'சேட்டை'ய ராஜாக்கள் - 10
நட்டும் பாலாவும் ஒரு வழியாக பள்ளியை அடைந்தனர். "ஒரு வழியா வந்து சேர்ந்துட்டோம்" பெருமூச்சு விட்டான் பாலா. மணி அடிக்க இன்னும் பதினைந்து நிமிடங்கள் இருந்தன. வகுப்பில் இரெண்டு மூன்று பேர் மட்டும் இருந்தார்கள்.
"இந்த விஷயத்தை முதல்ல பசங்ககிட்ட சொல்லணும்" என்றான் பாலா.
"கிண்டல் பண்ணுவாங்க.... முக்கியமா கிருஷ்ணா ஓவரா பேசுவான்" என்றான் நட்டு.
"டேய், இப்போ அதுவா முக்கியம்? உனக்கு சைக்கிள் வேணுமா வேண்டாமா?"
நட்டு பதில் பேசவில்லை.
9.10 வரை யாருமே வரவில்லை. சரியாக மணி அடிப்பதற்கு இரெண்டு நிமிடங்களுக்கு முன்பு ஷங்கர், பாபு, குமார் எல்லோரும் ஒன்றாக வந்தார்கள்.
"என்னடா இவ்வளவு லேட்டு?" என்றான் பாலா.
"இன்னைக்கு ஒரு நாள் நீ சீக்கிரமா வந்துட்டு எங்களை கேள்வி கேக்குற" என்றான் பாபு.
"முக்கியமான விஷயம் பேசணும். நேத்து பிரச்சனை ஆயிடிச்சு"
"என்ன பிரச்சனை?" ஷங்கர் கேட்கும்போதே மணி அடித்தது. "சரி, இன்னைக்கு ஆத்தா பீரியட் இருக்கா??" என்றான்.
"இருக்கு. ரெண்டாவது பீரியட்" என்றான் பாலா.
"சரி, அப்போ பேசிக்கலாம்" என்று சொல்லிவிட்டு, எல்லோரும் பிரேயருக்குக் கிளம்பிச் சென்றனர். பிரேயர் முடிந்து வகுப்பிற்குத் திரும்புகையில், கிருஷ்ணா வழக்கம் போல தாமதமாக வந்து சேர்ந்தான்.
முதல் வகுப்பு, வகுப்பாசிரியையான வானதியின் வகுப்பு. அவர் வகுப்பில் பேசிக்கொள்ள முடியாது என்பதால், அடுத்த வகுப்பிற்காக அனைவரும் காத்திருந்தனர். மணி அடித்து அவர் வெளியே சென்றதும், அதற்காகவே காத்திருந்தது போல பாலா பின் வரிசையில் அமர்ந்திருந்த ஷங்கருக்கு அருகில் வந்து அமர்ந்தான்.
பத்து நிமிடங்கள் கழிந்த பின்னர், மாணவர்களால் 'ஆத்தா' என்று அன்பாக அழைக்கப்படும் வரலாறு பாடம் எடுக்கும் ஆசிரியை வகுப்பிற்குள் நுழைந்தார். அதற்குள் பாலா, ஒரே மூச்சில் நடந்ததை எல்லாம் கூறிவிட்டிருந்தான். ஆசிரியர் தன் நாற்காலியில் அமர, இவர்கள் விவாதத்தைத் தொடர்ந்தனர்.
"சைக்கிளை எடுக்கப் போகும் போது அந்தப் பசங்க பிரச்சனை பண்ணுவாங்க" என்றான் பாலா.
இதைக்கேட்டு முன்னால் அமர்ந்திருந்த நட்டிற்கு வயிற்றில் புளியைக் கரைத்தது.
"டேய், அவனுங்களுக்கு இதே வேலையா? அதெல்லாம் பண்ண மாட்டாங்க" என்றான் ஷங்கர்.
"இல்ல டா, அவனுங்க அங்க தான் இருப்பானுங்க. அவனுங்க யாருமே படிக்கிற பசங்க இல்ல"
“Why am I hearing murmering noise?” என்று அதட்டினார் ஆசிரியர்.
"அதானே....ஆத்தா இன்னும் பஞ்ச் டயலாக் சொல்லலையேன்னு பாத்தேன்...." என்றான் பாபு.
சிறிது நேரம் யாரும் பேசிக்கொள்ளவில்லை. பின் வரிசையில் அமர்ந்திருந்த மணிக்குமார், திருப்பதி லட்டு ஒன்றை எடுத்து, "திருப்பதி பிரசாதம்" என்று கொடுத்தான். அதை வாங்கிக்கொண்டு உடனே எல்லோரும் பங்கு பிரித்து சாப்பிடத் தொடங்கினர்.
அப்போது, தன் இருக்கையில் அமர்ந்து கொண்டு விடைத்தாள்களைத் திருத்திக் கொண்டிருந்த ஆசிரியர், அந்த வேலையை செய்தபடியே திடீரென்று மாணவர்களிடம் கேள்வி கேட்கத் தொடங்கினார். அதை எல்லாம் பொருட்படுத்தாமல், ஷங்கரும் பாபுவும், அந்த லட்டின் பெரிய துண்டு யாருக்கு என்று சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். பாபுவிடம் சண்டை போட்டு, லட்டை வாங்கி 'டக்'கென்று வாயில் போட்டான் ஷங்கர்.
அப்போது, ஆசிரியர் “What is Nazism?” என்று கேள்வி கேட்டுவிட்டு, ஷங்கரை பதிலளிக்குமாறு கூறினார்.
வாயில் பெரிய லட்டை வைத்துக்கொண்டிருந்த ஷங்கர், அதை உடனே மென்று விழுங்கவும் முடியாமல், வெளியே துப்பவும் முடியாமல் எழுந்து நின்றான். அவசர அவசரமாக பாபு, தன் நோட்டை எடுத்து அதற்கான விடையைத் தேடினான்.
ஷங்கர் வேகமாக லட்டை மென்று கொண்டிருக்க, பாபு அவன் நோட்டில் அந்த விடை இருக்கும் பக்கத்தைத் திருப்பி ஷங்கரிடம் காட்டினான். ஷங்கர், பதில் சொல்லாமல் நின்று கொண்டிருந்ததைப் பார்த்து, " Come on, answer me, What are you having in your mouth?" என்று ஆசிரியர் கேட்க, ஷங்கர் "லட்டு" என்றான். ஆசிரியருக்குக் கேட்கவில்லை என்ற போதும், மாணவர்கள் இதைக் கேட்டு சிரிக்கத்தொடங்கினர். "ஏய்..." என்று ஒரு அதட்டு அதட்டிவிட்டு, ஷங்கரிடம் மறுபடியும் அந்த கேள்வியைக் கேட்டார்.
பாபுவின் நோட்டைப் பார்த்து, ஷங்கர் அந்த பதிலை ஒப்பிக்க, அவனை அமரச் சொன்னார் ஆசிரியர். பெருமூச்சு விட்டபடி அமர்ந்தான்
"ஒரு லட்டு சாப்பிட கூட நிம்மதி இல்ல..." என்றான் ஷங்கர்.
"இன்டெர்வல்-ல சாப்பிட்டிருக்கலாம்" என்றான் பாபு.
ஷங்கர்,"இன்டெர்வல்-ல சாப்பிட்டு இருந்தா, லட்டு சாப்பிட்டிருக்க முடியாது. பூந்தி தான் சாப்பிட்டிருப்போம். இதுக்கே இவ்வளவு அடிதடி..." என்றான்.
"லட்டை விடுங்கடா... என் சைக்கிளுக்கு ஒரு வழி பண்ணுங்க" என்றான் நட்டு.
"சைக்கிளை இன்னிக்கி சாயங்காலம் எடுத்துட்டு வந்துரலாம். எங்கேயும் போகாது" என்றான் ஷங்கர்.
"அவனுங்க பிரச்சனை பண்ணினா?"
"பண்ணட்டும். பாத்துக்கலாம்"
"வீட்டுக்கு எல்லாம் தெரிஞ்சா பெரிய பிரச்சனை ஆயிடும் டா..."
"அதெல்லாம் ஒண்ணும் ஆகாது. நான் பாத்துக்குறேன்...." என்றான் ஷங்கர்.
ஏதோ திட்டம் இருக்கிறது என்பதை அனைவரும் உணர்ந்தனர். அன்று மாலை பள்ளி முடிந்தவுடன், அனைவரும் நேராக பொருட்காட்சி நடக்கும் இடத்திற்குச் சென்றனர்.
அங்கு சைக்கிளுக்கு டோக்கன் கொடுத்துக்கொண்டிருந்த ஒரு நடுத்தர வயது ஆசாமியை நோக்கிச் சென்றான் ஷங்கர்.
"நேத்து இங்கே சைக்கிளை விட்டுட்டு போயிருந்தோம். நைட் வீட்டுக்குப் போகும் போது எடுக்கல..." பேசி முடிப்பதற்குள், அவர் பேசத்தொடங்கினார்.
"ஓ... அந்த கேசா? நேரா போய் இடதுகை பக்கம் திரும்பு. அங்க 'சைக்கிள் பார்க்கிங்' காண்ட்ராக்ட் எடுத்தவரோட ஆபீஸ் இருக்கும். அங்க போய் கேளு.... உன் சைக்கிள் அங்கே இருந்தா தான் இருக்கும். நைட்டு எல்லாம் பாத்துக்கணும்னு எங்களுக்கு அவசியம் இல்ல..." என்று எறிந்து விழுந்தார்.
அவர் கூறிய திசையில் செல்ல, அங்கு ஒரு சின்ன டென்ட் போடப்பட்டு இருந்தது.
"இதுவாத்தான் இருக்கணும்" என்றான் ஷங்கர்.
அதை நோக்கி சென்று கொண்டிருக்கும்போது, ஷங்கரின் கையைப் பிடித்து நிறுத்தினான் பாலா...
அங்கே உட்கார்ந்திருந்தவர்களைப் பார்த்து, "நேத்து பிரச்சனை பண்ணது இவனுங்க தான் டா..." என்றான்.
தொடரும்...
5 comments:
Dei nee neraya vishayam gnyabam vachirka da
.. particularly" why am i hearing murmuring noize". this is aatha's most favourite dialogue.
Enaku pazhasu ellam gnyabagam varudhu.. Most unforgettable memories..
Thanks.. inimael naanum ennala mudinja alavuku tape rewind panna help panren :)
shankar eppadi saamathiyama samaalikkirarunu adutha vaaram paapom... :P
vaaila laddu sir... super ithu... athuvum ne anga solli
irukuratha nenachu paathaa... semaaya siripu varuthu....
po gowri missing all the fun....
hmm seems u have a good memory da....lets see whats shankar will be doing..:)....
அண்ணா ஒவ்வொரு எபிசொட் முடியும் போதும சஸ்பென்ஸ் . சீரியல் எழுத எல்லா தகுதிஉம் உங்க கிட்ட இருக்கு :-)
Post a Comment