'சேட்டை'ய ராஜாக்கள் - 23
விடுமுறைகள் எப்படிக் கழிந்தன என்றே தெரியவில்லை. இப்போது தான் பரீட்ச்சை முடிந்த மாதிரி இருந்தது, திடீரென்று தேர்வு முடிவுகள் வெளிவரும் நாள் வந்து விட்டது. இத்தனை நாட்கள் அங்கும் இங்கும் சுற்றித்திரிந்து கொண்டிருந்தவர்கள், கொஞ்சம் பதட்டத்துடன் இருந்தனர். அன்று காலை முதலே பரபரப்பு தொற்றிக்கொண்டது. பொதுவாக, இது போன்ற பரபரப்பான விஷயங்களின் போது, பொதுக்குழு கூட்டுவது வழக்கமென்பதால், அன்றும் ஷங்கர் வீட்டில் பொதுக்குழு கூடியது.
"ரொம்ப டென்ஷனா இருக்கா??" என்றான் பாபு.
"லைட்டா...." என்றான் பாலா.
அன்று காலை முதல் அனைவருக்குமே பரபரப்பு தொற்றிக்கொண்டது. இன்டெர்நெட்டில் தேர்வு முடிவுகள் வெளியாவதால், ஊரிலிருந்த இரெண்டு மூன்று இன்டர்நெட் சென்டர்களிலும் கூட்டம் மொய்த்துக்கொண்டிருந்தது.
"11 மணிக்கு தான் ரிசல்ட் வருமாம் டா...." என்றான் கிருஷ்ணா.
"இன்னும் ரெண்டு மணி நேரம் இருக்கு.... ஒரே டென்ஷனா இருக்கு" என்றான் குமார்..
"டேய், எனக்கு 'பயாலஜி'யை நெனச்சா கொஞ்சம் உதறலா இருக்கு. 'பாட்டனி'யும், ' ஜுவாலாஜி'யும் சேர்த்து பாஸ் மார்க் வாங்குனா போதும் தானே?" என்று நூறாவது முறையாக கேட்டான் பாலா.
"டேய், எத்தனை தடவை டா கேட்டுக்கிட்டு இருப்ப? நீ பாஸ் ஆயிடுவ....கவலைப்படாதே" என்றான் குமார்.
"கலெக்டர் ஆபீசுக்கு போன் பண்ணி கேட்டாலும் ரிசல்ட் சொல்லுவாங்களாம் டா" என்ற புதுத்தகவலோடு வந்தான் நட்டு.
ஷங்கர் வீட்டில் உட்கார்ந்திருந்த அனைவருக்கும் அங்கு இருப்புக்கொள்ளவில்லை. ஏதாவது ஒரு இன்டர்நெட் சென்டருக்கு சென்று முகாமிடுவது என்று முடிவு செய்து, அதன்படி 'ராமன் & ராமன்' பெட்ரோல் நிலையம் அருகே இருக்கும் ஒரு சென்டருக்கு அனைவரும் சென்றனர்.
வாசலில் ஏகப்பட்ட சைக்கிள்கள் நின்றுகொண்டிருந்தன. இதுவரை யாருமே எட்டிக்கூட பார்த்திராத அந்த இடத்தில் இவ்வளவு கூட்டம் கூடியிருப்பதைக் கண்டு, அவழியாக சென்று வந்து கொண்டிருந்தவர்கள் எல்லாம் ஆச்சரியப்பட்டு விசாரித்துக் கொண்டிருந்தனர்.
"ஒரு நம்பருக்கு ரிசல்ட் பார்த்து சொல்லறதுக்கு 20 ரூபாயாம்" என்ற தகவலை திரட்டிக்கொண்டு வந்தான் பாபு.
"அடப்பாவீங்களா....."
"இப்போ தானே அவனும் காசு பார்க்க முடியும்....வேற வழி இல்ல..." என்றான் ஷங்கர்.
"இப்போவே நம்பர் கொடுத்து ரிசர்வ் பண்ணி வைக்கணுமாம் டா. ஏற்கெனவே நிறைய பேரு ரிசர்வ் பண்ணிட்டாங்க" என்றான் பாபு.
ஒரு பேப்பரில், இவர்களின் பெயரை எழுதி, பணத்தைக் கட்டினர். நேரம் செல்ல செல்ல, அங்கு கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது.
சரியாக மணிக்கு, அனைவரும் முண்டியடித்துக் கொண்டு உள்ளே சென்றனர். ஒரு கட்டத்தில், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல், முன்பதிவை நிறுத்தினர். இன்டர்நெட் அநியாயத்திற்கு 'ஸ்லோ'வாக இருந்தது. காத்திருந்த மாணவர்கள் எல்லாம், பொறுமையிழக்கத் துவங்கினார். ஒரு வழியாக, கனெக்ஷன் கிடைத்து, ஒவ்வொருவரின் ரிசல்ட்டையும் எழுதிக்கொடுக்க ஆரம்பித்தனர்.
"டேய் நட்டு, உள்ளே போய் நில்லு டா... நம்ம பெயர் சொல்லி கூப்பிட்டாங்கன்னா தெரியாது" என்றான் கிருஷ்ணா.
பயந்துகொண்டே உள்ளே சென்றான் நட்டு.
ஒவ்வொருவரின் பெயரையும் அழைத்து, அவர்களிடம் ஒரு துண்டுச்சீட்டில் அவர்களது மதிப்பெண்களை எழுதி, அவர்களிடம் கொடுத்துக்கொண்டிருந்தனர்.
"நடராஜ்......" என்று உள்ளிருந்து குரல் கேட்க, வெளியில் காத்துக்கொண்டிருந்த அனைவருக்கும் திகில் பரவியது. ஷங்கர், நகத்தை கடித்து துப்பிக்கொண்டிருந்தான். குமார், அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான். அனைவரும், நட்டிற்காக வெளியில் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தனர்.
சிறிது நேரத்தில், கையில் அந்த காகிதத்துண்டுடன் வெளியில் வந்தான் நட்டு. அனைவரின் கண்களும் அவன் மீதே இருந்தன.
"என்னடா ஆச்சு....? ஏதாச்சும் பேசித்தொலையேன் டா" என்றான் பாலா.
மௌனமாக அருகில் வந்த நட்டிடமிருந்து அந்த காகிதத்தைப் பிடுங்கினான் பாலா. காகிதம் கை மாறியவுடன், அனைவரும் பாலாவை சூழ்ந்துகொண்டனர். அவன் மிகவும் பயந்து கொண்டிருந்த 'பயாலஜி' பரீட்ச்சையில் தேறியிருந்தாலும், 1100 மதிப்பெண்களுக்கு, வெறும் 630 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றிருந்தான். மற்ற அனைவரும், நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தனர். குமாரும் பாபுவும் 900 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருந்தனர். மற்றவர்கள் எல்லாம் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தும், பாலா இவ்வளவு குறைந்த மதிப்பெண் பெற்றதனால் சோகமாகவே இருந்தனர். பாலாவின் கண்களில் நீர் எட்டிப்பார்த்தது.
"நிச்சயமா நான் இவ்வளவு மோசமா பரீட்ச்சை எழுதல டா..." என்றான் கண்கலங்கியபடி.
"விடு டா... நம்ம ஸ்கூல்-ல மார்க் எல்லாம் முக்கியமே இல்லை. எப்படியும் +1ல சீட்டு கிடைச்சிடும். என்ன, 'பயாலஜி' குரூப் மட்டும் தர்றது கஷ்டம்" என்றான் குமார்.
பத்து நிமிடங்களை கழித்துவிட்டு, அனைவரும் வீட்டிற்கு செல்ல தீர்மானித்தனர். அப்போது, ஷங்கர் கிருஷ்ணாவிடம்,
"நீயும் மொட்டை வீடு வரைக்கும் போய் அவனை விட்டுட்டு, அப்புறம் உங்க வீட்டுக்குப் போ" என்றான்.
"சரி" என்று உற்சாகமே இல்லாமல் தலையசைத்துவிட்டு கிளம்பினான்.
பாலாவின் வீடு...
சைக்கிளை நிறுத்திவிட்டு, வாட்டமான முகத்துடன் உள்ளே சென்றான் பாலா. கிருஷ்ணா, வாசலிலேயே அவனை விட்டுவிட்டு, அவன் வீட்டிற்குக் கிளம்பினான். அப்போது, வாசலில் பாலாவின் அம்மா வந்து, கிருஷ்ணாவை உள்ளே அழைத்தார்.
"உங்களுக்கு முன்னாலேயே எங்களுக்கு ரிசல்ட் தெரிஞ்சி போச்சு. உள்ளே வாப்பா...."
சிரித்த முகத்துடன் அவர் வரவேற்பதைப் பார்த்து கிருஷ்ணாவிற்கு ஆச்சரியமாக இருந்தது. பாலாவிற்கும் ஒன்றுமே விளங்கவில்லை.
உள்ளே சென்ற கிருஷ்ணாவிற்கு இன்னொரு ஆச்சரியம் காத்திருந்தது. இன்முகத்துடன் பாலாவை வரவேற்றார் அவனது அப்பா,
"பரவாயில்லை... பயாலஜியில பயந்துக்கிட்டு இருந்த.... அதுல நல்ல மார்க் தான் வந்திருக்கு" என்று மேலும் ஒரு அதிர்ச்சி தந்தார். அதிரடி ஆக்ஷன் காட்சியை எதிர்பார்த்த கிருஷ்ணாவிற்கு, இப்படி ஒரு காட்சியைக் கண்டதும் மேலும் குழம்பியது. இந்த குழப்பங்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மேஜையின் மீது வைத்திருந்த அந்த காகிதத்தை எடுத்து, பாலாவிடம் கொடுத்தார். அதை வாங்கிப்பார்த்த பாலாவிற்கு, தலை சுற்றியது. அதில், ஒவ்வொரு பாடத்தின் மதிப்பெண்களும் இருந்தது. மொத்தம் 830 மதிப்பெண்கள் எடுத்திருந்தான்.
"நாங்க கலெக்டர் ஆபீசுக்கு போன் பண்ணி தெரிஞ்சிக்கிட்டோம்" என்றார் பாலாவின் அம்மா.
இன்டர்நெட் சென்டரில் ஏதோ குழறுபடியில், 830ஐ 630 என்று அவன் எழுதிக்கொடுத்ததால் நேர்ந்த குழப்பம் என்று தெரிந்தது. அப்போது தான் பாலாவின் முகத்தில் சிரிப்பே வந்தது. கிருஷ்ணாவும் நிம்மதி அடைந்தான்.
"நல்லவேளை..... உன்னால நாங்க யாருமே என்ஜாய் பண்ண முடியாம போயிடுமோன்னு பயந்தேன்" என்று பாலாவின் காலை வாரினான் கிருஷ்ணா.
உடனே, பாலா அனைவருக்கும் போன் செய்து இந்த விஷயத்தைக்கூறினான். அனைவருமே நிம்மதிப்பெருமூச்சு விட்டனர்.
"அப்பாடா.... அப்போ, நம்ம கூத்தை ஆரம்பிக்கலாம். எல்லாரும் எங்க வீட்டுக்கு வந்துடுங்க" என்றான் ஷங்கர்.
"என்னடா ப்ளான்?"
"முதல்ல வேற ஸ்கூலுக்கு அப்ளிக்கேஷன் போடுறது பத்தி பேசணும்" என்றான் ஷங்கர்.
அனைவருக்கும் ஒரு புதுக்கவலை ஆரம்பமானது.
தொடரும்....
4 comments:
u didnt tell the marks of each one :-)
அது எப்படி கௌரி? சிம்பிள் மேட்டர கூட த்ரில்லிங்கா சொல்ற? (630 - 830)
dei thirutham..
naan 10th le 887 score paninen
Not 830 or 630.. maathi olunga podu.. illena sema adi vaanguva..
Makkal ennai pathi thappa nenika poraanga..
Nice da..
This week the story is slow and steady...
And congrats for completing upto 23episodes..
Im sure the story will be dynamic from +11..... :)
Post a Comment