'சேட்டை'ய ராஜாக்கள் - 14
பரீட்ச்சை பேப்பரை கிழித்து விட்டெறிந்தார் மேடம். ஐந்து பேரும் தலைகுனிந்து நின்றுகொண்டிருந்தனர். கண்ணெல்லாம் சிவந்து, கண்ணுக்குக் கீழ் இருக்கும் சதைப் பகுதி துடித்துக்கொண்டிருந்தது. இவர்களுக்கு, அப்படியே ஒரு 'லேடி' விஜயகாந்த்தைப் பார்ப்பது போல் இருந்தது. "எக்கோ" அடிக்கும் குரலில், அவருக்கே உரிய ஆங்கிலத்தில், கன்னாபின்னாவென்று திட்டினார். எல்லோரது பேப்பரையும் கிழித்து எறிந்துவிட்டு, அனைவரையும் வீட்டிற்குக் கிளம்ப சொன்னார். எல்லோரிடமும் இருந்த ஒரே ஆயுதமான "மன்னிப்பு கேட்பதைக்" கையில் எடுத்தனர். அனைவரும் ஒருமித்த குரலில் "சாரி" சொல்லிக்கொண்டிருக்க, அதைக் காதில் கூட போட்டுக்கொள்ளாமல் அவர் வேலையை செய்யத்துவங்கினார்.
அடாது அலட்சியப் படுத்தினாலும், விடாது முயற்சி செய்துகொண்டிருந்தவர்களுக்கு பலன் கிடைத்தது.
“பாடம் நடத்தும் ஆசிரியரை கேலி செய்தால் பைத்தியமாகி விடுவீர்கள்” என்று சாபம் விட்டார். பிறகு, அந்த தேர்வை மீண்டும் இப்பொழுதே எழுதுமாறு உத்தரவிட்டார். அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். 5.15 மணிக்கு தேர்வு தொடங்கும் என்று கூறப்பட்டது. மணி அப்போதே 5.05 ஆகிவிட்டிருந்தது. அந்த அறையை விட்டு வெளியில் வந்து பார்த்ததில், பள்ளியே வெறிச்சோடிக் கிடந்தது. பாபுவும் நட்டும் வெளியில் நின்றுகொண்டிருந்தனர்.
"என்னடா ஆச்சு?"
"போட்டுக் குடுத்துட்டா டா அந்த எலிமெண்டரி"
"என்ன சொன்னாங்க?"
"ரீ- டெஸ்ட் எழுதணும். இப்போ இன்னும் அஞ்சு நிமிஷத்துல..." சொல்லிவிட்டு வேகமாக தன் பையைத் திறந்தான் ஷங்கர். மற்றவர்களெல்லாம் பிரச்சனை ஓய்ந்ததே என்ற சந்தோஷத்தில் தேர்விற்கு சென்று கொண்டிருக்க, ஷங்கர் மட்டும் புத்தகத்தை எடுத்து தேர்வில் கேட்கப்பட்டிருந்த கேள்விகளுக்கான விடைகளை பார்க்கத் தொடங்கினான்.
"டேய், ரொம்ப அவசியமா??? சீக்கிரமா வாடா...." என்றான் கிருஷ்ணா.
"சைக்கிள் கேப்புல 'ஒன் வேர்ட் ஆன்சர்' எல்லாம் பாத்துட்டேன்" என்றான் ஷங்கர்.
"அடப்பாவி.... சரி சரி, எழுதிட்டு எனக்கும் காட்டு...."
"இங்க கிருஷ்ணா, கிருஷ்ணான்னு ஒரு மானஸ்த்தன் இருந்தானே பாத்தியா?" என்று நக்கலடித்தான் ஷங்கர்.
"சரி, சரி.... வாரிவிடாத...."
"டேய், மேட்ச்சை கேன்சல் பண்ணிடு. இன்னொரு நாளைக்கு வெச்சிக்கலாம். அவனுங்ககிட்ட சொல்லிட்டு நீ 6.30 மணிக்கு மகாமகாக் குளத்துக்கு வந்துடு" - வெளியில் நின்றுகொண்டிருந்த பாபுவிடம் சொல்லிவிட்டு அவசரமாகக் கிளம்பினான் ஷங்கர்.
"இவன் பாட்டுக்கு இவ்வளவு சுலபமா சொல்லிட்டு போய்ட்டான்.... எந்த மூஞ்சிய வெச்சிக்கிட்டு இனிமே போய் கேன்சல் பண்ணறது? ஏற்கெனவே ஒரு மணி நேரம் லேட்டு. அவனுங்க சும்மாவே நம்மளைக் கிண்டல் பண்ணுவானுங்க, இதுல பெட் மேட்ச்சுக்குக் கூப்பிட்டுட்டு, போகலேன்ன அவ்வளோதான்" என்று புலம்பினான் பாபு.
தேர்வு எழுதிவிட்டு வெளியில் வந்து பார்த்த போது மணி 6.30 ஆகிவிட்டிருந்தது. கிரிக்கெட் விளையாடப் போவதாக ஏற்கெனவே வீட்டில் சொல்லியிருந்ததால் பிரச்சனை இல்லை. இந்த விஷயத்தை அப்படியே மூடி மறைத்துவிடலாம் என்று அனைவரும் பேசிக்கொண்டனர்.
ஷங்கர், கிருஷ்ணா மற்றும் பாலா ஆகியோர், பள்ளிக்கு அருகில் இருக்கும் "சொக்கையன் கடை"க்குச் சென்றனர். உடனே வீட்டிற்குச் செல்ல யாருக்கும் பிடிக்கவில்லை. சொக்கையன் கடையிலிருந்த தொலைபேசியில் குமாரை அழைத்து அவனையும் மகாமகாக் குளத்துக்கு வரச்சொன்னான் ஷங்கர்.
சொன்னபடி பாபுவும் நட்டும் அங்கு வர, குமாரும் அங்கு வந்து சேர்ந்தான். நடந்ததை எல்லாம் ஒரு "ஃபிளாஷ் பேக்" ஓட்டிவிட்டு, அமர்ந்தான் ஷங்கர்.
"அப்பாடா, இந்த பிரச்சனையில என் விஷயத்தை சுத்தமா மறந்திடுவாங்க" என்றான் குமார்.
"அடப்பாவி, எங்க பிரச்சனையில நீ குளிர் காயாத...." என்றான் கிருஷ்ணா.
"அப்படி இல்ல டா... பிரச்சனை முடிஞ்சதுல்ல.... விடுங்கடா..."
"என்னை மட்டும் பார்த்து, “You are a notable case in Xth ‘A’” ன்னு சொன்னாங்க டா" என்றான் ஷங்கர்.
உடனே ஆர்வமாகிப் போன குமார், "டேய், நான் மாட்டினப்போ, எனக்கும் இதே டயலாக் அடிச்சாங்க டா...." என்றான்.
"சும்மா பூச்சாண்டி காட்றாங்க. என்ன பண்ணுவாங்க? +1 சீட் தர மாட்டாங்களாமா?? போடா.... அப்படி அவங்க தரலேன்னா நம்ம எல்லாரும் டவுன் ஹை ஸ்கூல் போயிடலாம்" என்றான் பாபு.
"நானும் அதை தான் யோசிக்கிறேன். எதுக்கெடுத்தாலும் அம்மாவை அழைச்சிட்டு வா, அப்பாவை அழைச்சிட்டுவான்னு... ஒரே டார்ச்சரா இருக்கு..." என்றான் ஷங்கர்.
அடிக்கடி பிரச்சனையில மாட்டிக்கிட்டு இருக்கோம். இனிமே இன்னும் பிரச்சனை பண்ணறோம், ஆனா மாட்டிக்காத மாதிரி பண்ணறோம்...." என்று சபதம் எடுத்தனர்.
"அந்த 'பெட்' மேட்ச்சை முதல்ல முடிக்கணும். நான் கேன்சல் பண்ண போனப்போ பயங்கர கடுப்பாயிட்டாங்க" என்றான் பாபு.
"அது பிரச்சனை இல்ல... வர்ற சனிக்கிழமை ஃபிக்ஸ் பண்ணிரு" என்றான் ஷங்கர்.
"சரி. இந்தியா - நியூசிலாந்து சீரீஸ் ஆரம்பிக்கிது டா.... ஆனா, நமக்கு ராத்திரி 3 மணிக்குத் தான் மேட்ச் ஆரம்பிக்கும்" என்றான் பாபு.
"எங்க வீட்ல எல்லாரும் ஊருக்குப் போறாங்க. நான் மட்டும் தான் தனியா இருக்கப்போறேன். எங்க வீட்ல மேட்ச் பாக்கலாம். எல்லாரும் எங்க வீட்டுக்கு வந்துருங்க டா..." என்றான் ஷங்கர்.
"இராத்திரி தங்கிட்டு, திரும்ப அடுத்த நாள் காலையில எழுந்து வீட்டுக்கு போறதெல்லாம் ரொம்ப கடி... நான் வார கடைசியில வர்றேன்" என்றான் கிருஷ்ணா. மொட்டையும் நட்டும் அவனை வழி மொழிந்தனர். பாபுவின் வீடும் குமாரின் வீடும் ஷங்கரின் வீட்டிற்கு மிக அருகில் இருப்பதால், அவர்கள் மட்டும் ஒத்துக்கொண்டனர்.
பாபுவும் குமாரும் ஷங்கர் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். வந்து முதல் வேலையாக ரிமோட்டைக் கையிலெடுத்து சேனல்களை மாற்றத் துவங்கினான் பாபு.
உள்ளே சென்றிருந்த ஷங்கர். "94 வது சேனல்ல வருது" என்றான்.
"டேய், நான் என்ன சேனல் தேடறேன்னு தெரியுமா???"
"நீ வேற எதை தேடப்போற?? F tv தானே?"
"ஆமா ஆமா.... விவரமா யாருமே பாக்காத மாதிரி 94 வது சேனல்ல வெச்சிருக்க..." என்று சொல்லிவிட்டு அந்த சேனலை அழுத்தினான்.
"ச்ச..... தண்டம். இப்போன்னு பாத்து இன்ட்ரெஸ்டிங்கா ஒண்ணுமே இல்ல...." என்று அலுத்துக் கொண்டான் பாபு.
"இன்ட்ரெஸ்டிங்ன்னா, எது மாதிரி டா??" என்று பாபுவின் வாயைக் கிண்டினான் குமார்.
"F tv ல வயலும் வாழ்வும் போடுவாங்க. அதான் இன்னும் வரலையேன்னு பாத்துக்கிட்டு இருக்கேன்"
டி.வி.யை நிறுத்திவிட்டு மூவரும் அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர். பேச்சு பல விஷயங்களைத் தாண்டி, பேய், பிசாசு, ஆவி ஆகியவற்றில் போய் நின்றது.
"சரி, ரொம்ப நேரமாச்சு. 3 மணிக்கு எந்திரிக்கணும். மேட்ச் ஆரம்பிச்சிரும். தூங்கலாம்...." என்று சொல்லிவிட்டு குமாரும் பாபுவும் மாடியில் இருந்த ஷங்கரின் அறைக்குச் சென்றனர். ஷங்கர், வீட்டைப் பூட்டிவிட்டு, விளக்கை எல்லாம் அணைத்துவிட்டு மெதுவாக படியேறி மாடிக்குச் சென்றான். குமாரும் பாபுவும் ஒருவித பயத்துடனேயே இருப்பதை உணர்ந்த ஷங்கர், மறைந்திருந்து அவர்கள் பேசுவதைக் கேட்டான். ஆவியைப் பற்றி திகிலுடன் பேசிக்கொண்டிருந்தான் குமார். பாபு, பயத்துடனேயே அதை கேட்டுக்கொண்டிருந்தான். ஷங்கருக்கு ஒரு யோசனை தோன்றவே, உடனே கீழே சென்றான்....
தொடரும்....
2 comments:
”லேடி விஜயகாந்தை பார்ப்பது போல இருந்தது” அருமையான உவமை.
பிரமாதமான வலைப்பதிவு
தொடரட்டும் உங்கள் சேவை
Addition of casual scenes here has added a very good feel to it ;)
waiting to c u scare the sit out of everybody in the nxt episode..
cant wait to read the nxt one..
the suspence is back :D
Post a Comment