'சேட்டை'ய ராஜாக்கள் - 9
இதைக் கொஞ்சமும் எதிர்ப்பார்த்திராத அந்தப் பெண்ணும் இவனுடன் சேர்ந்து அலற, அங்கு ஒரே ரகளையாகிப் போனது. சற்று நேரத்தில் சகஜ நிலைக்குத் திரும்பியவுடன் நட்டு வேகமாக அந்தப் பெண்ணிடமிருந்து விலகி, "ச... ச.... சா... சாரி..." என்று கூறினான். அந்தப் பெண்ணுடன் வந்திருந்த மற்ற மூன்று பெண்களும், செய்வதறியாது நின்றுகொண்டிருந்தனர். குமார், ஷங்கர், பாபு, கிருஷ்ணா, பாலா அனைவரும் சிரித்துக்கொண்டிருந்தாலும், அவர்களுக்கும் நட்டு அப்படி செய்தது அதிர்ச்சியாகவே இருந்தது.
அந்த சம்பவத்தின் அதிர்ச்சியிலிருந்து மீளாமல் அழுதுகொண்டிருந்த அந்தப் பெண் எந்த பதிலும் சொல்லாமல், வேகமாக அந்த இடத்தை விட்டு வெளியேறினாள். வழக்கம்போல எல்லாருடைய போதைக்கும் ஊறுகாய் ஆனான் நட்டு.
"என்னடா நீ... பேய் வீட்டுக்குள்ள போய் கட்டிப்புடிச்சி ரொமான்ஸ் பண்ற" என்று ஆரம்பித்தான் ஷங்கர்.
"பயத்துல தெரியாம அப்படிப் பண்ணிட்டேன்டா..... ச்ச..." என்றான் நட்டு.
"கட்டிப்புடிச்சது தான் புடிச்ச.... ஒரு நல்ல ஃபிகரா பாத்து கட்டிப்புடிச்சிருக்கக் கூடாது??" என்று கேட்டான் பாலா.
"டேய் மொட்டை... இருட்டுல அவனுக்கு கண்ணு தெரிஞ்சிருக்காது" என்று அவனுக்கு பதிலளித்தான் கிருஷ்ணா.
இப்படி ஒவ்வொருவரும் ரவுண்டு கட்டி நட்டை ஓட்டிக்கொண்டிருந்தனர். ஒரு வழியாக பொருட்காட்சியை சுற்றி முடித்தவுடன், அனைவரும் வீட்டிற்குக் கிளம்ப ஆயத்தமானார்கள்.
"சரி டா... நாளைக்கு ஸ்கூல்ல பாக்கலாம்" என்று சொல்லிவிட்டு, கிருஷ்ணாவும் பாபுவும் கிளம்பிச்சென்றனர். மற்ற அனைவரும் சைக்கிள் நிறுத்துமிடத்தில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். சிறிது நேரம் பேசிவிட்டு, குமாரின் "டி.வி.எஸ். சேம்ப்"பில் ஷங்கரும் குமாரும் கிளம்பிச் சென்றனர்.
அப்போது திடீரென்று வாட்டசாட்டமான நான்கு பேர் வந்து நட்டின் முதுகில் வந்து கைவைத்தனர். இவர்கள் யார் என்று குழப்பத்துடன் நட்டு பார்க்க, மொட்டையும் யாரென்று தெரியாமல் குழம்பினான்.
"என் ஆளை நீ எப்படி டா கட்டிப்புடிக்கலாம்?" என்று அவன் பல்லை கடித்துக்கொண்டு கேட்க, உடனே மொட்டைக்கு எல்லாமே விளங்கியது.
"அவனா நீ???" என்று நினைத்துக்கொண்டான்.
நட்டு, அவனிடம் தான் பயத்தினால் தான் தெரியாமல் அப்படி செய்ததாக எவ்வளவோ கூறியும், அதை அவன் கேட்டுக்கொள்ளவில்லை. ஒரு முடிவுடன் வந்திருந்தவன் போல, நட்டைப் பிடித்து கீழே தள்ளினான். இதைக் கொஞ்சமும் எதிர்ப்பார்க்காத பாலா, நட்டை தூக்கிவிட்டு அவனிடம் சண்டைக்குப் போக, அந்தப் பையனுடன் வந்திருந்த மற்ற மூவரும் அடிக்க வந்தனர். அவர்களைப் பார்த்தால் பள்ளி மாணவர்கள் போல தெரியவில்லை.
இது, மெல்ல அங்கிருந்த கூட்டத்தின் கவனத்தை ஈர்த்துக்கொண்டிருந்தது. கூட்டம் இவர்களை கவனிக்கத் தொடங்குவதை உணர்ந்து, அவன் "நீங்க எந்த ஸ்கூல்ன்னு எனக்குத் தெரியும் டா, எங்க எரியாவத் தாண்டி தானே போவீங்க.... அப்போ வெச்சிக்கிறேன் உங்களை" என்று சொல்லிவிட்டு, அவர்களுடன் கிளம்பிச் சென்றான்.
கீழே விழுந்து எழுந்ததில் அவமானப்பட்டிருந்த நட்டிற்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. சீக்கிரமாக அந்த இடத்தை விட்டுக் கிளம்பிவிட வேண்டும் என்பதற்காக, வேக வேகமாக மொட்டை, சைக்கிள் டோக்கனைக் கொடுத்துவிட்டு சைக்கிளை எடுத்துக் கொண்டு வந்தான்.
"சைக்கிள்ல ஏறு"
பதிலேதும் பேசாமல் சைக்கிளில் ஏறினான். நட்டு பேயறைந்தது போலிருந்தான். பாலாவும், எதுவுமே பேசாமல் சைக்கிளை மிதித்துக்கொண்டிருந்தான்.
"நாளைக்கு காலையில பேசிக்கலாம்....வீட்ல யார்கிட்டயும் எதுவும் காட்டிக்காத" சொல்லிவிட்டு கிளம்பிச் சென்றான் பாலா.
நட்டிற்க்குத் தூக்கமே வரவில்லை. அத்தனை கூட்டத்திற்கு முன் அவன் கீழே தள்ளிவிடப்பட்டது அவமானமாக இருந்தது. தான் செய்த ஒரு காரியத்தினால் இவ்வளவு பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அவன் கொஞ்சம் கூட எதிர்ப்பார்க்கவில்லை. அவன் மீதே அவனுக்குக் கோபமாக வந்தது. நடந்த சம்பவத்தை நண்பர்களிடம் கூறலாமா வேண்டாமா என்று குழப்பமாக இருந்தது. சும்மாவே கிண்டலடிப்பார்கள், இதை வேறு சொன்னால் அவ்வளவுதான் என்று அதை நினைத்து பயமாக இருந்தது. இது ஒருபுறம் இருக்க, "எங்க ஏரியா பக்கம் வா, உன்னைப் பாத்துக்குறேன்" என்று அவன் மிரட்டியதும் பயமாக இருந்தது.
"நட்ராஜ்.... உன் சைக்கிள் எங்கே?" - அப்பாவின் குரல் கேட்டதும் திடுக்கிட்டு எழுந்தான் நட்டு. போர்வையை விலக்கிக்கொண்டு வாசலுக்கு ஓடினான். வழக்கமாக சைக்கிளை நிறுத்தும் இடத்தில் சைக்கிளைக் காணவில்லை. ஒரு நிமிடம் ஒன்றுமே புரியவில்லை. திடீரென்று, முதல் நாள் பொருட்காட்ச்சிக்குப் போனதும், திரும்பி வரும்போது மொட்டையுடன் வந்ததும் ஞாபகம் வந்தது.
"ஐயையோ..... சைக்கிளை அங்கேயே விட்டுட்டேன்" என்று தலையில் அடித்துக் கொண்டான் நட்டு. நட்டின் அப்பா மீண்டும் வந்து, "சைக்கிள் எங்கப்பா காணும்?" என்று கேட்டார்.
"பாலா வீட்டுல இருக்குப்பா... பஞ்சர் ஆயிருச்சின்னு அங்கேயே விட்டுட்டு வந்துட்டேன்" - கஷ்டப்பட்டு நம்பும்படியான ஒரு பொய்யை அவிழ்த்து விட்டான் நட்டு. உடனே மொட்டைக்கு போன் செய்தான்.
"டேய், நான் தான்... என் சைக்கிளை எக்ஸிபிஷன்லையே விட்டுட்டேன்" என்றான் நட்டு.
"அடப்பாவி.... எப்படி டா அதை மறந்துட்டு என்கூட வந்த?"
"அந்த டென்ஷன்ல மறந்துட்டேன். இப்போ சைக்கிள் உங்க வீட்டுல இருக்குறதா எங்க வீட்ல சொல்லிருக்கேன். நீ வந்து என்னை ஸ்கூலுக்கு கூட்டிட்டுப் போ"
"வாழ்க்கையிலேயே உருப்படியா ஒரு பொய் சொல்லியிருக்க. சரி, 8.45 க்கு வர்றேன். ரெடியா இரு"
"சரி, டேய்.... என் சைக்கிள் அங்க பத்திரமா இருக்குமா?"
"டேய், அதை எடுத்துட்டுப் போய் என்ன பண்ண முடியும்? பேரீச்சம்பழத்துக்காக யாரும் அவ்வளவு ரிஸ்க் எடுக்க மாட்டாங்க"
"ஓவரா பேசாத. சீக்கிரம் வா"
ஃபோனை துண்டித்துவிட்டு மின்னல் வேகத்தில் கிளம்பினான் நட்டு. அதிசயமாக, சொன்ன நேரத்தில் வந்து நின்றான் பாலா.
சைக்கிளின் பின்னால் அமர்ந்துகொண்டு தன் சைக்கிளைப் பற்றியே பேசிக்கொண்டு வந்தான் நட்டு.
"இப்போவே போகலாமா?"
"இப்போ அங்க யாரும் இருக்க மாட்டாங்க. அதுமட்டும் இல்ல... ஸ்கூலுக்கு லேட் ஆயிடும்...."
"பயம்மா இருக்கு டா..."
"சாயங்காலம் ஸ்கூல் முடிஞ்ச உடனே நேரா எக்ஸிபிஷனுக்குப் போயிருவோம். அது வரைக்கும் கொஞ்சம் பொறுமையா இரு" என்று கூறிவிட்டு பெடலை மிதித்தான் மொட்டை.
"எங்க ஏரியா பக்கம் போகும்போது பாத்துக்குறேன்ன்னு வேற மிரட்டினானே அவன். அவங்க ஏரியா எதுவா இருக்கும்?" என்று கேட்டான் நட்டு. உடனே பிரேக்கைப் பிடித்து சைக்கிளை நிறுத்தினான் மொட்டை.
"ஆமாம் டா... எனக்கு மறந்தே போச்சு. அடிவாங்குறதுக்கு என்னை வேற கூட்டு சேத்துக்குறியா நீ? எதுக்கும் நம்ம வேற வழியில போகலாம்" என்று கூறிவிட்டு பயத்துடன் சைக்கிளை வேறு வழியில் செலுத்தத்தொடங்கினான் பாலா.
தொடரும்...