'சேட்டை'ய ராஜாக்கள் - 15
கீழ் ரூமிலிருந்த ஒரு போர்வையை எடுத்து முக்காடு போட்டுக்கொண்டு மெல்ல மேலே சென்றான். பயம் இருந்தாலும், ஆவிகளைப் பற்றிப் பேசுவதை நிறுத்தாமல், சுவாரசியமாக இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். முக்கால்வாசி மூடியிருந்த கதவின் முன், தன் முக்காடு போட்ட முகத்தோடு நின்றான் ஷங்கர். வெளியில் எரிந்து கொண்டிருந்த விளக்கின் மந்தமான வெளிச்சத்தில், ஷங்கரின் முகம் தெரியவில்லை. இருவரில் யாராவது ஒருவர் கவனிக்கட்டும் என்று பொறுமையாக காத்துக்கொண்டிருந்தான் ஷங்கர்.
சில மணித்துளிகள் கழித்து, எத்தேச்சையாக பாபு கதவைப் பார்க்க, அங்கே ஓர் உருவம் நிற்பதைப் பார்த்து திடுக்கிட்டான். உடனே முகத்தைத் திருப்பிக்கொண்டான். பாபுவின் முகம் மாறியதை அந்த ஒரு நொடியிலேயே கவனித்துவிட்டிருந்தான் ஷங்கர். இருந்தும், அதைப் பற்றி பாபு, குமாரிடம் கூறவில்லை. கொஞ்சம் நேரம் கழித்து மீண்டும் பாபு தயங்கித் தயங்கி கதவைப் பார்க்க, ஷங்கர் அதே கோலத்தில் அசையாமல் நின்றிருந்தான். பாபுவின் முகம் வெளிறியது. குமார் பேசிக்கொண்டிருந்ததை பொருட்படுத்தாமல்,
"டேய்..... அங்கே ஏதோ ஒரு உருவம் நிக்கிற மாதிரி இருக்கு..." என்றான்.
"நீ வேற பயந்து, என்னையும் பயமுறுத்தாத.... சும்மா இரு" என்றான் குமார்.
மீண்டும் ஒரு முறை கதவைப் பார்த்தான் பாபு.
"டேய், சத்தியமா இருக்கு டா, நீ வேணும்னா பாரு" என்றான்.
ஷங்கருக்கு சிரிப்பு பீறிக்கொண்டு வந்தது. ரொம்ப சிரமப்பட்டு சிரிப்பை அடக்கிக்கொண்டான்.
குமார், கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, மெதுவாக கதவைப்பார்க்க, கதவு மூடப்பட்டிருந்தது. 'டக்'கென முகத்தை திருப்பிக் கொண்டு,
"கதவு மூடியிருக்கு டா..." என்றான்.
"நான் பார்த்தப்போ கதவு முழுசா மூடல...." என்று கூறிவிட்டு, மீண்டும் மெதுவாக ஓரக்கண்ணால் பார்த்தான் பாபு. இப்போது, மீண்டும் கதவு திறக்கப்பட்டிருந்தது. ஷங்கர், அதே போல் முக்காடு போட்டுக்கொண்டு நின்றுகொண்டிருந்தான்.
"அந்த உருவம் எனக்கு தெரியுது டா..... கதவு திறந்து தான் இருக்கு" என்றான் பாபு.
"ஷங்கரை கூப்பிடுவோமா???"
"அவன் கீழே இருக்கானே... யார் கூப்பிடறது?? நான் போகமாட்டேன்" என்றான் பாபு.
"நானும் போக மாட்டேன். பேசாம, ரெண்டு பெரும் சேர்ந்து 'லைட்'டைப் போட்டுருவோமா??? என்று கேட்டான் குமார்.
பேசிக்கொண்டிருக்கும்போதே, ஷங்கர் மெல்ல கதவைத் திறந்தான்...
"டேய், கதவு திறக்குது டா...." நடுங்கிக்கொண்டே சொன்னான் பாபு.
பாபு இப்படி சொல்ல, குமார் இறுக்கமாக கண்களை மூடிக்கொண்டான். பயத்தின் உச்சத்தில் பாபு இருக்க, ஷங்கர் வந்து லைட்டைப் போட்டான்.
ஷங்கரைப் பார்த்தவுடன், குமார் மற்றும் பாபுவின் முகங்களில் கொஞ்சம் நிம்மதி தெரிந்தாலும், ஏமாந்துவிட்டோமே என்ற ஆதங்கம் அதிகமாகத் தெரிந்தது. பாபுவிற்கு முகமெல்லாம் வியர்த்துவிட்டிருந்தது. நீண்ட நேரம் அடக்கி வைத்திருந்த சிரிப்பை எல்லாம் சேர்த்து சிரித்தான் ஷங்கர். கட்டிலின் மீதிருந்த தலையணையை ஷங்கரை நோக்கி வீசினான் பாபு.
"நாயே....." - இதற்கு மேல் வார்த்தை வரவில்லை.
ஷங்கர், தரையில் உருண்டு பிரண்டு சிரித்துக்கொண்டிருந்தான். குமார் மட்டும் எழுந்து வந்து ஷங்கரை தலையணையால் அடிக்கத்தொடங்கினான். சிறிது நேரத்தில், பாபுவும் சேர்ந்துகொள்ள, பத்து நிமிடம் தொடர்ந்து அடி வாங்கினான் ஷங்கர்.
"என்னடா இப்படி அநியாயத்துக்கு பயப்படறீங்க....!"
"நான் சும்மாதான் இருந்தேன், இவன் தான் பேய் கதை எல்லாம் சொல்லி என்னை பயமுறுத்திட்டான்" என்றான் பாபு.
"இன்னும் நாலு மணிநேரத்துல எழுந்திரிக்கணும்" - 3 மணிக்கு அலாரம் வைத்துவிட்டு தூங்கினர்.
அலாரம் அலறத்துவங்கியது. தூக்கக்கலக்கத்தில் ஷங்கர் எழுந்து, அதை அணைத்து விட்டு, டி.வி.யைப் போட்டான். டி.வி. வெளிச்சத்தில் பாபுவும் எழுந்துகொள்ள, ஆர்வத்துடன் மேட்ச் பார்க்கத் துவங்கினர். எவ்வளவு எழுப்பியும், குமார் எழவில்லை.
இந்தியா முதலில் 'பேட்' செய்ததால் குஷியடைந்தனர். நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சாளரான 'சைமன் டௌல்' பந்து வீச, முதல் பந்தை சித்து எதிர்கொண்டார். முதல் பந்திலேயே சித்து எல்பிடபிள்யூ முறையில் அவுட்டாகி வெளியேற, பாபுவும் ஷங்கரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அடுத்ததாக டிராவிட் வர, ஷங்கரின் முகத்தில் ஒளி பிறந்தது. டிராவிட், ஷங்கரின் அபிமான ஆட்டக்காரர் என்பதால், உற்சாகத்துடன் எழுந்து அமர்ந்தான். ஆனால், அந்த உற்சாகம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அவர் சந்தித்த முதல் பந்திலேயே அவுட்டாகிவிட, டி.வி.யை அணைத்தான் ஷங்கர்.
"அடுத்தது அசாருதீன் தான். நம்ம ராசியே சரியில்ல..... ஒருவேளை, நம்ம பாக்கலேன்னா நல்லா ஆடுவாங்களோ??"
மேட்ச் பார்ப்பதில்லை என்று முடிவு செய்துகொண்டு, இருவரும் தூக்கத்தில் ஆழ்ந்தனர்.
ஷங்கர் கண்விழித்து பார்த்தபோது மணி 10 ஆகியிருந்தது. குமார் எழுந்து வீட்டிற்கு சென்றிருந்தான். பாபு மேட்ச் பார்த்துக்கொண்டிருந்தான். ஷங்கர் எழுந்தவுடன், பாபுவும் தன் வீட்டிற்குச் சென்று, குளித்துவிட்டு ஷங்கருக்கு டிபன் எடுத்து வருவதாக சொல்லிவிட்டுக் கிளம்பினான்.
பாபுவிற்காக பசியுடன் காத்துக்கொண்டிருந்தான் ஷங்கர். சரியாக 11 மணிக்கு பாபு வந்தான். கையில் டிபன் கூடையுடன், ஒரு புத்தகக்கட்டுடன் வந்துகொண்டிருந்தான்.
"சீக்கிரம் வாடா.... செம பசி"
"முதல்ல சாப்பிடு. அதுக்கப்புறம் ஒரு சூப்பர் மேட்டர் இருக்கு...." என்றான் பாபு.
"என்ன மேட்டர்?"
கையிலிருந்த புத்தகக் கட்டைக்காண்பித்தான் பாபு.
"நானே கேட்கணும்ன்னு இருந்தேன். என்னது அது?"
"1980கள்ல வெளிவந்த 'கில்மா' பத்திரிகை தொகுப்பு"
"உனக்கு எப்படி டா கிடைச்சது??"
"இப்போ அதுவா முக்கியம்? சீக்கிரம் சாப்பிட்டுட்டு வா....."
அசுர வேகத்தில் சாப்பிட்டான் ஷங்கர். மற்றவர்களுக்கும் தகவல் பறந்தது. தகவல் கிடைத்த பத்தாவது நிமிடத்தில் குமார் ஆஜர் ஆனான். மற்ற மூவர், அடுத்த அரை மணிநேரத்தில் ஆஜர் ஆனார்கள்.
காலிங்க்பெல் ஒலித்தது. யார் என்று பார்க்க முற்பட்டபோது, பாபு,
"அவன் என் பக்கத்துவீட்டுப் பையன். இந்த புக்ஸ் எல்லாம் அவனோடது தான்...." என்று, அவனை உள்ளே அழைத்து வந்து, அனைவருக்கும் அறிமுகப்படுத்தினான். அவனும் சகஜமாகப் பேசினான்.
"எங்க தாத்தா சொத்து சேர்த்து வைக்கல..... இதை தான் சேர்த்து வெச்சிருக்கார்" என்றான் கிண்டலாக.
"உங்க தாத்தா நல்லா இருக்கணும்" என்று பாலா வாழ்த்தினான்.
"அவரு மண்டைய போட்டு மூணு வருஷம் ஆகுது" என்று அவன் கூறியவுடன், பாலா தர்மசங்கடத்தில் நெளிந்தான்.
"அவரோட பெட்டியில இருந்தது. யாருக்கும் தெரியாம எடுத்து பாபுகிட்ட குடுத்தேன்".
அனைவரும் மொட்டைமாடிக்குச் சென்றனர். அங்கே வட்டமாக அமர்ந்தனர்.....
தொடரும்...
3 comments:
dae ,
ellam supera irukku.. aana neraya factsa maathi potuta... Paravaala manichiduraen..
andha matchla Azhar century adichaan.. Dravid oda first duck ... Nalla Nyabagam irukku...
Apporoem Naanum kumarum unna thrupthi paduthurathu kaga nadichom..
Sari vidu kadaiku unmai theriya va pogudu...
i dnt belive they are facts..kadai mathiri irukku
hmmm nice though....
Dai ellam nalla dhaan irukku.. but ennadhaan damage pannita... It's ok...
I think this should be compliled... Come on Gowri... Only you can do that!!
Post a Comment