Tuesday, October 14, 2008

'சேட்டை'ய ராஜாக்கள் - 24

ஷங்கர், அவன் பிடித்த பிடியில் உறுதியாக இருந்தான். என்னதான் ஷங்கர் கூறும் காரணங்கள் ஞாயமாகப் பட்டாலும், யாருக்கும் பள்ளியை மாற்றுவதில் உடன்பாடு இல்லை. முடிந்தவரையில் பேசி சமாதானப்படுத்தலாம் என்று நினைத்திருந்தனர்.+1 வகுப்பிற்கான விண்ணப்பங்கள் அனைத்து பள்ளிகளிலும் கொடுக்க ஆரம்பித்திருந்தார்கள்.

பத்தாம் வகுப்பு தேர்வு மதிப்பெண் பட்டியலை பள்ளியில் வாங்கிக்கொண்டு, அனைவரும் நேராக பாபு வீட்டிற்கு சென்றனர்.


ஷங்கர் : டவுன் ஹை ஸ்கூல்ல அப்ளிகேஷன் வாங்கப்போறேன். யாருக்கெல்லாம் வேணும்?


பாபு : டேய், எதுக்கு டா இப்போ ஸ்கூல் மாத்தணும்னு அடம் புடிக்கிற?


ஷங்கர் : பத்தாவது படிக்கும் போதே இவ்வளவு பாடு படுத்துனாங்க. இன்னும் +2 போனா அவ்வளவு தான். இது தான் கடைசி சான்ஸ். இதை விட்டா, இன்னும் ரெண்டு வருஷம் இங்கே தான் குப்பை கொட்டணும்.


பாபு : இனிமே வேற ஸ்கூலுக்கு மாறி, அங்கே எல்லார்கிட்டயும் பழகி....


ஷங்கர் : டேய், நீங்களே சொல்லுங்க டா.... இந்த ஸ்கூல்- நம்மள என்னைக்காவது 10வது படிக்கிற பசங்க மாதிரி நடத்திருக்காங்களா? என்னமோ நாலாவது படிக்கிற பசங்க மாதிரி தான் நடத்துறாங்க.


குமார் : அது சரி தான் டா, ஆனா இங்கே எல்லா டீச்சர்சையும் தெரியும், நல்லா பழகியாச்சு....


ஷங்கர் : அங்கேயும் போய் பழகிடலாம்....


பாலா : எங்க வீட்ல ஒத்துக்க மாட்டாங்க டா...


ஷங்கர் : நீங்க யாருமே வரலேன்னா கூட, நான் நிச்சயமா மாறப்போறேன். இன்னும் ரெண்டு வருஷம், வெறும் படிப்பு படிப்புன்னு பைத்தியமாக்கிருவாங்க. ஒரு 'ஆனுவல் டே' கூட நடக்கல. என்ன ஸ்கூல் டா இது?


பாபு : அடுத்த வருஷம் நிச்சயமா 'ஆனுவல் டே' இருக்கும். நம்ம மேடம் கிட்ட பேசலாம்.


ஷங்கர் : வருஷ கடைசியில வர்ற 'ஆனுவல் டே'க்காக, வருஷம் பூரா டார்ச்சர் அனுபவிக்கணுமா? அப்படியே அது நடந்தாலும், சினிமா பாட்டு பாடக்கூடாது, அது, இதுன்னு உயிரெடுப்பாங்க.


குமார் : டேய், அடுத்த வருஷம் நம்ம ஸ்கூல்- நிறைய ஆக்டிவிடீஸ் பண்ணலாம் டா...


ஷங்கர் : ஒரு ம**ம் பண்ண முடியாது. வாரத்துக்கு ஒரு தடவை திருச்சியில இருந்து ஒருத்தன் கிட்டாரைத் தூக்கிட்டு வருவான். அவன் சர்ச்- வந்து மொக்கை போடறதை கேக்கலாம். அது தான் அங்க நடக்குற உச்சக்கட்ட ஆக்ட்டிவிட்டி..


மறுநாள்....ஷங்கர் வீடு.


ஷங்கர், ‘டவுன் ஹை ஸ்கூல்’ பள்ளியின் விண்ணப்பத்தை நிரப்பிக்கொண்டிருந்தான். குமார் அங்கு வந்தான்.


குமார் : இந்தா, இதையும் ஃபில் பண்ணு. (அவர்கள் பள்ளியின் விண்ணப்பத்தை கொடுத்தான்)


ஷங்கர் : நான் தான் ஸ்கூல் மாறப்போறேன்னு அப்போவே சொன்னேனே. எனக்கு இந்த அப்ளிக்கேஷன் வேண்டாம்.


குமார் : டேய், நான் சொல்லற விஷயத்தை முதல்ல கேளு. அப்புறம் நீயே முடிவு பண்ணிக்கோ.


ஷங்கர் : .......


குமார் : நேத்து நீ அப்படி சொல்லிட்டுப் போன உடனேயே, பாபு ஸ்கூலுக்குப் போய் லீலா மிஸ் கிட்ட பேசியிருக்கான். அடுத்த வருஷம் நம்ம ஸ்கூல் சார்புல நிறைய போட்டிகள்ல கலந்துக்க, +1 பசங்களை அனுப்பப்போறாங்களாம். அது மட்டும் இல்ல, நம்ம ஸ்கூல்லயே சிலஈவன்ட்ஸ்’ நடத்த ப்ளான் வெச்சிருக்காங்களாம்.


ஷங்கர் : என்ன? ஜெபக்கூட்டம் நடத்தப்போறாங்களாமா? காதுல பூ.....


குமார் : நான் கூட முதல்ல நம்பல. இந்த திடீர் மாற்றத்துக்கு காரணம், ARR ஸ்கூல் இருந்து நம்ம ஸ்கூலுக்கு வந்திருக்குற ஹில்டா மேடம் தான். அவங்க தான் இப்போ புது வைஸ்-பிரின்சிபால்.


ஷங்கர் : ............


குமார் : நீ மட்டும் தனியா போய் என்னடா பண்ணுவ? பேசாம வா... நாங்க யாருமே இன்னும் அப்ளிக்கேஷன் போடல.... உனக்காக தான் வெயிட் பண்ணறோம்....


ஷங்கர் : ............


குமார், காத்துக்கொண்டிருந்தான். சிறிது நேரத்திற்குப் பிறகு, குமார் கொடுத்த விண்ணப்பத்தை எடுத்து, நிரப்பத்தொடங்கினான்.


பாபு,நட்டு,பாலா ஆகியோர் 'பயாலஜி'பிரிவை எடுத்திருந்தனர். மற்ற மூவரும், "கம்ப்யூடர்" பிரிவை எடுத்திருந்தனர். விண்ணப்பத்தில், பெற்றோர் கையெழுத்து அவசியம் தேவை. ஆனால், ஷங்கரின் பெற்றோர் ஊரில் இல்லாததால், அவன் இரெண்டு நாள் கழித்து விண்ணப்பிப்பதாகக் கூறினான்.


குமார் : அதெல்லாம் வேண்டாம். உங்க அப்பா கையெழுத்து இல்லேன்னா என்ன? நீயே போடு.


ஷங்கர் : டேய்......இதெல்லாம் ரொம்ப ஓவர்.


குமார் : நீ எப்போ டா இவ்வளவு நல்லவன் ஆன?? இதெல்லாம் நமக்கு சகஜமாச்சே..


ஷங்கர் : அப்படி என்னடா அவசரம்?


குமார் : டேய், இந்த வருஷம் வேற ஸ்கூல் பசங்க நிறைய பேரு நம்ம ஸ்கூலுக்கு வர்றாங்க. எதுக்கு வம்பு? நமக்கே சீட் இல்லாம போச்சுன்னா?


ஷங்கர் : பெரிய ஆக்ஸ் ஃபோர்டு யுனிவெர்சிடி......சீட் கிடைக்காம போறதுக்கு.


குமார் : நம்ம ஊருக்கு இது தான் டா ஆக்ஸ் ஃபோர்டு. இந்த டப்பா இங்கிலீஷைக் காட்டி டபாய்ச்சிக்கிட்டு இருக்காங்க.


(கேட் திறக்கும் சத்தம் கேட்டது)


ஷங்கர் : யாருன்னு பாரு....


கிருஷ்ணா, நட்டு, பாபு, பாலா எல்லாம் சேர்ந்து வந்தனர். அனைவரிடமும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இருந்தன.


ஷங்கர் : எல்லாரும் ஒரு முடிவோட தான் வந்திருக்கீங்களா?


கிருஷ்ணா : ஆமா டா....இப்போவே நம்ம எல்லாரும் சேர்ந்து போய் குடுத்திருவோம்...


ஷங்கர் : எங்க அப்பா கிட்ட சொல்லவே இல்ல டா... நானே எங்க அப்பா கையெழுத்து போட்டுட்டேன்.


கிருஷ்ணா : சரி, போன் பண்ணி சொல்லிடு. சிம்பிள்….


பள்ளி நுழைவுவாயில்....


ஏகப்பட்ட கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது. அனைத்து வகுப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்தது.


ஒரே ஒரு கம்பிகளால் அடைக்கப்பட்ட ஜன்னல், அதில் ஒருவர் மட்டுமே கை நுழைக்கக்கூடிய அளவில் ஒரு ஓட்டை. இது தான் ஒட்டு மொத்த பள்ளியின் "ஸ்டோர்ஸ்" மற்றும் "ஆபீஸ் ரூம்". 50 பைசாமேப்’ வாங்க வேண்டுமென்றாலும் சரி, சேர்க்கைக்கான கட்டணம் செலுத்த வேண்டுமானாலும் சரி, LKG முதல் +2 வரை, அனைவரும் அங்கு தான் வர வேண்டும். அங்கு இருந்த நீண்ட வரிசையில் நின்று பணம் செலுத்திவிட்டு, அந்த ரசீதை பெற்றுக்கொண்டனர். விண்ணப்பங்களை, ஒருவர் பின் ஒருவராக மேடத்தை நேரில் பார்த்து தான் கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.


ஒவ்வொருவரும் மேடத்தின் அறைக்குள் சென்று விண்ணப்பத்தைக் கொடுத்துவிட்டு வந்தனர். ஷங்கரின் முறை வந்தது. அவன் உள்ளே சென்றான்.


பாபு : நம்ம போட்ட 'பிட்டு' நல்லா வொர்க்-அவுட் ஆயிருக்கு போல இருக்கு?


குமார் : ஆமா டா... அவனை நம்ப வைக்கிறதுக்குள்ள..... யப்பா.....


பாபு : ஒரு வழியா அவன் மனசை மாத்தியாச்சு....


குமார் : டேய், நம்ம இப்படி கலர் கலரா ரீல் விட்டது தெரிஞ்சா முதல்ல என்னை தான் டா அடிப்பான்....


பாபு : பாத்துக்கலாம்....


ஷங்கர், வெளியில் வந்தான்.


பாபு : என்னடா, குடுத்துட்டியா?


ஷங்கர் : மேடம், என்னை பயாலஜியில சேர சொன்னாங்க.எங்க அப்பா மாதிரி நான் டாக்டருக்கு படிக்கணுமாம்.


பாபு : அய்யய்யோ....நாடு தாங்காது.


ஷங்கர் : டேய், உன்ன மாதிரி ரூபி 'மிஸ்'ஸை சைட் அடிக்கிறதுக்காக நான் பயாலஜி குரூப் எடுக்க முடியுமா? எனக்கு அதுல உண்மையிலேயே இன்ட்ரெஸ்ட் இல்ல... எங்க அப்பா சம்மதத்தோட தான் நான் கம்ப்யூட்டர் குரூப் எடுக்குறேனான்னு கேட்டாங்க. நான் ஒரே ஒரு வார்த்தை சொன்னேன், உடனே சரின்னு என் அப்ளிகேஷனை வாங்கிட்டாங்க.


பாபு : என்னடா சொன்ன?


ஷங்கர் : (தலைவர் ஸ்டைலில்)உண்மையை சொன்னேன்.....


அடுத்த பதிவில்.... +1 சேட்டைகள் ஆரம்பம்.

5 comments:

Anonymous said...

the way u write the story is good from the first episode.. its excellent now na

Unknown said...

All the conversations are very much practical...Good da...

Anonymous said...

கௌரி...
அப்படி என்ன உண்மை'ய சொன்ன?

Bala said...

Nalla velai.. Naama school maarala

Like any one, +1,+2 dhaan namaku golden moments..Settaiya rajakal story um ithoda mudinjirukum..

Aana 10th public last exam aniki idhu dhaan studenta indha school ku vara last time lam solli enna peela uttom...

Anonymous said...

Kadhai migavum arumaiyaga ullathu.
Why dont you have Bala, natraj,krishna,Babu and sankar to write one episode each :)