அமெரிக்கா டைரி - 'சனி'விளையாடல்
பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் பரந்து விரிந்து கிடக்கிறது சான் ஃபிரான்சிஸ்கோ விமான நிலையம். நண்பர் ஒருவர் பாஸ்டன் போவதால், அவரை வழியனுப்புவதற்காக சென்றிருந்தேன். இரவு 10.30 மணிக்கு San Jose (சான் ஓசே என்று உச்சரிக்க வேண்டும்) விமான நிலையத்திலிருந்து புறப்படுவதாக இருந்தது. மாலை 7.30 மணி வாக்கில் 'தோசை பிளேஸ்' இல் சாப்பிட்டு விட்டு வீடு திரும்பிக்கொண்டிருக்கையில், நண்பருக்கு திடீரென்று வந்தது அந்த தொலைபேசி அழைப்பு. இரவு 10.30 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் ரத்து செய்யப்பட்டு விட்டதாகவும், இரவு 2 மணிக்கு அடுத்த விமானத்தில் தான் பயணிக்க முடியும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்படி இல்லையென்றால், 10 மணிக்கு சான் ஃபிரான்சிஸ்கோவில் ஒரு விமானம் புறப்படுவதாகவும், விருப்பப்பட்டால் அங்கு சென்று ஏறிக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டது. இரவு இரெண்டு மணி விமானத்தில் பயணித்தால் லேட்டாகிவிடும். அவருக்கு அடுத்த நாள் பாஸ்டனில் முக்கியமான வேலை இருந்தது. இங்கிருந்து சான் ஃபிரான்சிஸ்கோவிற்கு காரில் செல்ல 40 நிமிடங்கள் ஆகும். இப்போது கிளம்பினால் சரியாக இருக்கும் என்று, நேராக வீட்டிற்கு சென்று, பெட்டிகளை எல்லாம் அடுக்கிக்கொண்டு கிளம்பினோம்.
ஏற்கெனவே தனக்கும் விமான பயணத்திற்கும் ராசியே இல்லை என்று புலம்பிக்கொண்டிருப்பவர், இந்தத் தகவலைக் கேட்டதும் மறுபடியும் புலம்பத் துவங்கினார். அப்படி என்னதான் ராசி என்று தெரிந்துகொள்வதற்காக, அவரிடம் அது பற்றிக் கேட்டேன். விமான நிலையம் செல்லும் வழியில் அவர் கூறியதாவது....
ஒவ்வொரு முறை அவர் விமானத்தில் பயணிக்கும் போதும் ஏதாவது ஒரு எதிர்ப்பாராத காரணத்தால் ஒன்று அவரால் பயணிக்க முடியாமல் போகும், அல்லது விமானத்தால் பறக்க முடியாமல் போகும். அவருக்கு நிகழ்ந்த ஒரு சுவாரசியமான சம்பவம் - பஃபல்லோ(சரியாகத்தான் படித்திருக்கிறீர்கள், Buffalo தான்) விமான நிலையத்திலிருந்து கலிஃபோர்னியா வருவதற்காக விமான நிலையத்திற்கு வந்தபோது, விமானம் ரத்து செய்யப் பட்டது தெரிந்து மீண்டும் வீடு திரும்பியிருக்கிறார். அடுத்த விமானம் அடுத்த நாள் தான் என்பதால், அடுத்த நாள் மீண்டும் விமான நிலையத்திற்கு வந்து ஒரு வழியாக விமானத்தில் ஏறி உட்கார்ந்து விட்டிருக்கிறார். எவ்வளவு நேரம் ஆகியும் விமானம் புறப்படுவதாக இல்லை. நீண்ட நேரம் கழித்து ஒரு அறிவிப்பு - "விமானத்தின் இன்ஜினை இயக்க தேவைப்படும் கார்டு ஒன்றைக் காணவில்லை, அதை தீவிரமாக தேடிக்கொண்டிருக்கிறோம், கிடைத்தவுடன் விமானத்தை இயக்கிவிடுவோம். சிரமத்திற்கு வருந்துகிறோம்" என்று! கேட்டுக்கொண்டிருந்த எனக்கே "என்ன கொடுமை சார் இது?" என்று தலையில் அடித்துக்கொள்ளத் தோன்றியது. விமானத்தில் உட்கார்ந்திருந்த அவருக்கு எப்படி இருந்திருக்கும் என்று யூகித்துப் பார்க்க முடிந்தது.
சரி, மீதிக் கதையைக் கேளுங்கள்.... மேலும் ஒரு பதினைந்து நிமிடங்கள் காக்க வைத்துவிட்டு, "மன்னிக்கவும், எவ்வளவு தேடியும் அந்த கார்டை கண்டுபிடிக்க முடியவில்லை. அதை யாரோ எடுத்துச் சென்று விட்டார்கள். அதனால், இந்த விமானப் பயணம் ரத்து செய்யப்படுகிறது" என்று. "அடப்பாவிகளா... என்னமோ கடலை மிட்டாயைத் தொலைச்ச மாதிரி சொல்லறீங்க" என்று கடுப்பாகிவிட்டார் நண்பர். கடவுள் புண்ணியத்தில் அடுத்த இரெண்டு மணிநேரத்திலேயே வேறு விமானத்தில் பயணிக்க ஏற்ப்பாடு செய்து தரப்பட்டு, ஒரு வழியாக வந்து சேர்ந்திருக்கிறார். இவர் சோகக்கதையை என்னிடம் சொல்லிக்கொண்டே வரும்போது திடீரென்று நாங்கள் சென்று கொண்டிருந்த வழியில் பயங்கர டிராஃபிக். அதுவரை காற்றாக பறந்து கொண்டிருந்த வாகனங்கள் எல்லாம் மெதுவாக ஊர்ந்து செல்லத்தொடங்கின. கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் டிராஃபிக் நின்றுகொண்டிருந்தது. விமான நிலையத்திற்கு இன்னும் பத்தே நிமிடங்களில் சென்று பெட்டியை செக்-இன் செய்யாவிட்டால், அந்த விமானத்தில் பயணிக்க முடியாது.
பத்து நிமிடங்களில் சென்று சேர்வது இயலாத காரியமாக இருந்ததால், அவர் பயணிக்கும் விமானமான "ஜெட் ப்ளூ" அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு, வழியில் வந்துகொண்டிருப்பதாகத் தகவல் தெரிவித்தால், ஒரு பத்து நிமிடம் தாமதமாக அவர் வரும் வரை காத்திருப்பார்கள் என்று இன்னொரு நண்பர் கூறியதும், கடைசி முயற்சியாக அதையும் செய்து பார்த்துவிடலாம் என்று முயற்சித்துப் பார்த்தார். ஆனால், யாருமே போனை எடுக்கவில்லை. அவர் இந்த முறை, என்னைப் பார்த்து, "என்ன கொடுமை கௌரி இது?" என்றார். அடித்து பிடித்துக் கொண்டு, விமான நிலையத்திற்குள் நுழைந்தோம். உள்நாட்டு விமானங்கள் புறப்படும் "டொமெஸ்டிக் டெர்மினல்"இல் வண்டியை செலுத்தி, அவர் செல்ல வேண்டிய "ஜெட் ப்ளூ" எங்கே இருக்கிறது என்று தேடிப்பார்த்ததில் அது கிடைக்கவே இல்லை. தேடிக்கொண்டே, விமான நிலையத்தின் முடிவிற்கு வந்து விட்டோம். அது ஒரு வழிப்பாதை என்பதால், ஒரு முறை சுற்றி மீண்டும் நுழைந்தோம். இந்த முறை ஜாக்கிரதையாக யாரிடமாவது கேட்டுக்கொண்டு செல்லலாம் என்று வண்டியை நிறுத்திவிட்டு, அவசர அவசரமாக ஓடிச்சென்று ஒருவரிடம் கேட்டபோது, அது "இண்டெர்நேஷனல் டெர்மினலில்" இருப்பதாக ஒரு குண்டை தூக்கிப் போட்டார். நண்பரைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது.
ஏற்க்கெனவே பத்து நிமிடங்கள் தாமதம், இன்னும் டெர்மினலை அடைந்த பாடில்லை. "நான் எங்கே போனாலும், சனியன் என் கூடவே வருது" என்று மீண்டும் புலம்பத் தொடங்கினார் நண்பர். மீண்டும் ஒரு முறை விமான நிலையத்தை சுற்றி, இண்டெர்நேஷனல் டெர்மினலை அடைந்தோம். உள்ளே நுழைந்தவுடன் "ஜெட் ப்ளூ" தென்பட்டது. வண்டியை விட்டு இறங்கியதும், நண்பர் திரும்பிப் பார்க்காமல் ஓட, அவர் பெட்டியை இழுத்துக் கொண்டு நானும் அவருடன் ஓட, ஒரு வழியாக செக்-இன் செய்து முடித்தார். நல்ல வேளையாக இவருக்காக காத்துக் கொண்டிருந்தார்கள். "பாத்தீங்களா, இனிமே உங்களுக்கு நல்ல காலம் தான். இவ்வளவு லேட்டா வந்தாலும் ஃப்ளைட்டை புடிச்சிட்டீங்க" என்று சொல்லிவிட்டு, விடைபெற்றுக் கொண்டு வந்தேன். பார்க்கிங் இல்லை என்பதால், காரை ஓட்டிக்கொண்டு வந்திருந்த இன்னொரு நண்பர் மீண்டும் ஒரு முறை விமான நிலையத்தை சுற்றிக்கொண்டு வருவதற்காக சென்றிருந்தார். சிறிது நேரத்தில் அவர் வந்ததும், காரில் ஏறி புறப்பட்டோம்... "இந்த ஏர்போர்ட்டை சுத்துனதுக்கு கோவிலை சுத்தியிருந்தா புண்ணியமாவது கிடைச்சிருக்கும்" என்றார் அவர்.
அவர் சென்றடைந்த தகவலைப் பற்றி மற்றுமொரு நண்பரிடம் விசாரித்தபோது, இங்கிருந்து கிளம்பி நியூ யார்க் வரை சென்றுவிட்டதாகவும், அங்கிருந்து பாஸ்டனுக்கு செல்ல வேண்டிய கனெக்டிங் ஃபிளைட் ரத்தானதால், அவர் விமான நிலையத்திலேயே காத்திருப்பதாகவும் தெரிவித்தார். எனக்கு தலை சுற்றியது...!
"சனியன் சுத்தி சுத்தி அடிக்குது" என்று அவர் அடிக்கடி கூறும் வசனம் நினைவிற்கு வந்தது!
5 comments:
Narration of the situation is gud da…
Feeling pity on ur friend, Ask him to do some special pooja’ to escape from ‘sani vilaiyadhal’…
haha yeah ask him to special pooja :)
dei paavam un friend..
indha chapter padikum bodhu anbesivam la kamal and madhavan maatikuvangala adhu gnyabagam vandhudhu..
yaenu therila? but andha maadhiri dhaan pola irku?
itharkku pooja thaevayae illai, kadavuzlukku nandriyai sollungal.
flight yerum munnum, yerangiya pinnum aatum sani naduvil aativittal!!!
-sanojose la vilaiyadiya sani nu ..solu..iruhtalum ipdi suthi suithi adika kodatu..pitty on ur frns..anyway ur narration is very gud..we can feel how much he got hindered to go by flight..
oru periya kumbudu poda solu flight ku..
:)..athu epdi kodave irhtu mathiri flight ithna part wrk ala..athu wrk ala neee kata vitra ...kodave irutha mathiri
-abi
Post a Comment