'சேட்டை'ய ராஜாக்கள் - 4
இன்றிலிருந்து புதிய கிளாஸ். எப்படியாவது கடைசி இரெண்டு பெஞ்சுகளில் இடம் பிடித்துவிட வேண்டும் என்ற முடிவோடு, ஷங்கர் பள்ளிக்குக் கிளம்பினான். பிரேயர் பெல் அடிப்பதற்கு இன்னும் பத்து நிமிடங்கள் இருந்தன. கிளாசில் பாதி பேர் கூட இல்லை. காலியாக இருந்ததால், இடம் பிடிப்பது அவ்வளவு சிரமமாக இல்லை. கடைசி பெஞ்சில் உட்கார்ந்தால், ரோந்து போகும் டிசிப்ளின் சாரிடம் மாட்டிக்கொள்ள நேரலாம் என்பதால், அதை விடுத்து அதற்கு முன் இருந்த பெஞ்சில் அமர்ந்தான்.. அருகில் யாரை உட்காரச் சொல்வது என்று யோசித்துக்கொண்டிருந்தான். எப்படியும், குமாரை அழைக்க முடியாது. அவன் முதல் பெஞ்சில் தான் உட்காருவேன் என்று அடம் பிடிப்பான். யோசித்துக் கொண்டிருக்கும்போதே, அங்கு செழியன் வந்து சேர்ந்தான்.
"நேத்து மேட்சுல உன் தலைவர் வழக்கம் போல சொதப்பிட்டாரு போல..." என்று பேசிக்கொண்டே வந்து அருகில் அமர்ந்தான்.
" ஆமா... ஆனா, இந்த சீரீஸ்ல ஒரு செஞ்சுரி கண்டிப்பா போடுவான் பாரு" என்றான் ஷங்கர்.
"இப்ப அவன் இருக்குற ஃபார்ம்ல செஞ்சுரி எல்லாம் போட முடியாது, சிக்கன் மஞ்சுரி வேணா ட்ரை பண்ணலாம்" என்று நக்கலடித்தான்.
"பொறுத்திருந்து பார்" என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே, பாபுவும் அங்கு வந்து சேர்ந்தான்.
"டெஸ்ட் மாட்சுக்கு வேணும்னா டிராவிட் இருக்கலாம், ஒன் டே மேட்சுக்கு வேஸ்ட்டு டா" என்று அவன் பங்கிற்கு கடுப்பேற்றினான்.
"சரி டா... என்ன பெட்? இந்த சீரீஸ்ல ஒரு செஞ்சுரி கண்டிப்பா அடிக்கிறான்" என்று ஷங்கர் சவால் விடவும், பிரேயர் பெல் அடிக்கவும் சரியாக இருந்தது.
பிரேயருக்குக் கிளம்பும் போது அவசர அவசரமாக வகுப்பின் மற்ற மாணவர்கள் வகுப்பினுள்ளே நுழைந்தார்கள்.
பிரேயர் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, வகுப்பாசிரியராக யார் இருப்பார்கள் என்று ஷங்கரும் பாபுவும் விவாதித்துக் கொண்டே இருந்தார்கள்.
"டேய், நம்ம ஆத்தா கிளாஸ் மிஸ்ஸா இருந்தா எப்படி இருக்கும்?" என்று ஷங்கர் கேட்க,
"அதை எல்லாம் கிளாஸ் டீச்சரா போட மாட்டாங்க டா" என்று அலுத்துக் கொண்டான் பாபு.
"ஆத்தா" என்று அன்போடு அழைக்கப்படுவது வரலாறு பாடம் நடத்தும் ஆசிரியை. வயது ஐம்பதைத் தாண்டி இருக்கும். நாலரை அடி உயரம். அவர், வகுப்பில் உட்கார்ந்த இடத்தை விட்டு நகர மாட்டார் என்பதால், அவரது வகுப்பில் மாணவர்கள் "கபடி" யே ஆடுவார்கள். பிரேயர் முழுவதும் இந்த விவாதத்திலேயே நகர, வகுப்பிற்குத் திரும்பினார்கள்.
குமார், எதிர்பார்த்த படி முதல் பெஞ்ச்சில் தஞ்சம் அடைய, ஷங்கர், பாபு மற்றும் செழியன் ஆகியோர் அவர்கள் இடத்தில் அமர்ந்தனர். அவர்களது பெஞ்ச்சில் இன்னொரு இடம் காலியாக இருக்க, யாரை அழைப்பது என்று ஷங்கர் யோசித்துக் கொண்டிருந்தான். முதல் வகுப்பு எப்பவுமே வகுப்பாசிரியரின் வகுப்பாகத்தான் இருக்கும் என்பதால், யார் வரப்போகிறார்கள் என்று அனைவரும் எதிர்ப்பார்த்தவண்ணம் இருந்தனர்.
யாரோ வகுப்பிற்குள் நுழையும் சத்தம் கேட்டதும், அனைவரும் ஆவலுடன் திரும்பிப் பார்த்த போது, அங்கு கிருஷ்ணா, வியர்வையில் குளித்தபடி வகுப்பிற்குள் நுழைந்தான்.
"வாழ்க்கைல ஒரு நாளாச்சும் சீக்கிரமா வாடா" என்று சொல்லிக்கொண்டே, பாபு அவனுக்கு அருகில் உட்கார இடம் கொடுத்தான். அவர்கள் இருவரும் ஏழாம் வகுப்பு முதல் ஒன்றாகப் படிப்பவர்கள். கிருஷ்ணாவும் ஷங்கரும் இதற்கு முன் ஒரே வகுப்பில் படித்ததில்லை என்றாலும், இருவருக்கும் அறிமுகம் இல்லாமல் இல்லை.
கிருஷ்ணா வந்து அமர்ந்ததும், "நட்டும் மொட்டையும் எங்கடா இருக்கானுங்க?" என்று கேட்டான். அவர்கள் இருவரும், எதிர்வரிசையில் இருந்த பெஞ்சுகளில் அமர்ந்திருந்ததைக் காண்பித்தான் பாபு.
"அவனுங்கள இங்க வர சொல்லு டா, பொழுது போகும்" என்றான்.
ஷங்கருக்கு முன்னால் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்த இருவரின் முதுகில் தட்டினான் ஷங்கர்.
அவர்கள் திரும்பியதும், "நீங்க ரெண்டு பேரும் அங்க போய் உக்காருங்க" என்றான்.
இருவரும் கோரஸாக "எதுக்கு?" என்று புருவத்தை சுருக்கி கேட்டனர்.
"எனக்கு முன்னால உட்கார்ந்திருக்குறவங்களோட மண்டைல அடிக்கடி தட்டி தட்டி விளையாடுவேன்.... பரவாயில்லையா?" என்று நக்கலாக கேட்டான்.
இதற்க்கு மேல் பேசி பலனில்லை என்று தெரிந்து கொண்டு, இருவரும் அமைதியாக எழுந்து செல்ல, நட்டும் மொட்டையும் அங்கு வந்து அமர்ந்தனர்.
ஒரு வழியாக இடப்பிரச்சனை ஓய்ந்தது. சிறிது நேரத்தில் கணக்கு ஆசிரியை வானதி வகுப்பிற்குள் நுழைந்தார்.
“என்னடா, ஓ.பி. அடிக்கிற மாதிரி யாரவது வருவாங்கன்னு பாத்தா, நமக்கு BP ஏத்துற மாதிரி வர்றாங்க.” என்று புலம்பினான் ஷங்கர்.
பாபு, "இதை விடு, zoologyக்கு புதுசா ஒரு மிஸ் வந்திருக்காங்க... சூப்பரா இருக்காங்க... நமக்கு வரணும்னு வேண்டிக்க டா" என்று எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாகக் கிளப்பி விட்டான்....
"என்னடா சொல்லற?" என்று ஷங்கர் கேட்டுக்கொண்டிருக்கும் போதே, கிருஷ்ணா zoology பீரியட் எப்போது என்று டைம் டேபிளைப் பார்த்தான்....
"டேய், அடுத்தது zoology பீரியட் தான் டா..." என்று கிருஷ்ணா கூற, அனைவரது முகங்களிலும் 'பல்பு' எரிந்தது.
தொடரும்...