.
தேர்வு ஆரம்பித்தது. வினாத்தாள் தன் கைக்கு வரும் வரை படபடப்பாக இருந்தது ஷங்கருக்கு. சற்று நேரத்தில், தேர்வு கண்காளிப்பாளர் வந்து, வினாத்தாளை தன் மேஜை மீது வைத்துவிட்டுச் சென்றார். பரபரப்புடன் அதை எடுத்த ஷங்கர், அவசரமாக அவன் கண்களை அதன் மீது ஓடவிட்டான். நான்கு பக்கங்களாக இருந்த வினாத்தாளில், உடனே கடைசி பக்கத்திற்குத் தாவினான்.
10 மதிப்பெண்கள் அளிக்கும் கேள்வியைப் படித்ததும், தனக்குத் தெரிந்த கேள்வி வந்திருப்பதைப் பார்த்து, நிம்மதியடைந்தான். ஆனால், அந்த நிம்மதி வெகு நேரம் நீடிக்கவில்லை. அடுத்தது, 5 மதிப்பெண்கள் வழங்கும் கேள்விகளைப் படித்ததும், தலை சுற்றியது. மொத்தம் ஐந்து கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. அவற்றுள் ஏதேனும் மூன்று கேள்விகளுக்கு விடையளித்தால் போதும் என்றிருந்தாலும், ஒரு கேள்விக்கு கூட விடை தெரியவில்லை. மற்ற கேள்விகளை பார்க்ககூடத்துணிவில்லாமல், கவலையில் ஆழ்ந்தான்.
ஒருவேளை, மற்றவர்களுக்கு தெரிந்திருக்கிறதோ என்று அனைவரின் முகத்தையும் பார்த்தான் ஷங்கர். பாபு, கிருஷ்ணா, பாலா, அனைவரும் தொங்கிய முகத்துடனேயே காணப்பட்டனர். நட்டு ஷங்கரைப் பார்த்து "போச்சு" என்பதுபோல தலையாட்டினான். சரி, யாருக்குமே தெரியவில்லை என்பதை உறுதிசெய்துகொண்ட பிறகு, ஒரு சின்ன ஆறுதல் கிடைத்தது.
தனக்குத் தெரிந்த கேள்விகளுக்கு முதலில் பதிலெழுதத் துவங்கினான் ஷங்கர். மற்ற கேள்விகளை எல்லாம் எழுதி முடித்துவிட்டு, அந்த 5 மதிப்பெண்கேள்விகளுக்கும் ஏதேனும் ஒரு பதிலை எழுதி வைக்கலாம் என்று முடிவு செய்தபோது தான் அது நடந்தது
தேர்வு முடிவதற்கு இன்னும் 20 நிமிடங்களே இருந்தன. உடனே, அந்த தேர்வு கண்காளிப்பாளர், ஒரு மாணவனை எழுப்பி, வகுப்பறையின் முன்னால் வரச்சொன்னார். என்ன நடக்கிறது என்று புரியாமல் அனைவரும் முழித்துக்கொண்டிருந்தனர். அல்-அமீன் பள்ளியைச் சேர்ந்த அந்தப் பையனின் விடைத்தாளை வைத்து, அந்த மதிப்பெண் கேள்விகளுக்கான பதிலை அனைவர் முன்னிலையில் உரக்க படிக்கச் சொன்னார்.
நடப்பவை எல்லாம் நம்புவதற்குக் கஷ்டமாக இருந்தது. ஆனாலும், அந்த பையன் வரிக்கு வரி, அந்த விடையைப் படிக்க, அவசர அவசரமாக அனைவரும் அதை எழுதிக்கொண்டிருந்தனர். ஷங்கர், தன்னையே ஒரு முறை கிள்ளி பார்த்துக்கொண்டான். பத்து நிமிடங்களில் மூன்று வினாக்களுக்கான விடைகளையும் படித்து முடித்தான்.
அனைவரும் அதை எழுதி முடித்தபிறகு, ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். அனைவருக்கும் வாயெல்லாம் பல்லாக இருந்தது. இப்படியெல்லாம் கூட நடக்குமா என்று ஷங்கர் யோசித்துக் கொண்டிருந்தான். ஒரு அதிசயத்தை நேரில் பார்த்து அனுபவித்த பூரிப்பில் இருந்தான் ஷங்கர்.
பரீட்ச்சை முடிந்து வெளியில் வந்தவுடன் எதிரில் தென்பட்டான் பாபு. இருவரும் மகிழ்ச்சியில் கட்டிக்கொண்டனர். அந்த வாத்தியார், அல்-அமீன் பள்ளியின் கணக்கு வாத்தியார் என்று பின்பு தெரிந்தது. கேள்விகள் சற்று மாற்றி கேட்கப்பட்டிருந்ததால், மாணவர்கள் அனைவரும் குழம்பியிருந்தார்கள். நல்லவேளையாக இவர் அப்படி ஒரு காரியத்தை செய்தார் என்று அந்த வாத்தியாரைஅனைவரும் புகழ்ந்து தள்ளினர். அனைவரும், அந்த சம்பவத்தைப் பற்றி பேசிப்பேசி மாய்ந்து போனார்கள்.
கடைசி பரீட்ச்சை....
யாருமே தேர்வு எழுதும் மன நிலையில் இல்லை. விடுமுறையை ஏற்கெனவே கொண்டாட ஆரம்பித்திருந்தார்கள். பரீட்ச்சை எழுதிவிட்டு, நேரடியாக வாசு தியேட்டர் சென்று 'படையப்பா' பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்தனர். ஷங்கர் வேறு, டிக்கெட்டுகளை காட்டி உசுப்பேற்றிக்கொண்டிருந்தான்.
"அடுத்த வருஷம் வேற ஸ்கூல் மாறிடணும் டா..." - திடீரென்று சொன்னான் ஷங்கர்.
யாருமே இதை எதிர்பார்க்கவில்லை. கடைசி பரீட்ச்சையான ஜியோக்ராபி பரீட்ச்சைக்கு படித்துக் கொண்டிருந்த அனைவரும், ஷங்கரை கேள்விக்குறியோடு பார்த்தனர்...
"நம்ம ஸ்கூல் வேஸ்டு டா... இன்னும் நம்மளை சின்னப்பசங்களாவே நடத்துறாங்க. மத்த ஸ்கூல் எல்லாம் பாரு..."
"நம்ம உண்மையிலேயே சின்னப் பசங்க தான டா?" - மறைந்திருந்து குரல் கொடுத்தான் நட்டு.
"டேய், எவன் டா அவன்?" என்று ஷங்கர் கேட்டதும் பம்மினான்.
"வேற எந்த ஸ்கூலுக்கு போறது?" என்று கேட்டான் பாபு.
"டவுன் ஹை ஸ்கூல்"
"ஏன்?"
"அங்க தான் நிறைய சுதந்திரம் இருக்கும்.... +1ல நல்லா என்ஜாய் பண்ணனும்டா...."
"இங்கே மட்டும் என்ன என்ஜாய் பண்ணாமலா இருக்கோம்?" என்றான் குமார்.
"அது வேற... இங்கே நமக்கு படிப்பைத்தவிர என்னடா ஆக்ட்டிவிடி இருக்கு?"
".............."
"எப்படியும் நான் அடுத்த வருஷம் டவுன் ஹை ஸ்கூல்-ல சேரப் போறேன் டா" - சொல்லிக்கொண்டே ஷங்கரின் அருகில் வந்து அமர்ந்தான் செழியன்.
"சரி, சரி.... இப்போ எதுக்கு அந்த பேச்சு? முதல்ல பரீட்ச்சை எழுதி முதிச்சிட்டு, தலைவர் படத்தைப் பார்க்குற வழியை பார்க்கலாம்" என்று, தற்காலிகமாக அந்தபேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தான் பாபு.
பரீட்ச்சையை நல்லபடியாக எழுதி முடித்துவிட்டு, இவர்கள் ஆறு பேர் மட்டும் நேராக தியேட்டருக்குச் சென்றனர். அலைகடலென திரண்டிருந்த கூட்டத்தைப்பார்த்து சற்றே மிரண்டனர். அவ்வளவு கூட்டத்தில், பள்ளிச் சீருடையுடனிருந்த இவர்களுக்கு கொஞ்சம் கூச்சமாக இருந்தது.
"வீட்டுக்குப் போய் சட்டையை மாத்திக்கிட்டு வந்திருக்கலாமோ?" என்றான் குமார்.
கையில் டிக்கெட் இருந்தாலும், தியேட்டருக்குள் செல்ல, நீண்ட வரிசைநின்றுகொண்டிருந்தது. கையில் பெரிய தடியுடன் போலீஸ்காரர்கள்சுற்றிக்கொண்டிருந்தார்கள். உள்ளே செல்ல கேட் திறக்கப்பட்டபோது, தள்ளுமுள்ளு ஆனது. போலீசிடம் அடி வாங்காமல் உள்ளே சென்று விட வேண்டும் என்று, இவர்கள் திகிலுடன் வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.
கூட்டத்தில் சிக்கி, சட்டை எல்லாம் கசங்கி, தலையெல்லாம் கலைந்து ஒருமார்கமாக உள்ளே சென்று அமர்ந்தனர். பதினைந்து நிமிடங்கள் வரிசையில்நின்றது, பதினைத்து மணிநேரம் நின்ற களைப்பைத் தந்தது.
அத்தனை களைப்பும், திரையில் "சூப்பர் ஸ்டார்" என்ற எழுத்து வந்த உடனேயே மாயமாய் மறைந்து போனது. திடீரென ஒரு சக்தி வந்தது. இதற்கு மேல், ரஜினி, திரையில் முதலில் தோன்றியவுடன், "தலைவா....." என்று இருக்கையை விட்டு எழுந்து நின்று கூச்சல் போட்டனர். தலைவரைப் பார்த்து, அனைவரும் பரவசநிலையை அடைந்திருந்தனர்....
தொடரும்...