Wednesday, October 29, 2008

'சேட்டை'ய ராஜாக்கள் - 26

அடுத்த ஒரு வாரத்திற்கு, இந்த 'நாற்காலி வீசப்பட்ட' சம்பவம் தான் அனைவரின் பேச்சாக இருந்தது. அந்த சம்பவத்தைப் பார்த்தவர்கள் எல்லாரும் 'பிசிக்ஸ்' சார் ஒரு டெரர் என்று நினைத்துக்கொண்டனர். கிளாஸ் எல்லாம் பிரிக்கப்பட்டு, 'பயாலஜி' குரூப்பிற்கு 'பிசிக்ஸ்' வாத்தியாராக சென்றார் செல்வம். தங்களுக்கு வராததை நினைத்து, பெருமகிழ்ச்சி அடைந்தனர் 'கம்ப்யூட்டர்' குரூப் மாணவர்கள்.


"நாங்க செம எஸ்கேப்..... எங்களுக்கு பூங்கொடி மிஸ் தான்" என்றான் குமார்.


"நாங்க நல்லா மாட்டிக்கிட்டோம் டா... அந்த ஆளு முதல் நாளே இப்படி நடந்துகிட்டாரு.... க்ளாஸ்ல இன்னும் என்னென்ன பண்ணுவாரோ?" என்றான் நட்டு.


"எனக்கென்னவோ, அந்த ஆளைப் பார்த்தா டெரர் மாதிரி தெரியல. நிச்சயமா அவரு காமெடி தான்" என்றான் ஷங்கர்.


"எப்படி சொல்லற?"


"ஒரு காமெடியனுக்கான களை அவரு மூஞ்சில தெரியுது"


"போகப் போகத்தான் தெரியும்" என்றான் பாபு.


+1 வந்துவிட்டாலே, சம்பிரதாயமாக அனைவரும் டியூஷனில் சேருவது வழக்கம். டியூஷனுக்கென கும்பகோணத்திலேயே பிரபலமான ஆசிரியர்கள் இருந்தார்கள். அவர்களிடம் எப்போதுமே கூட்டம் அலைமோதும். ஒவ்வொருவர், ஒவ்வொரு வாத்தியாரின் பெயரை சொல்லிக்கொண்டிருந்தனர்.


"டியூஷனுக்கேல்லாம் போகணுமா? +1 எதுக்கு டா டியூஷன்?" என்றான் ஷங்கர்.


"இப்போ போகலேன்னா, +2 இடம் கிடைக்காது டா" என்றான் பாபு.


"அது மட்டுமில்ல..... எல்லாருமே சேர்றாங்க. வாரத்துல 3 நாள் தான்" என்றான் கிருஷ்ணா.


"சரி. எல்லாரும் சேர்ந்து போகலாம். அப்போ தான் ஒரே பேட்ச்ல இடம் கிடைக்கும்".


முதலில் கெமிஸ்ட்ரி டியூஷன். பள்ளி முடிந்தவுடன், அனைவரும் சேர்ந்து ஹரிஹரன் என்கிற கெமிஸ்ட்ரி வாத்தியாரின் வீட்டிற்கு சென்றார்கள். இவர்களுக்கு முன், அங்கே ஒரு பெரிய கும்பல் காத்திருந்தது. வீட்டு வாசலின் முன், ஏகப்பட்ட சைக்கிள்கள் நின்று கொண்டிருந்தன. டியூஷன் வகுப்புகள் தொடங்கப்படுவதையொட்டி, அவர் வீட்டின் முன் தனியாக ஒரு கொட்டகை போடப்பட்டிருந்தது.


ஹரிஹரன் - கும்பகோணம் ஆண்கள் கல்லூரியில் வேதியல் புரொபசர். நெற்றியில் மின்னிக்கொண்டிருந்த பட்டை, அவரை 'ஐயர்' என்று அடையாளம் காட்டியது. நரைத்த மீசை, தலையில் தாராளமாய் வெற்றிடம், மூக்கின் விளிம்பில் ஒரு கண்ணாடி என்று தோற்றமளித்தார். அவரைப் பார்த்தாலே, மாணவர்கள் அவர் தலையில் மிளகாய் அரைத்துவிடுவார்கள் என்று தெரிந்தது. வருபவர்களையெல்லாம் சிரித்த முகத்தோடு வரவேற்றுக் கொண்டிருந்தார்.


இடம் கிடைக்காததால், இவர்கள் ஆறு பேரும் கடைசி வரிசையில் சென்று அமர்ந்தனர். அந்த கொட்டகை முழுவதும் நிரம்பியவுடன்,


"வருஷத்துக்கு 850 ரூபாய் பீஸ். அதை முதலிலேயே குடுத்துடணும்" என்று தன் பேச்சை ஆரம்பித்தார்.


"காசுல குறியா இருக்கார்..." என்றான் குமார்.


"அவர் தலையைப் பாத்தாலே தெரியுது, பல பேர் அவருக்கு நாமம் போட்டிருக்கங்கன்னு.... அதான் உஷாரா இருக்காரு" என்றான் பாலா.


ஒவ்வொருவராகக் கூப்பிட்டு, அவர்களது பெயர், பள்ளியின் பெயர் மற்றும் தொலைபேசி எண்களை வாங்கிக் கொண்டார். ஒவ்வொருவருக்கும், ஒரு மிட்டாய் வேறு கொடுத்து அனுப்பினார். இவர்களும் சென்று பெயரைக் கொடுத்துவிட்டு வெளியில் வந்தனர்.


"இவர் கிட்ட டியூஷன் போனா உருப்பட்ட மாதிரி தான்" என்றான் ஷங்கர்.


"அடப்பாவி...... அப்புறம் எதுக்கு டா பேர் எல்லாம் கொடுத்த?"


"உள்ளே வந்துட்டு, பெயர் கொடுக்காம எப்படி இருக்க முடியும்?" என்றான் ஷங்கர்.


"நானும் சேர மாட்டேன்" என்று ஒவ்வொருவராக பின் வாங்கினார்.


"அடப்பாவிகளா.... அவரு வீட்டுக்கு போன் பண்ணினா என்னடா பண்ணறது?" என்று அப்பாவியாகக் கேட்டான் நட்டு.


"அதெல்லாம் பண்ண மாட்டார். நான் எங்க வீட்டு போன் நம்பர் கொடுக்கல"


"பின்ன?"


"நம்ம ஸ்கூல் நம்பர் எழுதிக்கொடுதுட்டு வந்துட்டேன். பேர் கூட மாத்தி கொடுத்துட்டேன்" என்றான் ஷங்கர்.


"அடப்பாவி......."


'டேய், நீ பரவாயில்ல.... நான் என் பேரை மாத்தி, நட்டு வீட்டு போன் நம்பரைக் கொடுத்துட்டேன்" என்றான் கிருஷ்ணா.


"டேய் நாயே...." என்று அவனைத் துரத்தினான் நட்டு.


சிறிது நேரத்திலேயே காற்று பலமாக அடிக்கத்தொடங்கியது. திடீரென்று கார்மேகம் சூழ்ந்து கொண்டது.


"டேய், மழை வர்றதுக்குள்ள சீக்கிரமா எல்லாரும் வீட்டுக்குப் போய் சேர்ந்துடலாம்" என்றான் ஷங்கர். ஆனால், அவர்கள் சிறிது தூரம் செல்வதற்குள் பேய் மழை பிடித்துக்கொண்டது.


மறுநாள் காலை....


வகுப்புகள் வழக்கம்போல் நடைபெறத் தொடங்கின. 'கம்ப்யூட்டர் சைன்ஸ்' வகுப்பிற்கு புதிதாக வந்திருந்த 'ப்ரீத்தி' மிஸ் வகுப்பிற்குள் நுழைந்தார். அவர் பாடம் நடத்திய விதம், அனைவருக்கும் ரொம்பப் பிடித்திருந்தது. அமைதியாகவும் நேர்த்தியாகவும் பாடமெடுத்தார். பொதுவாக, மாணவர்களிடம் உடனே நல்ல பெயரெடுப்பது கடினம். ஆனால், இவர் வந்த முதல் நாளிலேயே மாணவர்களிடம் நல்ல பெயரெடுத்தார்.


'கம்ப்யூட்டர்' வகுப்பிற்கு ஆசிரியர்கள் எல்லாம் திருப்த்தியாக அமைந்திருந்தனர். ஆனால், 'பயாலஜி' வகுப்பில் செல்வம் சார் பூச்சாண்டி காட்டிக் கொண்டிருந்தார். மாணவர்கள் எல்லாம் புலம்பிக்கொண்டிருந்தனர்.


"நிச்சயமா ஏதாச்சும் வீக் பாயிண்ட் இருக்கும் டா" என்றான் ஷங்கர்.


"அதை சீக்கிரமா கண்டு புடிக்கணும் டா.... கிளாஸ் டார்ச்சர் தாங்கல.... திருநெல்வேலி தமிழ் கேள்விப்பட்டிருக்கோம். இவரு, திருநெல்வேலி இங்கிலிஷ்ல பேசி உயிரெடுக்குறார்" என்றான் பாபு.


"சரி, நம்ம முதல் வலையை விரிப்போம். இதுலே விழலேன்னா, அப்புறமா அடுத்தக்கட்ட நடவடிக்கை பத்திப் பேசுவோம்"


"சொல்லு"


"நீ என்ன பண்ணற.... நாளைக்கு அவரைப் பார்த்து, 'நீங்க டியூஷன் எடுக்குறீங்களா சார்' ன்னு கேளு" என்றான் ஷங்கர்.


தொடரும்...

Friday, October 24, 2008

தீபாவளி - சில நினைவுகள்...!

என் வாழ்க்கையிலேயே முதல் முறையாக தீபாவளியை தனியாக கொண்டாடப்போகிறேன்..... உம்ஹும்ம்..... தீபாவளியை கழிக்கப்போகிறேன் என்பதே சரி. தீபாவளி என்பது எப்போதுமே என் வாழ்வில் வெறும் விடுமுறை அளிக்கும் பண்டிகையாக மட்டும் இருந்ததில்லை. ஒவ்வொரு வருடமும், தீபாவளி எனக்கு சந்தோஷத்தை வாரிக் கொடுத்து, உற்சாகத்தை புதுப்பித்துக் கொடுத்திருக்கிறது. பெருநகரங்களில் தீபாவளி என்பது, மற்றுமொரு விடுமுறை நாளாகவே கருதப்படுகிறது. சகட்டுமேனிக்கு ஷாப்பிங் செய்துவிட்டு, தீபாவளியன்று அதிகாலையில் ஒளிபரப்பப்படும் மங்கள இசை முதல், இரவு சிறப்புத் திரைப்படம் வரை டி.வி.யில் காட்டும் சிறப்பு நிகழ்ச்சிகளைப் பார்த்தே நாளைக் கடத்தும் பலரை எனக்குத் தெரியும்.


தீபாவளி வரும் ஒரு மாதத்திற்கு முன்னரே, எனக்குள் உற்சாகம் பற்றிக்கொள்ளும். ஊரின் ஒவ்வொரு தெருவிலும் கூட்டம் அலைமோதும். எப்படி எல்லோரிடமும் இவ்வளவு காசு புழங்குகிறது என்று ஆச்சரியமாக இருக்கும். கும்பகோணத்தை சுற்றியுள்ள அனைத்து சிறு ஊர்களிலிருந்தும் மக்கள் திரளாக வருவார்கள். பேருந்துகள் எல்லாம் மெயின் ரோடுகளில் செல்ல முடியாமல் சுற்றிக்கொண்டு செல்லும்.மூலைக்கு மூலை பட்டாசுக்கடைகள் முளைக்கும். பட்டாசுகளை ஒரு மாதத்திற்கு முன்னரே வாங்கி, மொட்டைமாடியில் காயப்போட்டு, ஒவ்வொரு வெடியையும் எண்ணி எண்ணி அக்கறையாக எடுத்துவைப்பது, நண்பர்களின் வீடுகளுக்குச் சென்று தீபாவளிப் பலகாரங்களைக் கொடுப்பது என்று படு உற்சாகமாக இருக்கும்.


தீபாவளியன்று அதிகாலையில் எழுந்து, நல்லெண்ணெய் தேய்த்துக் குளித்து அந்த தெருவிலேயே நான் தான் முதலில் வெடி வைக்க வேண்டும் என்ற படபடப்புடன் ஆயிரம் வாலா சரத்தை எடுத்துக் கொண்டு வாசலுக்கு ஓடுவேன். காலப்போக்கில், பட்டாசு வெடிக்கும் ஆர்வம் குறைந்தாலும், பண்டிகை தரும் சந்தோஷமும், உற்சாகமும் சிறிதளவு கூட குறையவில்லை.


இங்கே -



மேற்கூறிய எதுவுமே இல்லாமல், நல்லெண்ணையை தலையில் தேய்த்துக் கொண்டு பாத் டப்பில் நின்று குளித்துவிட்டு, மற்றுமொரு சாதாரண நாள் போல, அலுவலகத்திற்கு சென்று வர வேண்டும். இந்த ஊரில், பிறந்தநாளைக் கூட சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தான் கொண்டாடுகிறார்கள். இந்த வருடம் தீபாவளி திங்கட்கிழமையன்று வருவதால், சனி அல்லது ஞாயிற்றுக்கிழமையே நல்லெண்ணைக் குளியலையும் முடித்துவிடுவார்கள் என்று நினைக்கிறேன். மிஞ்சிப்போனால் கோவிலுக்கு சென்று வரலாம். வேறு எதுவும் பண்ண முடியாது. இந்த தருணத்தில், குடும்பம் மற்றும் நண்பர்களைத்தவிர, நான் அதிகம் 'மிஸ்' பண்ணும் விஷயங்கள்....



நகர் உலா


தீபாவளிக்கு முதல் நாள் இரவு, கட்டாயமாக நானும், பிரதீப்பும் மற்ற நண்பர்களோடு செல்லும் 'நகர் உலா'.


10 மணிக்கு மேல் வீட்டை விட்டுக் கிளம்புவோம். கடை வீதிகள் அனைத்தையும் சுற்றி விட்டு, நள்ளிரவு தாண்டி வீடு திரும்புவோம். அந்த கூட்டத்தில் நடக்கக்கூடத் தேவையில்லை. அலையிலே அடித்து செல்லப்படும் படகு போல, நீங்களும் அடித்துச் செல்லப்படுவீர்கள்.





சாலைகளில் முளைக்கும் 'திடீர்' கடைகள்


பிளாஸ்டிக் கப்புகள், டப்புகள், துணிமணிகள், துடப்பக்கட்டைகள், என்று சகலமும் விற்றுக்கொண்டிருக்கும்.



இந்த மாதிரி கடைகளில் அதிகம் விற்பனையாவது ஜட்டி, பனியன்கள் தான். ஒரு குடையைக் கவிழ்த்து, அதில் பனியன்கள், ஜட்டிகளைப் போட்டு, ஜோடி(!) 15 ரூபாய் என்று விற்பார்கள். அதை வாங்குவதற்கு நிற்கும் கூட்டத்தைப் பார்க்க கண்கோடி வேண்டும். ஆலன் சொலி, லூயிஸ் பிலிப் போன்ற சட்டைகள்(அட லேபில் மட்டும்தாங்க…) 40 ரூபாய்க்குக் கிடைக்கும். நான் கூட ஒரு சட்டை வாங்கியிருக்கிறேன். (பார்க்க - படம் கீழே). மொட்டைமாடியில் கொடியில் காய்ந்துகொண்டிருக்கும் சட்டைகளை 'சுட்டு', லேபில்கள் மாற்றி, இப்படி விற்கப்படுகின்றன என்று ஒரு பரவலான பேச்சு உண்டு. உண்மையா என்று தெரியாது.




ஜட்டி, பனியன்களுக்கு அடுத்து அதிகம் விற்பனையாவது பட்டாசுகள் தான். நள்ளிரவைத் தாண்டி ஷாப்பிங்(!) செய்தால், அதிகம் பேரம் பேசாமல் கிடைத்த விலைக்கு விற்றுவிட்டுக் கிளம்பி விடுவார்கள். அவர்களும் பண்டிகையைக் கொண்டாட வேண்டாமா?


மழை


சீசனில் பெய்யும் மழை. தீபாவளியன்று நிச்சயமாக கொஞ்சம் தூறலாவது போடும். ஆனால், அதற்கு முன்னர், 'ஜோ'வென ஜோராகக் கொட்டும் மழை, மழைக்கு முன்னால் வரும் மண்வாசனை. இங்கே, பேய் மாதிரி மழை கொட்டினாலும், ரசிக்க முடியவில்லை.


தீபாவளி ரிலீஸ் படங்கள்


ஏதாவது ஒரு படத்தை நிச்சயமாக தியேட்டரில் பார்த்தால்தான், அந்த தீபாவளியே முழுமையடையும். சென்ற வருட தீபாவளிக்கு, "அழகிய தமிழ் மகன்" பார்த்து வெறுத்துப்போனது மறக்கவில்லை.



'த்ரில்' அனுபவம்


பைக்கை எடுத்துக் கொண்டு தெருக்களின் வழியாக செல்லும் போது, 'வெடி', 'வெடி' என்று கத்தி, கிலியை உண்டாக்கும் சிறுவர்களிடம், பயப்படாத மாதிரி நடித்துவிட்டு, உள்ளுக்குள் உதறலுடன் வண்டியை ஓட்டும் 'த்ரில்' அனுபவம்.



தீபாவளி பலகாரம்


தீபாவளி முடிந்து ஒரு மாதம் ஆன பின்பும், எந்த வீட்டிற்கு சென்றாலும் தீபாவளிக்கு செய்த அல்லது அவர்களுக்கு வந்த பலகாரங்களைக் கொடுத்து உபசரிப்பார்கள். எப்படியும் வகை வகையான முறுக்குகளையும், பலவிதமான இனிப்புகளையும் ருசித்து விடலாம்.



தீபாவளி டிரெஸ்


என்னதான் அமெரிக்காவில் ஸ்டைலான ஆடைகள் வாங்கினாலும், நம்ம ஊரில், அலை மோதும் கூட்டத்திற்கு நடுவே நீந்திச் சென்று, அடித்து பிடித்து தீபாவளி டிரெஸ் வாங்கும் சுகமே தனி. அவ்வளவு கஷ்டப்பட்டு வாங்கிய உடைகளை, பூஜை செய்து, அம்மா அப்பா காலில் விழுந்து வணங்கி போட்டுக்கொண்டால் தான் அது 'தீபாவளி டிரெஸ்'. இல்லையென்றால், அது ஜஸ்ட் அனதர் டிரெஸ் தான்..,



தீபாவளி காசு


டெலிபோன் டிபார்ட்மென்ட், தபால்காரர், கூர்கா, குப்பை அள்ளுபவர்கள், என்று வரிசையாக தீபாவளி காசு வாங்க வருவார்கள். அவர்களுக்கெல்லாம் காசு கொடுத்து, நோட்டில் கையெழுத்து போடுவது ('இதையெல்லாமா மிஸ் பண்ணுவாங்க?'ன்னு கேக்காதீங்க)


சென்ற வருட தீபாவளியின் போது, கேமராவை தூக்கிக்கொண்டு, நகர் உலா சென்ற போது 'க்ளிக்'கிய படங்களைக் காண, இங்கே சொடுக்கவும். அவ்வளவு கூட்டத்தில் கேமரா பிளாஷ் வருவதைப் பார்த்து, அனைவரும் என்னை வித்தியாசமாகப் பார்த்தார்கள். நான் ஒரு 'இன்டர்நெட்' பத்திரிக்கைக்காரன்(சரி, சரி, விடுங்க.....) என்று சொல்லிக்கொண்டு, சிறப்பு அனுமதியெல்லாம் பெற்று, கடைவீதியிலுள்ள பெரிய கடைகளின் மொட்டைமாடிகளுக்குச் சென்று போட்டோக்கள் எடுத்துத்தள்ளினேன்(ஒரு ஆர்வக்கோளாறுதான்....ஹி...ஹி)


இங்கே நான் தீபாவளியைக் கொண்டாடிய(?) விதத்தைப் பற்றி (ஏதேனும் உருப்படியாக நடந்தால்) வேறு பதிவில் போடுகிறேன்....


இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...!

Wednesday, October 22, 2008

'சேட்டை'ய ராஜாக்கள் - 25

+1 வகுப்பு ஆரம்பிக்கின்ற அன்று.... அனைவருக்கும், ஏதோ பள்ளிப்படிப்பையே முடித்து விட்டு, கல்லூரிக்குள் செல்கிற உணர்வு ஏற்பட்டது. 10வது மற்றும் 12வது மாணவர்கள் மீது தான் அனைவரது பார்வையும் இருக்கும். இந்த ஒரு வருடம் தான், இத்தனை வருட பள்ளிப்படிப்பிலேயே சிறந்ததாக இருக்கப்போகிறது. ஸ்பெஷல் கிளாஸ், கோச்சிங் கிளாஸ் என்று அலைக்கழிக்க மாட்டார்கள். விடுமுறைகள் எல்லாம் தாராளமாகக் கிடைக்கும். ரொம்ப கஷ்டப்பட்டு படிக்கத் தேவை இல்லை. இப்படி, பல சௌகரியங்கள் இருப்பினும், இந்த வருடம் முதல், "பயாலஜி" , "கம்ப்யூட்டர் சைன்ஸ்" என்று இரு வேறு பிரிவுகளாக வகுப்புகள் பிரிக்கப்பட்டதால், நண்பர்களை விட்டுப் பிரிகிறோமே என்கிற நெருடல் அனைவருக்கும் இருக்கத்தான் செய்தது.


நட்டு,பாபு மற்றும் பாலா ஆகியோர் "பயாலஜி" வகுப்பிலும், ஷங்கர், குமார் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் "கம்ப்யூட்டர்" வகுப்பிலும் இருந்தனர்.


"என்ன 10 கிலோமீட்டர் தள்ளியா இருக்கப் போறோம்? எட்டிப்பார்த்தா உன் மூஞ்சி தெரியப்போகுது..." - பாபுவிடம் சொன்னான் கிருஷ்ணா.


"இருந்தாலும், நம்ம எல்லாரும் ஒரே க்ளாஸ்- இருக்குற மாதிரி வருமா?" என்றான் பாபு.


"ஏதோ, நமக்கும் டாக்டர் சீட்டு கிடைக்கும்னு ஒரு குருட்டு நம்பிக்கையில பயாலஜி எடுத்திருக்கோம்..... பாப்போம்" என்றான் பாபு.


"டேய், இந்த 'டாக்டர்' கனவு எல்லாம் சொல்லி உங்க வீட்டுல எல்லாரையும் ஏமாத்தலாம். என்னை ஏமாத்த முடியாது. நீ ரூபி மிஸ்சுக்காக தான் "பயாலஜி" குரூப் எடுத்திருக்கன்னு எனக்கு தெரியும்" என்றான் ஷங்கர்.


இப்படிப் பேசிக்கொண்டே பள்ளியை வந்தடைந்தனர். பள்ளியைப் பார்த்ததும், பத்தாம் வகுப்பு தேர்வு முடித்து விட்டு, அனைவருமே வேறு பள்ளிக்கு மாறிவிடுவது போல, "இன்று தன் கடைசி நாள் என்று அனைவரும் வகுப்பின் ஒவ்வொரு மூலையிலும் நின்று ஓவராக பீல் பண்ணிய காட்சி, ஒரு " ஃப்ளாஷ் பேக்" போல ஓடியது.


"கடைசியில எங்கேயும் போகல.... அதே ஸ்கூல், அதே மேடம், அதே மாஸ்டர்... ஹும்ம்...." என்று அலுத்துக்கொண்டான் ஷங்கர்.


"தேவையில்லாம, ஓவரா ஃபீல் பண்ணிட்டோமோ?" என்றான் குமார்.


புதிய வகுப்புகள் எங்கு இருக்கிறதென்று தெரியாமல் தேடிக்கொண்டிருந்தனர்.


அப்போது, பின்னாலிருந்து யாரோ பாபுவை அழைக்கும் சப்தம் கேட்டது. பாபு பின்னால் திரும்பிப்பார்க்க, அங்கு பாலாஜி நின்றுகொண்டிருந்தான்.


"யாரு டா அது? நேதாஜியா, பாலாஜியா?" என்று குழம்பினான் பாபு.


பாபு மட்டுமல்ல. பள்ளியில் அனைவருமே குழம்புவார்கள். காரணம், நேதாஜியும் பாலாஜியும் இரட்டைப் பிறவிகள். பார்ப்பதற்கு அச்சு அசலாக ஒரே மாதிரி இருப்பார்கள். இந்த குழப்பத்தை தவிர்பதற்காகவே, +1ல் இருவரையும் வெவ்வேறு வகுப்பில் அமர்த்தப்போவதாக மேடம் அடிக்கடி கூறிக்கொண்டிருப்பார்.


பாபு அவனருகே சென்றான். யார் என்று சரியாக யூகிக்க முடியாததால், அவன் முதலில் வாயைத்திறக்கட்டும் என்று காத்துக்கொண்டிருந்தான்.


"நீயும் பயாலஜி தானே? நானும் அதே குரூப் தான். நேதாஜி தான் கம்ப்யூட்டர் சைன்ஸ்" என்றான்.


அப்போது தான் அவன் பாலாஜி என்று விளங்கியது. வகுப்புகள் "கிரௌண்டில்" இருப்பதாகக் கூறி, அனைவரையும் அங்கு அழைத்துச் சென்றான்.


பள்ளியின் மைதானத்தை, கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிப்பு செய்து, அதில் வகுப்பறைகளைக் கட்டியிருந்தனர். கிடைத்த இடங்களிலெல்லாம் வகுப்பறைகளைக் கட்டியதில், விடுபட்ட கொஞ்ச இடத்தை விளையாட்டு மைதானமாக பயன்படுத்திக் கொண்டிருந்தனர். இப்படி, மைதானத்தையொட்டி இருக்கும் வகுப்புகளைக் குறிக்கும் பொது, "கிரௌண்ட்" என்று பொதுப்படையாகவே குறிப்பிடுவது வழக்கம்.


நீளவாக்கில் அமைக்கப்பட்டிருந்த கீற்றுக் கொட்டகையில், வரிசையாக வகுப்புகள் இருந்தன. ஒவ்வொரு வகுப்பையும் பிரிப்பது, "ஸ்க்ரீன்" என்று சொல்லக்கூடிய, மெல்லிய கார்டுபோர்டினால் செய்யப்பட்ட தடுப்பு மட்டுமே.


அன்று முதல் நாள் என்பதால், மாணவர்கள் அனைவரும் உற்சாகமாக இருந்தனர். +1 வகுப்புகள் அனைத்தையும் அன்று தனித்தனி வகுப்பில் அமர்த்தாமல், ஒரே வகுப்பாக அமர்த்திருந்தனர். பார்த்துப் பழகிய முகங்களின் நடுவே, ஒரு சில புதிய முகங்களும் தெரிந்தன. அவர்கள், புதிதாக பள்ளிக்கு வந்து சேர்ந்தவர்கள் என்று பார்த்த உடனேயே விளங்கியது.


"பயாலஜி", 'கம்ப்யூட்டர் சைன்ஸ்" தவிர, "ப்யூர் சைன்ஸ்" என்று ஒரு வகுப்பு தனியாக இருந்தது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மிகக்குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள், அந்த வகுப்பில் இருந்தார்கள்.


பள்ளியில் பெரும்பாலும் பெண்களே ஆசிரியர்களாக பணிபுரிந்து கொண்டிருந்தார்கள். கடந்த 10 ஆண்டுகளில், இரெண்டு ஆண் ஆசிரியர்கள் பணிபுரிந்திருந்தால் பெரிய விஷயம். அப்படி இருக்கையில், அந்த வருடம் பள்ளியில் புதிதாக ஆண் ஆசிரியர்கள் சேர்ந்திருப்பதாக பேச்சு நிலவியது. அதை உண்மையாக்கும் வகையில், அங்கே ஆசிரியர் ஒருவர் வந்தார்.


முழு கை சட்டையும், அதை 'இன்' செய்து, நெஞ்சிற்கு கொஞ்சம் கீழே 'பேன்ட்'டும் அணிந்திருந்தார். மூக்கிற்கு கீழே, ஒல்லியான கம்பிளிப்புச்சியைப் போன்ற மீசையுடன், நகைச்சுவையாகத் தோற்றமளித்தார். தன் பெயர் செல்வம் என்றும், தான் 'ஃபிசிக்ஸ்' வாத்தியார் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டார்.


"பார்க்க காமெடியாத்தான் இருக்காரு, போகப் போகத்தான் தெரியும்" என்று கிசுகிசுத்தனர்.


புதிதாகப் பள்ளியில் சேர்ந்தவர்களை எழுப்பி, அவர்களையும் அறிமுகப்படுத்திக் கொள்ளுமாறு கூறினார். அறிமுகப் படலம் எல்லாம் முடிந்தது. பாடம் எதுவும் நடத்தப்படாததால், இரைச்சல் சத்தம் அதிகமாகக் கேட்டது. அங்கு நின்றிருந்த ஆசிரியர் பற்றி கவலைப்படாமல், அனைவரும் அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர்.


அப்போது, திடீரென்று அனைவரின் கவனமும், செல்வம் சாரின் மீது திரும்பியது. எதற்காகவோ ஒரு மாணவனை திட்டிக்கொண்டிருந்தவர், அந்த மாணவனும் எதிர்த்துப் பேசவே, கடும் கோபத்துடன் அவர் அமருவதற்காக போடப்பட்டிருந்த நாற்காலியை எடுத்து, அவன் மீது வீசினார். நல்லவேளையாக அது யார் மீதும் படவில்லை. இப்படி ஒரு காட்ச்சியை யாருமே எதிர்ப்பார்த்திராததால், அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. வந்த முதல் நாளிலேயே இப்படி அவர் நடந்து கொண்டது, பலருக்கு அவர் மீது அச்சத்தை வரவழைத்தது.


அவர் நாற்காலியை வீசி எறிந்ததையும் பொருட்படுத்தாமல், அந்த மாணவன் எதிர்த்துப் பேசிக்கொண்டிருக்க, அவர் வகுப்பை விட்டு வெளியேறினார். நேராக மாஸ்டரிடம் புகார் செய்வதற்காகக் கிளம்பினார். அவ்வளவு இரைச்சலாக இருந்த இடம், திடீரென்று அமைதிப்பூங்காவாக மாறியது. செல்வம் சார் தங்கள் வகுப்பிற்கு வந்துவிடக்கூடாது என்று அனைவருமே வேண்டிக்கொண்டனர். அவர் உருவத்தைப் பார்த்து, அவரை லேசாக எடை போட்டவர்கள் எல்லாம், தங்கள் எண்ணத்தை அந்த நொடியிலேயே மாற்றிக்கொண்டனர்.


குமார் : "டேய், இவரு காமெடியா, டெரரா?"


ஷங்கர் : "தெரியலயேப்பா....."

(டங்...ங்....ங்....ங்)


தொடரும்....

Wednesday, October 15, 2008

தமிழ் சினிமா - எனக்கு நானே

'இட்லிவடை'யிடமிருந்து தொடர்கிறேன்....



1 - . எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?


எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தேன் என்று சரியாக நினைவில் இல்லை. ஐந்து அல்லது ஆறு வயது இருக்கலாம்.


1 - ஆ, நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா?


முதன் முதலில் தியேட்டருக்கு சென்று பார்த்த படம், "ஹீ-மேன் அண்ட் தி மாஸ்டர்ஸ் ஆஃப் தி யுனிவர்ஸ்"(சென்னை 'அலங்கார்' தியேட்டர்). 1987ஆம் ஆண்டு வாக்கில், கார்ட்டூன் படமாக வந்து கலக்கிக்கொண்டிருந்தது. அதையே சினிமாவாக எடுத்திருந்தார்கள். அப்போது, நான் ஒரு "ஹீ-மேன்" பைத்தியம் என்பதால், என்னை அழைத்துச்சென்றார்கள். முதன் முதலில் தியேட்டருக்குள் சென்று திரையைப்பார்த்ததும், என் அப்பாவிடம், "என்னப்பா.....டி.வி இவ்வளவு பெருசா இருக்கு?!" என்று கேட்டு வாயைப்பிளந்தது நினைவில் இருக்கிறது.


முதன் முதலில் தியேட்டரில் பார்த்த தமிழ் படம், "வருஷம் 16".


1 - . என்ன உணர்ந்தீர்கள்?


டி.வி.யில் பார்த்ததை விட, பெரிய திரையில் குஷ்பூ அழகாக இருந்ததை உணர்ந்தேன்.... ("அந்த வயசுலயேவா?"ன்னு நீங்க கேக்குறது எனக்கு கேக்குது)


2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?


"ராமன் தேடிய சீதை" - சிம்பிள் அண்ட் நீட். பிடித்திருந்தது.


3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?


2வது முறையாக "சரோஜா" பார்த்தேன். - ரொம்பவும் ரசித்துப் பார்த்தேன். திரைக்கதை அமைப்பு, வசனங்கள், எதார்த்தமான நடிப்பு என்று பல அம்சங்கள் அந்த படத்தில் பிடித்திருந்தாலும், நான் படத்தை இவ்வளவு ரசித்ததற்கு முக்கிய காரணம், பிரேம்ஜி. அட்டகாசமான 'டைமிங்' காமெடியில் அசத்தியிருந்தார்.



இவ்வளவு காமெடியாக ஒரு சீரியஸ் படத்தை எடுக்க முடியுமா என்று வியந்தேன்.


4. மிகவும் தாக்கிய தமிழ் சினிமா?


சிறுவயது முதலே, எந்த ரஜினி படத்தைப் பார்த்துவிட்டு வந்தாலும், அது எனக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். அந்தந்த படத்தில் ரஜினியின் ஸ்டைல்களை பின்பற்றுவது, அவரைப் போன்றே கையில் 'காப்பு' அணிவது(இப்போது கூட அணிந்திருக்கிறேன்) என்று, அவரை ஒரு சூப்பர் ஹீரோவாக உருவகப்படுத்திக் கொண்டு வளர்ந்தவன் நான். இன்று, சினிமாவிற்கு அப்பாற்பட்டும் எனக்கு அவர் 'தலைவராக' இருக்கிறார். ஒவ்வொரு முறை தலைவர் படத்தை பார்த்துவிட்டு வரும்போதும், ஒரு உற்சாகம் பிறக்கும். புதுத்தெம்பு கிடைக்கும்.


தலைவருடைய படங்களைத் தவிர, சமீபத்தில் எனக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திய படம், "பருத்தி வீரன்".


5-. உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா-அரசியல் சம்பவம்?


'ஹொகேனேகல்' பிரச்சனையில் நடிகர் சங்கம் நடத்திய உண்ணாவிரதம். அதில் தலைவரை சுற்றி நடந்த அரசியல்.


"ரஜினி அரசியலில் இல்லை. ஆனால், ரஜினி இல்லாமல் அரசியல் இல்லை" - இது எப்படி இருக்கு?


5-. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?


'சிவாஜி'யில், எங்கள் தலைவரை 'வெள்ளைத் தமிழனாக' காட்டிய "கலர் டிராஃப்டிங்" தொழில்நுட்பம் தான்...!


6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?


இணையதளத்தில் தவறாமல் வாசிப்பதுண்டு.


7. தமிழ்ச்சினிமா இசை?


தமிழர்கள் அனைவரும் பெருமை பட்டுக்கொள்ளும் வண்ணம் இருக்கிறது நம் சினிமா இசை. இதில் மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பில்லை என்று கருதுகிறேன். இசை உலகில் நம் கொடி உயரப்பறந்து கொண்டு தான் இருக்கிறது. 'இசைஞானி', 'இசைப்புயல்' என்ற இரு மேதைகளை உருவாக்கியது தமிழ் சினிமா தானே......


8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம்தாக்கிய படங்கள்?


ஏராளமான வேற்றுமொழிப்படங்களை பார்ப்பதுண்டு. இந்திய மொழிகளில், தமிழ், ஹிந்தியை திவிர வேறு எந்த மொழிப்படங்களையும் பார்ப்பது இல்லை. நான் இதுவரையில் பார்த்த தெலுங்குப் படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.


உலக மொழிகளில் ஆங்கிலம் தவிர, இத்தாலியன், ஸ்பானிஷ், பிரெஞ்சு, சைனீஸ், என்று எதையும் விட்டு வைப்பதில்லை.


அதிகம் தாக்கிய படங்கள் என்று தனியாக எடுத்துக் கூறுவது கடினம். அந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும். சமீபத்தில் பார்த்த 'ஒசாமா' என்ற ஆஃப்கன் மொழிப்படம் என்னை மிகவும் தாக்கியது. 'மங்கோல்' என்ற மங்கோலிய பொழிப்படத்தை டவுன்லோடு செய்து வைத்திருக்கிறேன்.


என்னை மிகவும் கவர்ந்த படங்களை சிபாரிசு செய்து பதிவுகள் போட ஆரம்பித்திருக்கிறேன். அந்த பட்டியலில், இதைப்போன்ற நல்ல படங்கள் இடம்பெறும்.


9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?


சத்தியமாக இல்லை. (முதல் கேள்விக்கே 'இல்லை' என்று பதிலளித்து விட்டதால், அடுத்தடுத்த கேள்விகள் எனக்கானவை அல்ல)


10. தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?


ஒருபுறம் வித்தியாசமான படங்கள், திறமையான இளைஞர்கள் என்று வளர்ந்து வந்தாலும், "ரைசிங்" ஸ்டார்களும், சாம் ஆண்டர்சன்களும்("யூ டியூப்" புகழ்) வந்து கொண்டே தான் இருப்பார்கள்.


11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாசாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?


எனக்கு பெரிதாக ஒன்றும் தெரியாது. தலைவர் படத்திற்காக இரெண்டு ஆண்டுகள் எல்லாம் காத்திருந்து எனக்கு பழகிவிட்டதால், ஓராண்டு காலம் என்பது 'ஜுஜுபி'.


இன்று, எத்தனை பொழுதுபோக்கு அம்சங்கள் இருந்தாலும், தமிழர்களுக்கு மிக முக்கியமான பொழுதுபோக்கு, சினிமா மட்டுமே. ஒருவேளை சினிமா இல்லையென்றால், அந்த ஓராண்டு காலத்தில் சின்னத்திரை பிரம்மாண்ட வளர்ச்சி காணும். புத்தகம் வாசிக்கும் பழக்கம் அதிகரிக்க வாய்ப்பு உண்டு.


இவர்கள் தொடரவேண்டும் என்று நினைக்கிறேன்.



அப்துல்லா

ராஜா

அருண்

அர்ச்சனா

ப்ளீச்சிங் பௌடர்

மோகன்ராம்

Tuesday, October 14, 2008

'சேட்டை'ய ராஜாக்கள் - 24

ஷங்கர், அவன் பிடித்த பிடியில் உறுதியாக இருந்தான். என்னதான் ஷங்கர் கூறும் காரணங்கள் ஞாயமாகப் பட்டாலும், யாருக்கும் பள்ளியை மாற்றுவதில் உடன்பாடு இல்லை. முடிந்தவரையில் பேசி சமாதானப்படுத்தலாம் என்று நினைத்திருந்தனர்.+1 வகுப்பிற்கான விண்ணப்பங்கள் அனைத்து பள்ளிகளிலும் கொடுக்க ஆரம்பித்திருந்தார்கள்.

பத்தாம் வகுப்பு தேர்வு மதிப்பெண் பட்டியலை பள்ளியில் வாங்கிக்கொண்டு, அனைவரும் நேராக பாபு வீட்டிற்கு சென்றனர்.


ஷங்கர் : டவுன் ஹை ஸ்கூல்ல அப்ளிகேஷன் வாங்கப்போறேன். யாருக்கெல்லாம் வேணும்?


பாபு : டேய், எதுக்கு டா இப்போ ஸ்கூல் மாத்தணும்னு அடம் புடிக்கிற?


ஷங்கர் : பத்தாவது படிக்கும் போதே இவ்வளவு பாடு படுத்துனாங்க. இன்னும் +2 போனா அவ்வளவு தான். இது தான் கடைசி சான்ஸ். இதை விட்டா, இன்னும் ரெண்டு வருஷம் இங்கே தான் குப்பை கொட்டணும்.


பாபு : இனிமே வேற ஸ்கூலுக்கு மாறி, அங்கே எல்லார்கிட்டயும் பழகி....


ஷங்கர் : டேய், நீங்களே சொல்லுங்க டா.... இந்த ஸ்கூல்- நம்மள என்னைக்காவது 10வது படிக்கிற பசங்க மாதிரி நடத்திருக்காங்களா? என்னமோ நாலாவது படிக்கிற பசங்க மாதிரி தான் நடத்துறாங்க.


குமார் : அது சரி தான் டா, ஆனா இங்கே எல்லா டீச்சர்சையும் தெரியும், நல்லா பழகியாச்சு....


ஷங்கர் : அங்கேயும் போய் பழகிடலாம்....


பாலா : எங்க வீட்ல ஒத்துக்க மாட்டாங்க டா...


ஷங்கர் : நீங்க யாருமே வரலேன்னா கூட, நான் நிச்சயமா மாறப்போறேன். இன்னும் ரெண்டு வருஷம், வெறும் படிப்பு படிப்புன்னு பைத்தியமாக்கிருவாங்க. ஒரு 'ஆனுவல் டே' கூட நடக்கல. என்ன ஸ்கூல் டா இது?


பாபு : அடுத்த வருஷம் நிச்சயமா 'ஆனுவல் டே' இருக்கும். நம்ம மேடம் கிட்ட பேசலாம்.


ஷங்கர் : வருஷ கடைசியில வர்ற 'ஆனுவல் டே'க்காக, வருஷம் பூரா டார்ச்சர் அனுபவிக்கணுமா? அப்படியே அது நடந்தாலும், சினிமா பாட்டு பாடக்கூடாது, அது, இதுன்னு உயிரெடுப்பாங்க.


குமார் : டேய், அடுத்த வருஷம் நம்ம ஸ்கூல்- நிறைய ஆக்டிவிடீஸ் பண்ணலாம் டா...


ஷங்கர் : ஒரு ம**ம் பண்ண முடியாது. வாரத்துக்கு ஒரு தடவை திருச்சியில இருந்து ஒருத்தன் கிட்டாரைத் தூக்கிட்டு வருவான். அவன் சர்ச்- வந்து மொக்கை போடறதை கேக்கலாம். அது தான் அங்க நடக்குற உச்சக்கட்ட ஆக்ட்டிவிட்டி..


மறுநாள்....ஷங்கர் வீடு.


ஷங்கர், ‘டவுன் ஹை ஸ்கூல்’ பள்ளியின் விண்ணப்பத்தை நிரப்பிக்கொண்டிருந்தான். குமார் அங்கு வந்தான்.


குமார் : இந்தா, இதையும் ஃபில் பண்ணு. (அவர்கள் பள்ளியின் விண்ணப்பத்தை கொடுத்தான்)


ஷங்கர் : நான் தான் ஸ்கூல் மாறப்போறேன்னு அப்போவே சொன்னேனே. எனக்கு இந்த அப்ளிக்கேஷன் வேண்டாம்.


குமார் : டேய், நான் சொல்லற விஷயத்தை முதல்ல கேளு. அப்புறம் நீயே முடிவு பண்ணிக்கோ.


ஷங்கர் : .......


குமார் : நேத்து நீ அப்படி சொல்லிட்டுப் போன உடனேயே, பாபு ஸ்கூலுக்குப் போய் லீலா மிஸ் கிட்ட பேசியிருக்கான். அடுத்த வருஷம் நம்ம ஸ்கூல் சார்புல நிறைய போட்டிகள்ல கலந்துக்க, +1 பசங்களை அனுப்பப்போறாங்களாம். அது மட்டும் இல்ல, நம்ம ஸ்கூல்லயே சிலஈவன்ட்ஸ்’ நடத்த ப்ளான் வெச்சிருக்காங்களாம்.


ஷங்கர் : என்ன? ஜெபக்கூட்டம் நடத்தப்போறாங்களாமா? காதுல பூ.....


குமார் : நான் கூட முதல்ல நம்பல. இந்த திடீர் மாற்றத்துக்கு காரணம், ARR ஸ்கூல் இருந்து நம்ம ஸ்கூலுக்கு வந்திருக்குற ஹில்டா மேடம் தான். அவங்க தான் இப்போ புது வைஸ்-பிரின்சிபால்.


ஷங்கர் : ............


குமார் : நீ மட்டும் தனியா போய் என்னடா பண்ணுவ? பேசாம வா... நாங்க யாருமே இன்னும் அப்ளிக்கேஷன் போடல.... உனக்காக தான் வெயிட் பண்ணறோம்....


ஷங்கர் : ............


குமார், காத்துக்கொண்டிருந்தான். சிறிது நேரத்திற்குப் பிறகு, குமார் கொடுத்த விண்ணப்பத்தை எடுத்து, நிரப்பத்தொடங்கினான்.


பாபு,நட்டு,பாலா ஆகியோர் 'பயாலஜி'பிரிவை எடுத்திருந்தனர். மற்ற மூவரும், "கம்ப்யூடர்" பிரிவை எடுத்திருந்தனர். விண்ணப்பத்தில், பெற்றோர் கையெழுத்து அவசியம் தேவை. ஆனால், ஷங்கரின் பெற்றோர் ஊரில் இல்லாததால், அவன் இரெண்டு நாள் கழித்து விண்ணப்பிப்பதாகக் கூறினான்.


குமார் : அதெல்லாம் வேண்டாம். உங்க அப்பா கையெழுத்து இல்லேன்னா என்ன? நீயே போடு.


ஷங்கர் : டேய்......இதெல்லாம் ரொம்ப ஓவர்.


குமார் : நீ எப்போ டா இவ்வளவு நல்லவன் ஆன?? இதெல்லாம் நமக்கு சகஜமாச்சே..


ஷங்கர் : அப்படி என்னடா அவசரம்?


குமார் : டேய், இந்த வருஷம் வேற ஸ்கூல் பசங்க நிறைய பேரு நம்ம ஸ்கூலுக்கு வர்றாங்க. எதுக்கு வம்பு? நமக்கே சீட் இல்லாம போச்சுன்னா?


ஷங்கர் : பெரிய ஆக்ஸ் ஃபோர்டு யுனிவெர்சிடி......சீட் கிடைக்காம போறதுக்கு.


குமார் : நம்ம ஊருக்கு இது தான் டா ஆக்ஸ் ஃபோர்டு. இந்த டப்பா இங்கிலீஷைக் காட்டி டபாய்ச்சிக்கிட்டு இருக்காங்க.


(கேட் திறக்கும் சத்தம் கேட்டது)


ஷங்கர் : யாருன்னு பாரு....


கிருஷ்ணா, நட்டு, பாபு, பாலா எல்லாம் சேர்ந்து வந்தனர். அனைவரிடமும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இருந்தன.


ஷங்கர் : எல்லாரும் ஒரு முடிவோட தான் வந்திருக்கீங்களா?


கிருஷ்ணா : ஆமா டா....இப்போவே நம்ம எல்லாரும் சேர்ந்து போய் குடுத்திருவோம்...


ஷங்கர் : எங்க அப்பா கிட்ட சொல்லவே இல்ல டா... நானே எங்க அப்பா கையெழுத்து போட்டுட்டேன்.


கிருஷ்ணா : சரி, போன் பண்ணி சொல்லிடு. சிம்பிள்….


பள்ளி நுழைவுவாயில்....


ஏகப்பட்ட கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது. அனைத்து வகுப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்தது.


ஒரே ஒரு கம்பிகளால் அடைக்கப்பட்ட ஜன்னல், அதில் ஒருவர் மட்டுமே கை நுழைக்கக்கூடிய அளவில் ஒரு ஓட்டை. இது தான் ஒட்டு மொத்த பள்ளியின் "ஸ்டோர்ஸ்" மற்றும் "ஆபீஸ் ரூம்". 50 பைசாமேப்’ வாங்க வேண்டுமென்றாலும் சரி, சேர்க்கைக்கான கட்டணம் செலுத்த வேண்டுமானாலும் சரி, LKG முதல் +2 வரை, அனைவரும் அங்கு தான் வர வேண்டும். அங்கு இருந்த நீண்ட வரிசையில் நின்று பணம் செலுத்திவிட்டு, அந்த ரசீதை பெற்றுக்கொண்டனர். விண்ணப்பங்களை, ஒருவர் பின் ஒருவராக மேடத்தை நேரில் பார்த்து தான் கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.


ஒவ்வொருவரும் மேடத்தின் அறைக்குள் சென்று விண்ணப்பத்தைக் கொடுத்துவிட்டு வந்தனர். ஷங்கரின் முறை வந்தது. அவன் உள்ளே சென்றான்.


பாபு : நம்ம போட்ட 'பிட்டு' நல்லா வொர்க்-அவுட் ஆயிருக்கு போல இருக்கு?


குமார் : ஆமா டா... அவனை நம்ப வைக்கிறதுக்குள்ள..... யப்பா.....


பாபு : ஒரு வழியா அவன் மனசை மாத்தியாச்சு....


குமார் : டேய், நம்ம இப்படி கலர் கலரா ரீல் விட்டது தெரிஞ்சா முதல்ல என்னை தான் டா அடிப்பான்....


பாபு : பாத்துக்கலாம்....


ஷங்கர், வெளியில் வந்தான்.


பாபு : என்னடா, குடுத்துட்டியா?


ஷங்கர் : மேடம், என்னை பயாலஜியில சேர சொன்னாங்க.எங்க அப்பா மாதிரி நான் டாக்டருக்கு படிக்கணுமாம்.


பாபு : அய்யய்யோ....நாடு தாங்காது.


ஷங்கர் : டேய், உன்ன மாதிரி ரூபி 'மிஸ்'ஸை சைட் அடிக்கிறதுக்காக நான் பயாலஜி குரூப் எடுக்க முடியுமா? எனக்கு அதுல உண்மையிலேயே இன்ட்ரெஸ்ட் இல்ல... எங்க அப்பா சம்மதத்தோட தான் நான் கம்ப்யூட்டர் குரூப் எடுக்குறேனான்னு கேட்டாங்க. நான் ஒரே ஒரு வார்த்தை சொன்னேன், உடனே சரின்னு என் அப்ளிகேஷனை வாங்கிட்டாங்க.


பாபு : என்னடா சொன்ன?


ஷங்கர் : (தலைவர் ஸ்டைலில்)உண்மையை சொன்னேன்.....


அடுத்த பதிவில்.... +1 சேட்டைகள் ஆரம்பம்.