'சேட்டை'ய ராஜாக்கள் - 17
அடுத்ததாகக் களமிறங்கினான் கிருஷ்ணா. அவன் எதிர்கொண்ட முதல் பந்து 'பௌன்சராக' அமைந்தது. அதில் ரன் எடுக்க முடியவில்லை. அடுத்த இரெண்டு பந்துகளில் இரெண்டு பௌண்டரிகள் அடித்து கொஞ்சம் நம்பிக்கையை ஏற்படுத்தினான். குமார் உற்சாகமிழந்து காணப்பட்டான். அந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் கிருஷ்ணா ஒரு ரன் எடுக்க, கடைசி பந்தை குமார் எதிர்கொண்டான். அடித்து ஆட வேண்டிய கட்டாயத்தில் இருந்த குமார், அந்த பந்தை தூக்கி அடிக்க முற்பட, அந்த பந்து 'யார்க்கராக' வந்து, குமாரின் லெக் ஸ்டம்ப்பைப் பதம் பார்த்தது. விரக்தியுடன் வெளியேறினான் குமார்.
4 ஓவர்களில் 26 ரன்கள் தேவை என்ற நிலை. கையில் 7 விக்கெட்டுகள் மீதம் இருந்தன. யாரேனும் ஒருவர் நிலைத்து ஆடினால் ஜெயித்துவிடலாம் என்று, பாபு அடுத்து களமிறங்கிய அம்சராஜனிடம் கூறினான். ஆனால், பாபுவிற்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அடுத்த ஓவரில், அம்சராஜன் எதிர்கொண்ட முதல் பந்திலேயே அவுட்டாகி வெளியேற, அடுத்ததாக செழியன் களமிறங்கினான். அந்த ஓவரில் அதிக ரன்கள் எடுக்க முடியவில்லை. அந்த பௌலர் மிகச்சிறப்பாக பந்து வீசினான்.
3 ஓவர்களில் 20 ரன்கள் எடுக்க வேண்டும். இந்த ஓவரில் கிருஷ்ணாவால் ஒரே ஒரு பௌண்டரி மட்டுமே அடிக்க முடிந்தது. செழியன், மறுமுனையில் கிருஷ்ணாவிற்கு துணையாக நிலைத்து ஆடினான்.
இன்னும் இரெண்டே ஓவர்கள் இருந்தன. 16 ரன்கள் எடுத்தால் போதும். ஒரு ஓவருக்கு இரெண்டு பௌண்டரிகள் வேண்டும் என்ற நிலை. முதல் பந்தை செழியன் எதிர்கொண்டான். அதில் ஒரு ரன் எடுக்கப்பட்டது. அடுத்த பந்தை கிருஷ்ணா, சிறப்பாகத் தூக்கி அடித்தான். 'லாங் ஆன்' திசையை நோக்கிச் சென்ற பந்து, அங்கு நின்று கொண்டிருந்த ஃபீல்டரின் கையில் பட்டு எகிறி, பவுண்டரிக்குள் சென்றது. அம்பயர் அதை சிக்ஸர் என்று அறிவிக்க, இழந்த உற்சாகத்தை மீண்டும் பெற்றனர் 'ஃபயரிங் கன்ஸ்' அணியினர். அந்த ஓவரில் மொத்தம் 7 ரன்கள் பெறப்பட்டது.
கடைசி ஓவரில் 9 ரன்கள் எடுத்தால் வெற்றி. முதல் பந்தை செழியன் எதிர்கொண்டான். கிருஷ்ணாவை பேட்டிங் முனைக்கு வரவழைக்க வேண்டும் என்பதால், பந்தை தடுத்து ஆடிவிட்டு, ஓடத்துவங்கினான். கிருஷ்ணா பேட்டிங் முனையை அடைந்து விட, செழியன் மறுமுனைக்கு சென்றடைவதற்குள் ரன் அவுட் ஆனான்.
நகத்தை கடித்துக்கொண்டு அமர்ந்திருந்தனர் "ஃபயரிங் கன்ஸ்" அணியினர். அம்மாப்பேட்டை அணியில் அனைவரும் நம்பிக்கையுடன் காணப்பட்டனர். அடுத்த பேட்ஸ்மேனாகக் களமிறங்கினான் பாலா. கடைசி ஓவரின் இரெண்டாவது பந்தை எதிர்கொண்ட கிருஷ்ணாவால், ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. மூன்றாவது பந்தை எதிர்கொண்டான் பாலா. ஆப் ஸ்டம்பிற்கு வெளியே வீசப்பட்ட பந்தை ஸ்கொயர் கட் செய்ய, பந்து பவுண்டரியை சென்றடைந்தது. 3 பந்துகளில் 4 ரன்கள் வேண்டும். மறுமுனையிலிருந்த கிருஷ்ணா, பாலாவிடம் சென்று அறிவுரை கூறினான்.
அவுட் ஃபீல்ட் பலமாக்கப்பட்டது. அனைத்து ஃபீல்டர்களும் பவுண்டரிக்கு அருகில் நின்றனர். கடைசி ஓவரின் ஐந்தாவது பந்து - சாதூரியமாக, மிகக் குறைந்த வேகத்துடன் பந்து வீசினான் அந்த பௌலர். பாலா வேகமாக அடித்தும், பந்து வேகமாக பயணிக்கவில்லை. டீப்-மிட்விக்கெட்டில் நின்று கொண்டிருந்த ஃபீல்டரின் கையில் தஞ்சம் புகுந்தது.
இன்னும் 2 பந்துகள். 4 ரன்கள் எடுத்தால் வெற்றி. புதிதாக வந்த முருகானந்த், முதல் பந்தை அடிக்க, மட்டையை சுழற்றினான். பந்து, மட்டையில் படாமல் கீப்பரிடம் சென்றது. ரன் எடுக்க வேண்டுமே என்கிற பதட்டத்தில் முருகானந்த் ஓடி வர, கிருஷ்ணா அவனை ஓட வேண்டாம் என்று சைகை காட்டினான். அவன் மீண்டும் கிரீசுக்குள் செல்வதற்குள் விக்கெட் கீப்பர் ஸ்டம்ப்பை சாய்த்திருந்தான்.
கடைசி பந்தில் நான்கு ரன்கள் எடுத்தாகவேண்டும். பவுண்டரி, அல்லது சிக்ஸர் அடித்தால் மட்டுமே வெற்றி பெறலாம். பேட்டிங் முனையில் கிருஷ்ணா இல்லாததால், அம்மாப்பேட்டை அணியினர் போட்டியில் தாங்கள் வெற்றி பெற்றுவிட்டதாகவே கருதினர். புதிதாக உள்ளே நுழைந்தான் நட்டு. கடைசி பந்தை மிடில் ஸ்டம்பிற்கு நேராக நேர்தியாக வீச, அதில் ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. ஆட்ட முடிவில் 3 ரன்னில் தோல்வியைத் தழுவியது "ஃபயரிங் கன்ஸ்" அணி.
பந்தயப் பணமான இருநூறு ரூபாயை எதிர் அணி கேப்டனிடம் கொடுத்தான் பாபு. பாபு உட்பட அனைவரும் இறுக்கமான முகத்தோடு காணப்பட்டனர். அம்மாப்பேட்டை அணியினர் கலைந்து சென்றுவிட, இவர்கள் மட்டும் மரத்தடியில் அமர்ந்திருந்தனர். ஒரு இறுக்கமான அமைதி நிலவியது. அந்த அமைதியைக் கலைத்தான் செழியன்.
"நான் கிளம்புறேன் டா.... சாயங்காலம் ஊருக்குப் போகணும்" என்று கூறிவிட்டு விடைபெற்றுக் கொண்டான்.
"வெற்றிகரமா தோத்துப்போயாச்சு.... அப்புறம் என்ன? எல்லாரும் கிளம்பவேண்டியது தான??" என்றான் பாபு.
யாருமே பதில் பேசவில்லை.
"சுலபமா ஜெயிக்க வேண்டிய மேட்ச்.... இதைக் கோட்டை விட்டது கேவலம். 200 ரூபாயும் போச்சு. ஏனோ தானோன்னு ஆடினா இப்படித்தான்" என்றான் பாபு.
தன்னைத்தான் குறிப்பிடுகிறான் என்று நினைத்த குமார், கோபமடைந்தான்.
"தேவை இல்லாம பேசாதே. எதுவா இருந்தாலும் முகத்துக்கு நேரா சொல்லு" என்றான் பாபுவைப் பார்த்து.
"நீ எதுக்கு கோபப்படற? நான் உன்னை சொன்னேனா??" என்று பாபு கேட்க,
"எனக்கு முன்னால கிருஷ்ணாவை அனுப்பியிருக்கலாம். ‘கேப்டன்’ங்குற ஈகோ உனக்கு" என்றான் குமார்.
"என்னை ரன் அவுட் வேற பண்ணிவிட்டுட்டு இந்த பேச்சு வேறயா??" என்றான் பாபு.
"விடுங்க டா... யாராவது வேணும்ன்னே அப்படி ரன்-அவுட் பண்ணுவாங்களா?? இதெல்லாம் சகஜம் தானே" என்றான் ஷங்கர்.
குமார் மிகுந்த எரிச்சலடைந்தான். விருட்டென்று தன் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.
"இரு டா.... எங்க போற??" என்று கேட்டு முடிப்பதற்குள், வண்டியை விரட்டிக்கொண்டு கிளம்பினான் குமார்.
"விடு டா.... போகட்டும். அடுத்த மேட்ச் அவனைத் தூக்கிருவோம்" என்றான் பாபு.
"அவன் சொல்லறதுக்கும் நீ செய்யிறதுக்கும் சரியா இருக்கும். லூசு மாதிரி பேசாதே... கோபத்துல கண்டதை பேசாம வீட்டுக்குக் கிளம்பு" என்றான் ஷங்கர்.
"அவன் என்ன சொன்னாலும் எனக்குக் கவலை இல்ல. இவன் நம்ம டீமுக்கு வேண்டாம். அடுத்த மேட்ச் அவன் ஆடினா, நான் ஆட மாட்டேன்" என்று கூறிவிட்டு பாபுவும் சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
"என்னடா இது.... ஒண்ணும் இல்லாத பிரச்னையை ஊதி ஊதி பெருசாக்கிட்டானுங்க" என்றான் பாலா.
"குமார் சொன்ன மாதிரி அவனை பேட்டிங் ஆர்டர்ல கீழே ஆட விட்டிருக்கலாம். அவனுக்கு கான்ஃபிடன்ஸ் லெவல் கம்மியா இருக்கு" என்றான் ஷங்கர்.
"நம்ம பேட்டிங் ஆர்டரை மாத்துறது ரொம்ப கஷ்டம் டா... எல்லாரும் நல்லா செட் ஆயிட்டோம். பாபு பண்ணது சரி தான்" என்றான் கிருஷ்ணா.
"யார் சரி, யார் தப்புன்னு இப்போ பேச வேண்டாம். இந்த லீவ் முடியிறதுக்குள்ள இன்னொரு மேட்ச் ஆடணும். அப்புறம் பப்ளிக் எக்ஸாம் நெருங்க நெருங்க, ரிவிஷன் டெஸ்ட், அது, இதுன்னு போட்டு டார்ச்சர் பண்ணிருவாங்க...." என்றான் பாலா.
அனைவரும் கலைந்து சென்றனர்.
ஷங்கர் வீட்டிற்குள் நுழையவும், டெலிஃபோன் மணி ஒலிக்கவும் சரியாக இருந்தது. எடுத்துப் பேசினான்.
"ஹலோ... "
மறுமுனையில் : "ஹலோ ஷங்கர், நான் குமாரோட அம்மா பேசுறேன். அவன் இன்னும் வீட்டுக்கு வரல..... உன்கூட இருக்கானா??"
ஷங்கர் : ("அவன் எப்போவோ கிளம்பிட்டான்" என்று சொல்ல வந்தவன், வார்த்தைகளை விழுங்கிவிட்டு) "இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவான் ஆண்ட்டி... கிருஷ்ணா வீடு வரைக்கும் போயிருக்கான்" என்று கூறிவிட்டு ஃபோனை துண்டித்தான்.
தொடரும்...
4 comments:
nalla karuthu
enna gowri unga team kadaisiayaavathu win panuvaanganu paatha, ipadi aakidiche....
Teacher: Name the famous episodes of south India....
Student: Ramayan, Mahabharath and Setayarajas.....
Teacher: Very gud...
Ezhuthu nadayil nalla munetram. :)
Post a Comment