'சேட்டை'ய ராஜாக்கள் - 12
கீழே விழுந்த பி.டி. வாத்தியார், வேகமாக எழுந்தார். குமாரின் நகம் பட்டு அவர் கையில் கீறல் விழுந்திருந்தது. அதிலிருந்து லேசாக இரத்தம் எட்டிப்பார்த்தது. கோபம் தலைக்கேற, அவமானம் வேறு பிடுங்கித் தின்ன, என்ன செய்வது என்று தெரியாமல், அந்த இடத்தை விட்டு வேகமாக நடந்தார். ஏதோ பெரிதாக நடக்கப் போகிறது என்று மட்டும் தெளிவாக விளங்கியது குமாருக்கு. பிரேயர் நடந்துகொண்டிருப்பதால் யாருடனும் எதுவும் பேச முடியவில்லை. தனக்கு முன்னால் நின்று கொண்டிருந்த ஷங்கரிடம் "இன்னைக்கு எனக்கு நேரமே சரியில்ல" என்றான். அந்த 45 நிமிடங்கள் கழிவது சிரமமாக இருந்தது.
பிரேயர் முடிந்தவுடன், ஷங்கர், பாபு, நட்டு, பாலா அனைவரும் குமாரை சூழ்ந்துகொண்டனர். "டேய், என்னடா நீ.... நம்ம "மாடு ஓட்டி மன்னார்சாமி"ய தள்ளி விட்டுட்ட...." என்றான்
"நான் தள்ளி விடல டா... அந்த ஆளே விழுந்துட்டான்..."
எந்த நேரமும் 'ஆயா' மூலம் அழைப்பு வரலாம் என்பதால் வகுப்பில் வந்து அமர்ந்ததிலிருந்து திகிலோடு காத்துக்கொண்டிருந்தான் குமார்.
"யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே" என்னும் பழமொழிக்கேற்ப, சாவிக்கொத்து சத்தம் குலுங்க, "மேடம்" அங்கு வந்தார். நேராக குமாரை நோக்கி சென்றார். கையில் வைத்திருந்த நீளமான பிரம்பை எடுத்து குமாரின் கழுத்தில் வைத்து, அப்படியே அவனை வகுப்பின் வெளியில் தள்ளினார். போலீஸ், திருடனை தள்ளிக் கொண்டு வருவதைப் போல இருந்தது மற்ற மாணவர்களுக்கு.
குமாரை வகுப்பின் வெளியில் நிறுத்திவிட்டு ஒரு வார்த்தை கூட பேசாமல் திரும்பிச் சென்றார் மேடம். அவர் வந்து சென்றபின் வகுப்பு ஆரம்பித்தது. காலையில் நடைபெற்ற அனைத்து வகுப்புகளிலும் குமார் வெளியிலேயே நின்றான். 12.45க்கு மதிய உணவு இடைவேளைக்கான மணி அடித்ததும், குமார் வகுப்பினுள் வந்தான்.
"டேய், நானும் மேடம் வரும்போது போகும்போதெல்லாம் பின்னாலேயே போய், நடந்ததை சொல்லி பாக்குறேன், அவங்க காதுலையே வாங்கிக்க மாட்டேங்கிறாங்க" என்றான்.
ஷங்கர், "சரி, இப்போ என்ன பண்ணப்போற?" என்று கேட்டான்.
"தெரியல. நான் இப்போ கிளம்பி வீட்டுக்குப் போறேன். இன்னும் அரை நாள் எல்லாம் என்னால வெளியில நிக்கமுடியாது"
"டேய், இப்போ நீ கிளம்பினா பிரச்சனை அதிகமாயிடும்...."
"அதெல்லாம் ஒண்ணும் ஆகாது டா... என்னால வெளியில நிக்க முடியாது, நான் கிளம்புறேன்" - சொல்லிவிட்டுக் கிளம்பினான் குமார்.
உணவு இடைவேளை முடிந்தவுடன் வகுப்புகள் நடைபெறத் துவங்கின. முன்பு எதிர்ப்பார்த்தது போல், ஆயா வந்து, குமாரை மேடம் அழைப்பதாக சொல்ல, அவன் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. அனேகமாக குமாரைப் பற்றி விசாரிக்க, அடுத்த அழைப்பு தனக்காகத் தான் இருக்கும் என்று ஷங்கர் நினைத்துக்கொண்டான். ஆனால், பள்ளி முடியும் வரை எந்த அழைப்பும் வரவில்லை. பள்ளி முடிந்ததும், அனைவரும் பள்ளி மைதானத்தில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அரையாண்டு பரீட்ச்சை இன்னும் ஒரு வாரத்தில் துவங்கவிருப்பதால், நட்டின் வீட்டில் "குரூப் ஸ்டடி" செய்வதென்று முடிவானது.
ஷங்கர், வீட்டிற்கு வந்து வேகமாக சாப்பிட்டுவிட்டு, உடை மாற்றிக்கொண்டு குமார் வீட்டிற்குச் சென்றான். தன் பைக்கில் குமாரை ஏற்றிக்கொண்டு, இருவரும் கிருஷ்ணா வீட்டை நோக்கிச் சென்றனர்.
வண்டியை ஓட்டிக்கொண்டிருந்த ஷங்கர், "உன்னைத் தேடி ஆயா வந்தாங்க...." என்றான்.
"போச்சுடா.... நாளைக்கு செத்தேன்" என்றான் குமார்.
கிருஷ்ணாவின் வீட்டை சென்றடைந்தனர். டி.வி. பார்த்துக்கொண்டிருந்த கிருஷ்ணா, எழுந்து வந்து கதவைத் திறந்தான். மூவரும் வீட்டின் ஹாலில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர். கிருஷ்ணாவின் அம்மா, மூவருக்கும் தேநீர் கொடுத்தார்.
அதைக் குடித்த கிருஷ்ணா, "என்னம்மா டீ போட்டிருக்க? என் சாய்ரா பானு எவ்வளவு நல்லா டீ போடுவா தெரியுமா??" என்றான்.
"டேய், நீ அடங்கவே மாட்டியா?" என்றான் ஷங்கர்.
"இப்படித்தான்... இவன் ஏதாச்சும் சொல்லிக்கிட்டே இருக்கான்ப்பா..." என்றார் கிருஷ்ணாவின் அம்மா.
"சும்மா வம்பிழுக்குறான் ஆண்ட்டி... அதெல்லாம் ஒண்ணுமில்ல..." என்றான் ஷங்கர்.
"நீங்க எல்லாரும் பாத்துக்கிட்டே இருங்க.... ஒரு நாள் திடீர்ன்னு நான் அவளை கூட்டிக்கிட்டு வரத்தான் போறேன்...." என்றான் கிருஷ்ணா.
"வாயை மூடு..." என்றார் அவன் அம்மா.
"அவளுக்காக நான் என்ன வேணும்னாலும் செய்வேன்.... மதம் கூட மாறுவேன்..... 'கிருஷ்ணா'ங்குற என் பேரை மாத்தி 'காதர்'ன்னு வெச்சிக்குவேன்" என்றான்.
"ஐயோ.... கடவுளே" என்று தலையில் அடித்துக் கொண்டு உள்ளே சென்றார் அவர்.
"அதை முதல்ல பண்ணு..... நீ முஸ்லிமா மாறின உடனே கல்யாணம் பண்ணி வெச்சிருவாங்கன்னு நினைப்பா?? இந்த கல்யாணத்துக்கு முன்னாடி, இன்னொரு கல்யாணம் பண்ணி வைப்பாங்க.... தெரியுமா?? என்று கேட்டான் ஷங்கர்.
"அது என்னடா கல்யாணம்?" என்று ஆர்வமாக கேட்டான் கிருஷ்ணா.
"அது தெரியாதா?? அது தான் டா ‘கட்டிங்’ கல்யாணம்...." என்றான் குமார்.
"அப்படின்னா??"
"வெட்டிருவாங்க...." என்றான் ஷங்கர். அதைக்கேட்டு அதிர்ச்சியானான் கிருஷ்ணா.
"சரி சரி, கிளம்புங்க.... நட்டு வீட்டுக்குப் போகலாம்" என்றான்.
நட்டு வீட்டில் அனைவரும் கூடினர். "க்ரூப் ஸ்டடி" என்ற பெயரில் நட்டு வீட்டில் கும்மாளம் அடிப்பது வழக்கம். அனைவரும் ஒன்று கூடினால், எப்போதுமே "க்ரூப்" இருக்கும், ஆனால் "ஸ்டடி" இருக்காது.
"என்னடா, இந்த ஸ்கூல்ல 'ரவுடியிசம்' பண்ணறது இவ்வளவு கஷ்டமா இருக்கு... தெரியாத்தனமா அந்த பி.டி. வாத்தியார இவன் தள்ளிவிட்டுட்டான். அதுக்கு ஓவரா சீன் போடறாங்களே..." என்றான் ஷங்கர்.
"டேய், மறுபடியும் நான் தள்ளி விட்டேன்னு சொல்லாத டா... அந்த ஆளு தடுமாறி விழுந்துட்டான்..." என்றான் குமார்.
"சரி, ஏதோ ஒண்ணு.... நீ கவலைய விடு... எப்படியும் பரீட்ச்சை வருது.... இன்னும் ரெண்டு நாள் சமாளிச்சிட்டா, அப்புறம் மேடம் மறந்துடுவாங்க" என்றான் ஷங்கர்.
அனைவரும் அதை ஆமோதித்தனர்.
"அந்த ஆளுக்கு ஏன் டா மாடு ஓட்டி மன்னார்சாமின்னு பேரு வந்தது?" எனக் கேட்டான் பாலா.
"சும்மா பசங்களை மாடு மாதிரி 'ஏய்' , 'ஏய்' ன்னு கத்தி மேய்ச்சிக்கிட்டு இருப்பாரு. அதனால தான்..." என்றான் பாபு.
"டேய் நட்டு, உங்க வீட்டுக்கு இத்தனை பேர் வந்திருக்கோம்.... சாப்பிட ஏதாவது கொண்டு வரணும்ன்னு அறிவு இல்ல? போ…. ஏதாச்சும் எடுத்துட்டு வா" என்று விரட்டினான் கிருஷ்ணா.
"வீட்ல யாரும் இல்ல டா" என்றான் நட்டு.
"அதான் தெரியுமே... உங்க அம்மா மட்டும் இந்நேரம் இருந்திருந்தா சுடச்சுட டீ குடுத்திருப்பாங்க" என்றான் பாபு.
"டேய், 'என்றென்றும் காதல்'ன்னு ஒரு குப்பை படம் வந்திருக்கு...." என்று அரட்டையை துவங்கினான் பாலா.
இப்படி படிப்பைத் தவிர மற்ற விஷயங்களை அனைவரும் பேசிக்கொண்டிருக்க, குமாருக்கு மட்டும் அடுத்த நாள் பள்ளியில் இந்த பிரச்னையை எப்படி சமாளிப்பது என்று கவலையாக இருந்தது.
தொடரும்...
6 comments:
hey unga PT masterku super title po..... story nalla thaan poguthu....
everyone wil rmbr their school days on reading ur episodes....
really i liked this episode more when compared to others da
Hi Gowri..
Enda Konjam Konjama Ezhuthare?
Neraya Ezhutha Koodatha???
:)
Gowri- I remember he involved in a collision with somebody, but who is that great soul?
Nets
dei namma rowdism pathi chinna pullainga padicha kettu poida poranga da..
this blog is only for adults nu advertise panidalam? lol
too long... kanchipuram pattu mathiri...
Post a Comment