அட்டைப்படம் முதல் கடைசிப்பக்கம் வரை அனைத்து புத்தகங்களையும் படித்தும், பார்த்தும் முடித்தனர்.
"நேரம் போனதே தெரியல...ரெண்டு மணிநேரம் ஓடிப்போச்சு...."
"இந்த மாதிரி என்னைக்காவது 'பிரேக்' விடாம பரீட்சைக்கு படிச்சிருப்போமா?"
"சரி, இப்போ இதையெல்லாம் என்ன பண்ணறது?" புத்தகங்களைக் காட்டி, பாபுவின் பக்கத்து வீட்டுப்பையனிடம் கேட்டான் குமார்.
"என்னால திருப்பி எங்க வீட்டுக்குக் கொண்டு போக முடியாது... இங்கேயே இருக்கட்டும்" என்றான் அவன்.
"இங்கேயேவா? வாய்ப்பே இல்ல.... என்னால எங்கேயும் ஒளிச்சிவைக்க முடியாது" என்றான் ஷங்கர்.
யாருமே அதைக்கொண்டு போகத்தயாராக இல்லை. அனைவரும், ஒரு மனதாக அவற்றை எரித்து விடுவது என்ற முடிவிற்கு வந்தனர். அதன்படி, அந்த புத்தகக்கட்டு முழுவதையும் மொட்டை மாடியில் வைத்தே எரித்தனர்.
நீண்ட நாள் திட்டமான 'பெட்' மேட்ச்சை நாளை வைத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்து, அதன்படி அம்மாசத்திரம் டீமிற்கும் தகவல் சொல்லியாகிவிட்டது. டவுன் ஹை ஸ்கூல் மைதானத்தில் 'சென்டெர்' பிட்ச் பிடித்து ஆடிக்கொள்ளலாம் என்று திட்டமிட்டனர். ஆட்ட வியூகங்களைப் பற்றி விவாதித்துக்கொண்டிருந்தனர்.
"ஃபயரிங் கன்ஸ்" (Firing Guns) - இது தான் இவர்கள் டீமின் பெயர். இதில், இவர்கள் ஆறு பேர், செழியன், அம்சராஜன் (எ) அம்ஸ் மற்றும் முருகானந்த் ஆகியோர் மட்டும் நிரந்தர உறுப்பினர்கள்.. மற்றவர்களெல்லாம், எப்போதுமே விளையாடுவார்கள் என்று கூற முடியாது. மேட்ச் நடக்கும் சமையத்தில் யார் ஃப்ரீயாக இருக்கிறார்களோ, அவர்கள் வந்து ஆடுவார்கள்.
"ஓப்பனிங் நானும் பாபுவும் இறங்குறோம்" என்றான் ஷங்கர்.
பொதுவாகவே அவர்கள்தான் ஓப்பனிங் என்பதால், அனைவரும் அதற்கு ஒப்புக்கொண்டனர்.
அடுத்து யார் ஆடுவது என்பதில் குழப்பம் இருந்தது. பொதுவாக, அந்த இடத்தில் குமார் ஆடுவது வழக்கம். ஆனால், கடந்த சில போட்டிகளில் தன்னால் அந்த இடத்தில் சோபிக்க முடியவில்லை என்பதால், பேட்டிங் வரிசையில் நான்காம் அல்லது ஐந்தாம் இடத்தில் ஆட வேண்டும் என்று நினைத்திருந்தான் குமார். ஆனால், நான்காம் மற்றும் ஐந்தாம் இடங்களில் நன்றாக ஆடும் கிருஷ்ணா மற்றும் செழியனை மாற்ற, அணித்தலைவனான பாபு விரும்பவில்லை. எவ்வளவு கூறியும் பாபு சம்மதிக்காததால் குமாருக்கு விருப்பமில்லை என்றபோதும், வேறு வழியில்லாமல் தன் வழக்கமான மூன்றாம் இடத்திலேயே ஆடுவதற்கு சம்மதித்தான்.
அன்று மாலை, நட்டின் வீட்டிற்கு அருகிலிருக்கும் சிறிய மைதானத்தில் பயிற்சியில் ஈடுபடுவது என்று முடிவு செய்து, அனைவரும் அங்கு சென்றனர். இவர்கள் ஆறு பேரும் முதலில் சென்று விட, செழியன் கொஞ்சம் தாமதமாக வந்து சேர்ந்தான். அணியின் பிரதான வேகப்பந்து வீச்சாளர் என்பதால், முதலில், அவனையும் கிருஷ்ணாவையும் பயிற்சியில் ஈடுபட வைத்தான் பாபு. மற்றவர்கள் எல்லாம், இன்னொரு பந்தை வைத்து 'பீல்டிங்' பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
பயிற்சி முடிந்து வந்த கிருஷ்ணா, 'பேட்'டை குமாரிடம் கொடுக்க, செழியன் பந்தை பாபுவிடம் வீசினான். ஆனால், பாபு பந்து வீசுவதைப் பார்த்தவுடன், குமார் ஷங்கரிடம் பேட்டைக்கொடுத்துவிட்டு நகர்ந்தான். பாபுவின் மேல் குமார் கோபமாக இருப்பதை உணர்ந்தான் ஷங்கர். இரெண்டு மணிநேரம் பயிற்சியை முடித்துவிட்டு, அனைவரும் கலைந்து சென்றனர்.
மறுநாள் காலை 8 மணி - டவுன் ஹை ஸ்கூல் மைதானம்.....
அம்மாப்பேட்டை டீமில் அனைவரும் வந்திருந்தார்கள். சொன்னபடி, மைதானத்தின் மையத்தில் இருக்கும் ஆடுகளத்தைப் பிடித்து வைத்திருந்தார்கள். இவர்கள் அணியில் பாலாவைத் தவிர, அனைவரும் வந்திருந்தார்கள். அம்பயராக முன்னாள் தஞ்சாவூர் மாவட்ட அணி வீரர் ஓருவரை அம்மாப்பேட்டை அணியினர் அழைத்து வந்திருந்தார்கள். 'டாஸ்' போட பாபுவையும், அந்த அணித்தலைவனையும் அழைத்தார் அவர். 'டாஸ்' வென்ற அம்மாப்பேட்டை அணி, முதலில் பேட் செய்ய தீர்மானித்தது.
'டாஸ்' எல்லாம் முடிந்து, களத்தில் இறங்கும் வேளையில் அவசர அவசரமாக வந்து சேர்ந்தான் பாலா. அனைவரும் அவனைப்பார்த்து முறைக்க, "சாரி டா" என்ற அவனது வழக்கமான பதிலைக் கூறினான்.
முதல் ஓவரை செழியன் வீச, அதில் 3 ரன் எடுக்கப்பட்டது. அடுத்த ஓவரை மித வேகப்பந்து வீச்சாளரான பாலா வீசினான். அதில் 2 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தான். வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசியதால், அவர்கள் முதல் ஐந்து ஓவர்களில் தடுப்பாட்டம் ஆடினர். ஐந்து ஓவர்களின் முடிவில், விக்கெட் இழப்பின்றி 17 ரன்கள் எடுத்திருந்தார்கள்.
பந்துவீச்சில் முதல் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டிய சூழ்நிலையில், விக்கெட் கீப்பராக நின்றிருந்த பாபு, பந்தை நட்டிடம் வீசினான். நட்டு, சுழற்பந்து வீசுவான். ரன்கள் விட்டுக்கொடுத்தாலும், எப்படியும் விக்கெட்டை கைப்பற்றி விடுவான். பெரும்பாலும், இவனது பந்துவீச்சில், அடிக்க நினைத்து ஆட்டமிழப்பவர்கள் அதிகம். முதல் ஐந்து ஓவர்களில் அதிக ரன்களை அவர்கள் அடிக்காததால், நட்டின் பந்துவீச்சை அடித்து ஆட முற்படுவார்கள் எனத்தெரிந்திருந்ததால், பீல்டர்களை பவுண்டரிக்கு அருகில் நிறுத்திவைத்திருந்தான் பாபு. அம்மாப்பேட்டை அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மன், நட்டின் முதல் மூன்று பந்துகளில் முறையே 2, 4, 4 ரன்கள் அடிக்க, நான்காவது பந்தையும் தூக்கி அடிக்க முற்பட்டு, 'கவர்ஸ்' திசையில் நின்றுகொண்டிருந்த கிருஷ்ணாவிடம் 'கேட்ச்' கொடுத்து அவுட்டானான்.
விக்கெட் எடுத்த மகிழ்ச்சியில் நட்டு துள்ளிக்குதிக்க, அனைவரும் வந்து நட்டை கட்டிக்கொண்டனர். அம்மாப்பேட்டை அணியில் அடுத்து களமிறங்கியவன் மிகச்சிறந்த இடதுகை ஆட்டக்காரன். மாவட்ட அளவில் ஆடக்கூடியவன் என்பதால், பாபு நட்டிடம் கவனமாகப் பந்து வீசுமாறு கூறினான். நட்டின் ஓவரில் மீதமிருந்த இரெண்டு பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு ரன் எடுத்தான் அவன். நட்டின் அந்த ஓவரில் மட்டும் 15 ரன்கள் போயிருந்தது. ஒரு விக்கெட் எடுத்திருந்தாலும், நட்டை பந்து வீசச்செய்தது தவறோ என்று எண்ணினான் பாபு. ஆனால், அவர்கள் அணியின் பிரதான சுழற்பந்து வீச்சாளர் இல்லாததால், பாபுவிற்கு வேறு வழி இல்லை.
அடுத்த ஓவரை வீசினான் அம்சராஜன். அதில் 4 ரன்கள் எடுக்கப்பட்டது. அடுத்த ஓவரை யாரிடம் கொடுக்கலாம் என்று ஷங்கரிடம் ஆலோசித்தான் பாபு.
"நட்டுக்கு இந்த ஓவர் குடுக்க வேண்டாம்ன்னு நினைக்கிறேன்" என்றான் பாபு.
"குமார் கிட்ட குடுக்கலாம். அம்ஸும் குமாரும் ஒரு ஸ்பெல் முடிக்கட்டும்" என்றான் ஷங்கர்.
"சரி, அவனை போடச்சொல்லு" என்று ஷங்கரிடம் கூறினான் பாபு.
குமாரும் அம்ஸும் கட்டுக்கோப்புடன் பந்துவீசினாலும், அவ்வப்போது அவர்கள் பவுண்டரிகள் அடித்து ஸ்கோரை உயர்த்திக்கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில், இருவரையும் அவர்கள் அடிக்கத்துவங்க, ரன்கள் வேகமாக அதிகரித்தன. சிறப்பாகப் பந்து வீசிய வேகப்பந்து வீச்சாளர்களை மீண்டும் அழைத்தான் பாபு. அவர்களுக்கு 2 ஓவர்கள் மட்டுமே மீதமிருந்தது. புத்திசாலித்தனமாக அந்த இரெண்டு ஓவர்களை மட்டும் கவனமாக ஆடினார்கள். செழியனின் பந்துவீச்சில், பாபுவிடம் கேட்ச் கொடுத்து ஒருவன் ஆட்டமிழக்க, குமாரின் பந்துவீச்சில் புதிதாக வந்த பேட்ஸ்மன் 'பௌல்ட்' ஆனான். அவன் ஆட்டமிழந்தாலும், அந்த இடதுகை ஆட்டக்காரன், மறுமுனையில் சிறப்பாக ஆடி, ரன்களை குவித்துக்கொண்டிருந்தான்.
11 ஓவரின் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 60 ரன்கள் எடுத்திருந்தனர். கடைசி நான்கு ஓவரில், அதிரடியாக ஆடி 33 ரன்கள் குவித்தனர். முடிவில் , 15 ஓவர்களில், 3 விக்கெட் இழப்பிற்கு ரன்கள் 93 எடுத்திருந்தனர்.
20 நிமிட இடைவெளியில், பாபுவும் ஷங்கரும் 'பேட்' செய்ய களத்தில் இறங்கினர். 15 ஓவரில், 94 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற கடினமான இலக்குடன் ஆடத்துவங்கினர். அவர்கள் ஆடியதைப்போலவே, முதல் ஐந்து ஓவர்கள் தடுப்பாட்டம் ஆடுவது என்று ஷங்கரிடம் கூறினான் பாபு. பாபு ஒரு முனையில் நிதானமாக ஆடினாலும், ஷங்கர் அடித்து ஆடினான்.
"டேய், லெக் சைடுல தூக்கி அடிக்காதே", "புல் ஷாட் எல்லாம் இப்போ ஆட வேண்டாம்", "ஆஃப்-ஸ்டம்ப் கார்டு எடுத்துக்கோ" என்று மறுமுனையிலிருந்து பாபு அவ்வப்போது கூறிக்கொண்டிருந்தாலும், ஷங்கர் அவர்கள் போட்ட 'லூஸ்' பால்களையும், ஷார்ட் பால்களையும் பவுண்டரிக்கு அனுப்பத்தவறவில்லை. ஐந்து ஓவர்களின் முடிவில், விக்கெட் இழப்பின்றி 34 ரன்கள் எடுத்திருந்தனர். சிறப்பான துவக்கம் அமைந்திருந்ததால், இனிமேல் அடித்து ஆட வேண்டாம் என்று கட்டாயமாகக் கூறினான் பாபு. ஆறாவது ஓவரின் முதல் பந்தை அவர்கள் அணியின் சுழற்பந்து வீச்சாளர் வீச, அதை எதிர்கொண்டான் ஷங்கர். லெக் ஸ்டெம்ப்பில் குத்தி, ஆஃப் ஸ்டெம்ப்பிற்கு எழும்பிய பந்தை கட் செய்ய முயன்ற போது, ஸ்டெம்ப்பிற்கு மிக அருகில் நின்றிருந்த விக்கெட் கீப்பர், அதை இலாவகமாக 'கேட்ச்' பிடித்தான். ஷங்கர் அவுட் ஆகி ஏமாற்றத்துடன் திரும்ப, அடுத்ததாக குமார் வந்தான். அவன் எதிர்கொண்ட முதல் பந்தையே பவுண்டரிக்கு விரட்டினான்.
குமாரும் பாபுவும் சரியாக பேசிக்கொள்ளவில்லை. ஓவர்கள் இடைவெளியிலும் எதுவும் பேசிக்கொள்ள வில்லை. பாபு பொறுப்புடன் ஆடிக்கொண்டிருக்க, அவனுக்குத்துணையாக குமார் ஒரு ரன், இரெண்டு ரன்கள் என்று ஸ்கோர் நகர உதவினான். 8 வது ஓவருக்குப் பிறகு, பாபு அடித்து ஆடத்துவங்கினான். 10 வது ஓவரின் முடிவில், ஒரு விக்கெட் இழப்பிற்கு 59 ரன்கள் எடுத்திருந்தார்கள்.
11வது ஓவரின் முதல் பந்தை எதிர்க்கொண்ட குமார், 'ஸ்கொயர் லெக்' திசையில் பந்தை அடித்துவிட்டு, ஓட ஆரம்பித்தான். இரெண்டு அடி எடுத்து வைத்தவுடன், மனதை மாற்றிக்கொண்டு ஓடாமல் நின்றான். மறுமுனையில் நின்றுகொண்டிருந்த பாபு, பாதி தூரம் வந்து விட்டு, அவன் ஓடாமல் நிற்பதைப் பார்த்ததும், மீண்டும் தன் முனையை நோக்கி ஓட, அதற்குள் அவனை ரன்-அவுட் செய்திருந்தார்கள் எதிர் அணியினர். வெறுப்புடன் குமாரைப் பார்த்துவிட்டு வெளியேறினான் பாபு.
4.5 ஓவர்களில் 35 ரன்கள் தேவை. 8 விக்கெட்டுகள் மீதம் இருந்தன.
தொடரும்....