'சேட்டை'ய ராஜாக்கள் - 13
குற்றவாளிக் கூண்டு என்று அழைக்கப்படும் 'மேடம் அறை'யில் நின்று கொண்டிருந்தான் குமார். ஆயிரம் வாலா சரவெடி போல், இடைவிடாது பத்து நிமிடங்கள் திட்டி முடித்ததும், வாடிக்கையாக அவர் சொல்லும் “Bring your parents tomorrow” என்ற வசனத்தைப் பேசி முடித்தார். இது ஒன்றும் புதிதில்லை என்றபோதும், இந்த முறை கொஞ்சம் பெரிய பிரச்சனையில் மாட்டிக்கொண்டிருப்பதால், நிச்சயமாக தப்பிக்க முடியாது என்று தோன்றியது. நேராக வகுப்பிற்கு வந்தான்.
"என்னடா, வழக்கம் போல தானே?" என்றான் ஷங்கர்.
"ஆமா டா... அப்பா அம்மாவைக் கூட்டிட்டு வர்ற வரைக்கும் என்னைத் தரையில உட்காரச் சொல்லியிருக்காங்க. இந்த வாட்டி எஸ்கேப் ஆக முடியாது போல இருக்கே...."
"பேசாம வீட்ல சொல்லிடு.... உங்க அப்பாவை வந்து பாக்க சொல்லு. பிரச்சனை முடிஞ்சிரும்"
"டேய், அது எல்லாம் முடியாது.... இன்னும் மூணு நாள்ல பரீட்ச்சை ஆரம்பம் ஆகுது. இன்னும் ரெண்டு நாள் சமாளிச்சிட்டா போதும்"
"சரி, என்ன பண்ண போற?"
"வழக்கம் போல தான்..... நாளைக்கு லீவு போட்டுருவேன்"
இரெண்டு நாட்களுக்கு பிறகு.....
பரீட்சை துவங்கியது. பத்தாம் வகுப்பின் இரெண்டு செக்ஷன்களில், நன்றாக படிக்கக்கூடியவர்கள் என்பதால், அரையாண்டு பரீட்சை முடிந்தவுடன் இவர்கள் வகுப்பிற்கு மட்டும் பத்து நாட்கள் விடுமுறை அறிவித்திருந்தார்கள். மற்றுமொரு செக்ஷனுக்கு "ஸ்பெஷல் க்ளாஸ்" உண்டு என்று மேடம் அறிவித்திருந்தார்.
எதிர்பார்த்தபடி மேடம் குமாரைப் பற்றி மறந்துவிட்டிருந்தார். ஆனாலும், கடைசி பரீட்சை முடியும் வரை கொஞ்சம் பயமாகவே இருந்தது.
கடைசி பரீட்சையான "ஜியோக்ராபி" பரீட்சையன்று ஷங்கரும் மற்றவர்களும் நிறைய திட்டம் தீட்டியிருந்தார்கள். பரீட்சை முடிந்த கையேடு கிரிக்கெட் விளையாடுவது என்று முடிவெடுத்திருந்தனர். 'பெட்' மேட்சுக்காக அம்மாசத்திரம் டீமுடன் பேசிவிட்டு வந்திருந்தான் கிருஷ்ணா.
பரீட்ச்சை எழுதவிருக்கும் வகுப்பின் முன்னால் நின்று கொண்டு, பரீட்ச்சை ஆரம்பிக்கும் முன் கடைசி கட்ட 'நுனிப்புல் மேய்தலை' செய்து கொண்டிருந்தார்கள். கண்காளிப்பாளராக யார் வருகிறார்கள் என்பதைப் பொறுத்தே பரீட்சைக்கு 'பிட்' எடுத்துச் செல்வது முடிவு செய்யப்படும். கண்டிப்பான ஆசிரியர்கள் வந்தால், 'பிட்'டை வெளியிலேயே விட்டுவிட்டுச் சென்று விடலாம் என்பதால், கடைசியாக வகுப்பினுள் நுழைவதே சிறந்த நுணுக்கமாக இருந்தது..
தேர்வு எழுதுவோர் வரிசையின்படி, கிருஷ்ணா, பாலா, ஷங்கர், ஆகிய மூவர் ஒரு வகுப்பிலும், குமார், பாபு, நட்டு ஆகியோர் வேறு வகுப்பிலும் தேர்வு எழுதும்படி இருந்தது. ஷங்கர் வகுப்பிற்கு எலிமெண்டரி வகுப்பின் ஆசிரியர் கண்காளிப்பாளராக வரவே, அவர்களுக்கு உற்சாகம் பற்றிக்கொண்டது. பொதுவாக, ஆறாம் வகுப்பைத் தாண்டிவிட்டாலே, எலிமெண்டரி வகுப்புகளைக் கையாளும் ஆசிரியர்களை ஏளனமாகப் பார்ப்பது வழக்கம். பரீட்சை கண்காளிப்பளராக வேறு வந்துவிட்டால், சொல்லவே தேவையில்லை. அனைவரும் 'பிட்டு'களை எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டனர். சிலர், மேலும் ஒரு படி சென்று புத்தகத்தின் பக்கத்தையே கிழித்து அவசர அவசரமாக சட்டைக்குள் திணித்துக்கொண்டிருந்தனர்.
டிசிப்ளின் சார், வழக்கம்போல ரோந்து வந்து வெளியில் நின்று படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களையெல்லாம் வகுப்பிற்குள் துரத்திக் கொண்டிருந்தார். ஷங்கர், கிருஷ்ணா, பாலா மூவரும் அடுத்தடுத்த பெஞ்ச்சுகளில் அமர்ந்திருந்தார்கள். ஒரு பெஞ்ச்சில், பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவனும், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவனும் அமர்த்தப்பட்டிருந்தார்கள்.
மணி அடித்தவுடன், ஆசிரியர் வினாத்தாள்களை விநியோகிக்கத் தொடங்கினார். பரீட்சை எழுத ஆரம்பிக்கும் முன், மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர். மூவருக்கும் அன்று விளையாடப் போகும் மேட்ச்சிலேயே கவனம் இருந்தது.
'காப்பி' அடிப்பதற்கு பொருத்தமான நேரம், கடைசி அரை மணிநேரம் தான் என்பது உலகறிந்த ரசகியம். அந்த கடைசி முப்பது நுமிடங்களுக்காக காத்துக் கொண்டிருந்த அனைவரும், ஆசிரியர், "கடைசி நிமிடங்கள்" என்று அறிவித்ததும், தங்கள் வேலையை காட்டத் துவங்கினர். பதுக்கி வைக்கப்பட்டிருந்த 'பிட்டு'கள் எல்லாம் பாயத் துவங்கின. பரீட்சை நடக்கிறது என்ற உணர்வே இல்லாமல், பாலாவிற்கும் ஷங்கருக்கும் இடையே விடை பரிமாற்றம் நடந்துகொண்டிருந்தது.
முன்னால் அமர்ந்திருந்த பாலாவை அழைத்தான் ஷங்கர். பாலா மும்முரமாக அவனுக்கு முன்னால் அமர்ந்திருந்த மாணவனைப் பார்த்து காப்பி அடித்துக் கொண்டிருந்ததில், ஷங்கரின் குரல் அவனுக்குக் கேட்கவில்லை. பொறுத்து பொறுத்துப் பார்த்த ஷங்கர், தன் இருக்கையை விட்டு எழுந்து, பாலாவின் தலையில் ஓங்கி அடித்தான். பாலா தலையை தடவிக்கொண்டே திரும்பிப் பார்க்கையில், ஆசிரியர் முறைத்துக் கொண்டே நின்று கொண்டிருந்தார்.
முகத்தில் கோபம் கொப்புளிக்க, "வாட் இஸ் திஸ்?" என்றார்.
ஷங்கரும் பாலாவும் தங்கள் இருக்கையை விட்டு கூட எழாமல் அமர்ந்தபடி இருந்தனர். ஷங்கர் மட்டும் ஏளனமாக "நத்திங்" என்றான்.
இந்த பதில், அவரை மேலும் கடுப்பேற்றியது. பதிலேதும் பேசாமல், அங்கிருந்து சென்றார். பரீட்சை முடியும் நேரமானதால், "நேம் ஸ்லிப்" எனப்படும் பெயர் எழுத பயன்படும் சிறு காகிதத் துண்டையும், அதை விடைத்தாளுடன் கோர்ப்பதற்கு ஒரு நூலையும் மாணவர்களுக்கு விநியோகம் செய்யத்துவங்கினார். ஆசிரியர் தன் வேலையைச் செய்ய, ஷங்கரும் பாலாவும் அவர்கள் வேலையைத் தொடர்ந்தனர். அந்த ஆசிரியரை கொஞ்சம் கூட மதிக்காமல், எதுவுமே நடக்காதது போல், மீண்டும் இருவரும் விடைகளை பரிமாறிக் கொள்வதும், கிண்டலடித்து சிரித்துக் கொள்வதுமாய் இருந்தனர். கொஞ்ச நேரத்தில், கிருஷ்ணாவும் இவர்களுடன் சேர்ந்துகொண்டான்.
உச்சக்கட்டமாக, பேப்பரை சுருட்டி ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு விளையாட ஆரம்பித்தனர். சிறிது நேரத்தில் மணி அடிக்கவே, அனைவரின் விடைத்தாள்களையும் வாங்கத் தொடங்கினார் ஆசிரியர். கிருஷ்ணா, ஷங்கர், பாலா மற்றும் அவனுக்கு முன்னால் அமர்ந்திருந்த இருவரின் விடைத்தாள்களை மட்டும் தனியாக எடுத்து வைத்துக்கொண்டார்.
பரீட்சை முடிந்தது என்ற சந்தோஷத்துடன், மாலையில் தாங்கள் ஆடப்போகும் 'பெட்' மேட்சுக்காக தங்களை தயார்படுத்திக் கொண்டிருந்தனர். நேரடியாக பள்ளியிலிருந்து அம்மாசத்திரம் செல்வதாக இருந்ததால், கிரிக்கெட் மட்டை, ஸ்டாம்புகள் ஆகியவற்றை எடுத்து வந்து பள்ளிக்கு அருகே இருக்கும் இளங்கோவின் வீட்டில் வைத்திருந்தனர்.
பரீட்ச்சை முடிந்து ஆறு பேறும் ஒன்றாக கூடி, சம்பிரதாயத்துக்காக ஒரு ஐந்து நிமிடங்கள் பரீட்சையைப் பற்றி பேசிவிட்டு, மேட்சுக்குக் கிளம்பினார்கள். அவர்கள் கிளம்பி நடக்கத்தொடங்கியதும், ஆயா வந்து வழிமறித்தார். கிருஷ்ணா, பாலா, ஷங்கர் மற்றும் இருவரின் பெயரைக் குறிப்பிட்டு,
"உங்களை எல்லாம் இப்போ உடனே மேடம் வந்து பாக்க சொல்றாங்க" என்றார்.
தொடரும்....
3 comments:
hey story ipo inum interestingaa iruku... annalum unaku kolupu than....
enna than elementary staff vandathukaga ipadiya copy adikirathu... konjamum avara mathikaama!!!!!
oru section ku fulla leave, inoru section ku spl class... ithellam enna kodumai ithu gowriiiiii.....
seri ne eppadithan andha schoola padichiyo sorry samaalichiyoo....
pathadhathuku indha ayaa vera, apo apo ungala kupidurathuku.....
unga princy sema comedy....
hey konjam school photosa release pannu.... episode inum nalla pogum.....
Dai
Exact description of our exam scenes…
And really the deciding factor wil be the supervisor….How true!!!!!!!!!
evvulavu seriousana situation vandhalam, andha tensionlayum cricket matchukkum equal importance koduthu irukkuppadhu kurippida thaakka oru vishayam :)
pootu kuduthutada andha elimentry--:D... btw,
Indha pricipalsku oru typea english irukka thaan seiyuthu...
In my skool:
Princi: "If u do anymore mischief, i will immediately be asked to sent home.. "
students:"Pogavendiyathu thaanae.."
Post a Comment