+1 வகுப்பு ஆரம்பிக்கின்ற அன்று.... அனைவருக்கும், ஏதோ பள்ளிப்படிப்பையே முடித்து விட்டு, கல்லூரிக்குள் செல்கிற உணர்வு ஏற்பட்டது. 10வது மற்றும் 12வது மாணவர்கள் மீது தான் அனைவரது பார்வையும் இருக்கும். இந்த ஒரு வருடம் தான், இத்தனை வருட பள்ளிப்படிப்பிலேயே சிறந்ததாக இருக்கப்போகிறது. ஸ்பெஷல் கிளாஸ், கோச்சிங் கிளாஸ் என்று அலைக்கழிக்க மாட்டார்கள். விடுமுறைகள் எல்லாம் தாராளமாகக் கிடைக்கும். ரொம்ப கஷ்டப்பட்டு படிக்கத் தேவை இல்லை. இப்படி, பல சௌகரியங்கள் இருப்பினும், இந்த வருடம் முதல், "பயாலஜி" , "கம்ப்யூட்டர் சைன்ஸ்" என்று இரு வேறு பிரிவுகளாக வகுப்புகள் பிரிக்கப்பட்டதால், நண்பர்களை விட்டுப் பிரிகிறோமே என்கிற நெருடல் அனைவருக்கும் இருக்கத்தான் செய்தது.
நட்டு,பாபு மற்றும் பாலா ஆகியோர் "பயாலஜி" வகுப்பிலும், ஷங்கர், குமார் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் "கம்ப்யூட்டர்" வகுப்பிலும் இருந்தனர்.
"என்ன 10 கிலோமீட்டர் தள்ளியா இருக்கப் போறோம்? எட்டிப்பார்த்தா உன் மூஞ்சி தெரியப்போகுது..." - பாபுவிடம் சொன்னான் கிருஷ்ணா.
"இருந்தாலும், நம்ம எல்லாரும் ஒரே க்ளாஸ்-ல இருக்குற மாதிரி வருமா?" என்றான் பாபு.
"ஏதோ, நமக்கும் டாக்டர் சீட்டு கிடைக்கும்னு ஒரு குருட்டு நம்பிக்கையில பயாலஜி எடுத்திருக்கோம்..... பாப்போம்" என்றான் பாபு.
"டேய், இந்த 'டாக்டர்' கனவு எல்லாம் சொல்லி உங்க வீட்டுல எல்லாரையும் ஏமாத்தலாம். என்னை ஏமாத்த முடியாது. நீ ரூபி மிஸ்சுக்காக தான் "பயாலஜி" குரூப் எடுத்திருக்கன்னு எனக்கு தெரியும்" என்றான் ஷங்கர்.
இப்படிப் பேசிக்கொண்டே பள்ளியை வந்தடைந்தனர். பள்ளியைப் பார்த்ததும், பத்தாம் வகுப்பு தேர்வு முடித்து விட்டு, அனைவருமே வேறு பள்ளிக்கு மாறிவிடுவது போல, "இன்று தன் கடைசி நாள் என்று அனைவரும் வகுப்பின் ஒவ்வொரு மூலையிலும் நின்று ஓவராக பீல் பண்ணிய காட்சி, ஒரு " ஃப்ளாஷ் பேக்" போல ஓடியது.
"கடைசியில எங்கேயும் போகல.... அதே ஸ்கூல், அதே மேடம், அதே மாஸ்டர்... ஹும்ம்...." என்று அலுத்துக்கொண்டான் ஷங்கர்.
"தேவையில்லாம, ஓவரா ஃபீல் பண்ணிட்டோமோ?" என்றான் குமார்.
புதிய வகுப்புகள் எங்கு இருக்கிறதென்று தெரியாமல் தேடிக்கொண்டிருந்தனர்.
அப்போது, பின்னாலிருந்து யாரோ பாபுவை அழைக்கும் சப்தம் கேட்டது. பாபு பின்னால் திரும்பிப்பார்க்க, அங்கு பாலாஜி நின்றுகொண்டிருந்தான்.
"யாரு டா அது? நேதாஜியா, பாலாஜியா?" என்று குழம்பினான் பாபு.
பாபு மட்டுமல்ல. பள்ளியில் அனைவருமே குழம்புவார்கள். காரணம், நேதாஜியும் பாலாஜியும் இரட்டைப் பிறவிகள். பார்ப்பதற்கு அச்சு அசலாக ஒரே மாதிரி இருப்பார்கள். இந்த குழப்பத்தை தவிர்பதற்காகவே, +1ல் இருவரையும் வெவ்வேறு வகுப்பில் அமர்த்தப்போவதாக மேடம் அடிக்கடி கூறிக்கொண்டிருப்பார்.
பாபு அவனருகே சென்றான். யார் என்று சரியாக யூகிக்க முடியாததால், அவன் முதலில் வாயைத்திறக்கட்டும் என்று காத்துக்கொண்டிருந்தான்.
"நீயும் பயாலஜி தானே? நானும் அதே குரூப் தான். நேதாஜி தான் கம்ப்யூட்டர் சைன்ஸ்" என்றான்.
அப்போது தான் அவன் பாலாஜி என்று விளங்கியது. வகுப்புகள் "கிரௌண்டில்" இருப்பதாகக் கூறி, அனைவரையும் அங்கு அழைத்துச் சென்றான்.
பள்ளியின் மைதானத்தை, கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிப்பு செய்து, அதில் வகுப்பறைகளைக் கட்டியிருந்தனர். கிடைத்த இடங்களிலெல்லாம் வகுப்பறைகளைக் கட்டியதில், விடுபட்ட கொஞ்ச இடத்தை விளையாட்டு மைதானமாக பயன்படுத்திக் கொண்டிருந்தனர். இப்படி, மைதானத்தையொட்டி இருக்கும் வகுப்புகளைக் குறிக்கும் பொது, "கிரௌண்ட்" என்று பொதுப்படையாகவே குறிப்பிடுவது வழக்கம்.
நீளவாக்கில் அமைக்கப்பட்டிருந்த கீற்றுக் கொட்டகையில், வரிசையாக வகுப்புகள் இருந்தன. ஒவ்வொரு வகுப்பையும் பிரிப்பது, "ஸ்க்ரீன்" என்று சொல்லக்கூடிய, மெல்லிய கார்டுபோர்டினால் செய்யப்பட்ட தடுப்பு மட்டுமே.
அன்று முதல் நாள் என்பதால், மாணவர்கள் அனைவரும் உற்சாகமாக இருந்தனர். +1 வகுப்புகள் அனைத்தையும் அன்று தனித்தனி வகுப்பில் அமர்த்தாமல், ஒரே வகுப்பாக அமர்த்திருந்தனர். பார்த்துப் பழகிய முகங்களின் நடுவே, ஒரு சில புதிய முகங்களும் தெரிந்தன. அவர்கள், புதிதாக பள்ளிக்கு வந்து சேர்ந்தவர்கள் என்று பார்த்த உடனேயே விளங்கியது.
"பயாலஜி", 'கம்ப்யூட்டர் சைன்ஸ்" தவிர, "ப்யூர் சைன்ஸ்" என்று ஒரு வகுப்பு தனியாக இருந்தது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மிகக்குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள், அந்த வகுப்பில் இருந்தார்கள்.
பள்ளியில் பெரும்பாலும் பெண்களே ஆசிரியர்களாக பணிபுரிந்து கொண்டிருந்தார்கள். கடந்த 10 ஆண்டுகளில், இரெண்டு ஆண் ஆசிரியர்கள் பணிபுரிந்திருந்தால் பெரிய விஷயம். அப்படி இருக்கையில், அந்த வருடம் பள்ளியில் புதிதாக ஆண் ஆசிரியர்கள் சேர்ந்திருப்பதாக பேச்சு நிலவியது. அதை உண்மையாக்கும் வகையில், அங்கே ஆசிரியர் ஒருவர் வந்தார்.
முழு கை சட்டையும், அதை 'இன்' செய்து, நெஞ்சிற்கு கொஞ்சம் கீழே 'பேன்ட்'டும் அணிந்திருந்தார். மூக்கிற்கு கீழே, ஒல்லியான கம்பிளிப்புச்சியைப் போன்ற மீசையுடன், நகைச்சுவையாகத் தோற்றமளித்தார். தன் பெயர் செல்வம் என்றும், தான் 'ஃபிசிக்ஸ்' வாத்தியார் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டார்.
"பார்க்க காமெடியாத்தான் இருக்காரு, போகப் போகத்தான் தெரியும்" என்று கிசுகிசுத்தனர்.
புதிதாகப் பள்ளியில் சேர்ந்தவர்களை எழுப்பி, அவர்களையும் அறிமுகப்படுத்திக் கொள்ளுமாறு கூறினார். அறிமுகப் படலம் எல்லாம் முடிந்தது. பாடம் எதுவும் நடத்தப்படாததால், இரைச்சல் சத்தம் அதிகமாகக் கேட்டது. அங்கு நின்றிருந்த ஆசிரியர் பற்றி கவலைப்படாமல், அனைவரும் அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, திடீரென்று அனைவரின் கவனமும், செல்வம் சாரின் மீது திரும்பியது. எதற்காகவோ ஒரு மாணவனை திட்டிக்கொண்டிருந்தவர், அந்த மாணவனும் எதிர்த்துப் பேசவே, கடும் கோபத்துடன் அவர் அமருவதற்காக போடப்பட்டிருந்த நாற்காலியை எடுத்து, அவன் மீது வீசினார். நல்லவேளையாக அது யார் மீதும் படவில்லை. இப்படி ஒரு காட்ச்சியை யாருமே எதிர்ப்பார்த்திராததால், அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. வந்த முதல் நாளிலேயே இப்படி அவர் நடந்து கொண்டது, பலருக்கு அவர் மீது அச்சத்தை வரவழைத்தது.
அவர் நாற்காலியை வீசி எறிந்ததையும் பொருட்படுத்தாமல், அந்த மாணவன் எதிர்த்துப் பேசிக்கொண்டிருக்க, அவர் வகுப்பை விட்டு வெளியேறினார். நேராக மாஸ்டரிடம் புகார் செய்வதற்காகக் கிளம்பினார். அவ்வளவு இரைச்சலாக இருந்த இடம், திடீரென்று அமைதிப்பூங்காவாக மாறியது. செல்வம் சார் தங்கள் வகுப்பிற்கு வந்துவிடக்கூடாது என்று அனைவருமே வேண்டிக்கொண்டனர். அவர் உருவத்தைப் பார்த்து, அவரை லேசாக எடை போட்டவர்கள் எல்லாம், தங்கள் எண்ணத்தை அந்த நொடியிலேயே மாற்றிக்கொண்டனர்.
குமார் : "டேய், இவரு காமெடியா, டெரரா?"
ஷங்கர் : "தெரியலயேப்பா....."
(டங்...டடங்....டடங்....டடங்)
தொடரும்....