Wednesday, October 29, 2008

'சேட்டை'ய ராஜாக்கள் - 26

அடுத்த ஒரு வாரத்திற்கு, இந்த 'நாற்காலி வீசப்பட்ட' சம்பவம் தான் அனைவரின் பேச்சாக இருந்தது. அந்த சம்பவத்தைப் பார்த்தவர்கள் எல்லாரும் 'பிசிக்ஸ்' சார் ஒரு டெரர் என்று நினைத்துக்கொண்டனர். கிளாஸ் எல்லாம் பிரிக்கப்பட்டு, 'பயாலஜி' குரூப்பிற்கு 'பிசிக்ஸ்' வாத்தியாராக சென்றார் செல்வம். தங்களுக்கு வராததை நினைத்து, பெருமகிழ்ச்சி அடைந்தனர் 'கம்ப்யூட்டர்' குரூப் மாணவர்கள்.


"நாங்க செம எஸ்கேப்..... எங்களுக்கு பூங்கொடி மிஸ் தான்" என்றான் குமார்.


"நாங்க நல்லா மாட்டிக்கிட்டோம் டா... அந்த ஆளு முதல் நாளே இப்படி நடந்துகிட்டாரு.... க்ளாஸ்ல இன்னும் என்னென்ன பண்ணுவாரோ?" என்றான் நட்டு.


"எனக்கென்னவோ, அந்த ஆளைப் பார்த்தா டெரர் மாதிரி தெரியல. நிச்சயமா அவரு காமெடி தான்" என்றான் ஷங்கர்.


"எப்படி சொல்லற?"


"ஒரு காமெடியனுக்கான களை அவரு மூஞ்சில தெரியுது"


"போகப் போகத்தான் தெரியும்" என்றான் பாபு.


+1 வந்துவிட்டாலே, சம்பிரதாயமாக அனைவரும் டியூஷனில் சேருவது வழக்கம். டியூஷனுக்கென கும்பகோணத்திலேயே பிரபலமான ஆசிரியர்கள் இருந்தார்கள். அவர்களிடம் எப்போதுமே கூட்டம் அலைமோதும். ஒவ்வொருவர், ஒவ்வொரு வாத்தியாரின் பெயரை சொல்லிக்கொண்டிருந்தனர்.


"டியூஷனுக்கேல்லாம் போகணுமா? +1 எதுக்கு டா டியூஷன்?" என்றான் ஷங்கர்.


"இப்போ போகலேன்னா, +2 இடம் கிடைக்காது டா" என்றான் பாபு.


"அது மட்டுமில்ல..... எல்லாருமே சேர்றாங்க. வாரத்துல 3 நாள் தான்" என்றான் கிருஷ்ணா.


"சரி. எல்லாரும் சேர்ந்து போகலாம். அப்போ தான் ஒரே பேட்ச்ல இடம் கிடைக்கும்".


முதலில் கெமிஸ்ட்ரி டியூஷன். பள்ளி முடிந்தவுடன், அனைவரும் சேர்ந்து ஹரிஹரன் என்கிற கெமிஸ்ட்ரி வாத்தியாரின் வீட்டிற்கு சென்றார்கள். இவர்களுக்கு முன், அங்கே ஒரு பெரிய கும்பல் காத்திருந்தது. வீட்டு வாசலின் முன், ஏகப்பட்ட சைக்கிள்கள் நின்று கொண்டிருந்தன. டியூஷன் வகுப்புகள் தொடங்கப்படுவதையொட்டி, அவர் வீட்டின் முன் தனியாக ஒரு கொட்டகை போடப்பட்டிருந்தது.


ஹரிஹரன் - கும்பகோணம் ஆண்கள் கல்லூரியில் வேதியல் புரொபசர். நெற்றியில் மின்னிக்கொண்டிருந்த பட்டை, அவரை 'ஐயர்' என்று அடையாளம் காட்டியது. நரைத்த மீசை, தலையில் தாராளமாய் வெற்றிடம், மூக்கின் விளிம்பில் ஒரு கண்ணாடி என்று தோற்றமளித்தார். அவரைப் பார்த்தாலே, மாணவர்கள் அவர் தலையில் மிளகாய் அரைத்துவிடுவார்கள் என்று தெரிந்தது. வருபவர்களையெல்லாம் சிரித்த முகத்தோடு வரவேற்றுக் கொண்டிருந்தார்.


இடம் கிடைக்காததால், இவர்கள் ஆறு பேரும் கடைசி வரிசையில் சென்று அமர்ந்தனர். அந்த கொட்டகை முழுவதும் நிரம்பியவுடன்,


"வருஷத்துக்கு 850 ரூபாய் பீஸ். அதை முதலிலேயே குடுத்துடணும்" என்று தன் பேச்சை ஆரம்பித்தார்.


"காசுல குறியா இருக்கார்..." என்றான் குமார்.


"அவர் தலையைப் பாத்தாலே தெரியுது, பல பேர் அவருக்கு நாமம் போட்டிருக்கங்கன்னு.... அதான் உஷாரா இருக்காரு" என்றான் பாலா.


ஒவ்வொருவராகக் கூப்பிட்டு, அவர்களது பெயர், பள்ளியின் பெயர் மற்றும் தொலைபேசி எண்களை வாங்கிக் கொண்டார். ஒவ்வொருவருக்கும், ஒரு மிட்டாய் வேறு கொடுத்து அனுப்பினார். இவர்களும் சென்று பெயரைக் கொடுத்துவிட்டு வெளியில் வந்தனர்.


"இவர் கிட்ட டியூஷன் போனா உருப்பட்ட மாதிரி தான்" என்றான் ஷங்கர்.


"அடப்பாவி...... அப்புறம் எதுக்கு டா பேர் எல்லாம் கொடுத்த?"


"உள்ளே வந்துட்டு, பெயர் கொடுக்காம எப்படி இருக்க முடியும்?" என்றான் ஷங்கர்.


"நானும் சேர மாட்டேன்" என்று ஒவ்வொருவராக பின் வாங்கினார்.


"அடப்பாவிகளா.... அவரு வீட்டுக்கு போன் பண்ணினா என்னடா பண்ணறது?" என்று அப்பாவியாகக் கேட்டான் நட்டு.


"அதெல்லாம் பண்ண மாட்டார். நான் எங்க வீட்டு போன் நம்பர் கொடுக்கல"


"பின்ன?"


"நம்ம ஸ்கூல் நம்பர் எழுதிக்கொடுதுட்டு வந்துட்டேன். பேர் கூட மாத்தி கொடுத்துட்டேன்" என்றான் ஷங்கர்.


"அடப்பாவி......."


'டேய், நீ பரவாயில்ல.... நான் என் பேரை மாத்தி, நட்டு வீட்டு போன் நம்பரைக் கொடுத்துட்டேன்" என்றான் கிருஷ்ணா.


"டேய் நாயே...." என்று அவனைத் துரத்தினான் நட்டு.


சிறிது நேரத்திலேயே காற்று பலமாக அடிக்கத்தொடங்கியது. திடீரென்று கார்மேகம் சூழ்ந்து கொண்டது.


"டேய், மழை வர்றதுக்குள்ள சீக்கிரமா எல்லாரும் வீட்டுக்குப் போய் சேர்ந்துடலாம்" என்றான் ஷங்கர். ஆனால், அவர்கள் சிறிது தூரம் செல்வதற்குள் பேய் மழை பிடித்துக்கொண்டது.


மறுநாள் காலை....


வகுப்புகள் வழக்கம்போல் நடைபெறத் தொடங்கின. 'கம்ப்யூட்டர் சைன்ஸ்' வகுப்பிற்கு புதிதாக வந்திருந்த 'ப்ரீத்தி' மிஸ் வகுப்பிற்குள் நுழைந்தார். அவர் பாடம் நடத்திய விதம், அனைவருக்கும் ரொம்பப் பிடித்திருந்தது. அமைதியாகவும் நேர்த்தியாகவும் பாடமெடுத்தார். பொதுவாக, மாணவர்களிடம் உடனே நல்ல பெயரெடுப்பது கடினம். ஆனால், இவர் வந்த முதல் நாளிலேயே மாணவர்களிடம் நல்ல பெயரெடுத்தார்.


'கம்ப்யூட்டர்' வகுப்பிற்கு ஆசிரியர்கள் எல்லாம் திருப்த்தியாக அமைந்திருந்தனர். ஆனால், 'பயாலஜி' வகுப்பில் செல்வம் சார் பூச்சாண்டி காட்டிக் கொண்டிருந்தார். மாணவர்கள் எல்லாம் புலம்பிக்கொண்டிருந்தனர்.


"நிச்சயமா ஏதாச்சும் வீக் பாயிண்ட் இருக்கும் டா" என்றான் ஷங்கர்.


"அதை சீக்கிரமா கண்டு புடிக்கணும் டா.... கிளாஸ் டார்ச்சர் தாங்கல.... திருநெல்வேலி தமிழ் கேள்விப்பட்டிருக்கோம். இவரு, திருநெல்வேலி இங்கிலிஷ்ல பேசி உயிரெடுக்குறார்" என்றான் பாபு.


"சரி, நம்ம முதல் வலையை விரிப்போம். இதுலே விழலேன்னா, அப்புறமா அடுத்தக்கட்ட நடவடிக்கை பத்திப் பேசுவோம்"


"சொல்லு"


"நீ என்ன பண்ணற.... நாளைக்கு அவரைப் பார்த்து, 'நீங்க டியூஷன் எடுக்குறீங்களா சார்' ன்னு கேளு" என்றான் ஷங்கர்.


தொடரும்...

2 comments:

Bala said...

Sir, maanavargal viritha valayil vizhundhara?
avar comediana? illa terrora?

idhai adutha epdisode la paaklam?

Anonymous said...

Enna Gowri...

11th Aarambame Terror'a iruku?