'சேட்டை'ய ராஜாக்கள் - 27
ஷங்கர் சொன்னதை தீவிரமாக யோசித்த பாபு, மறுநாள் காலையில் எப்படியும் அவரிடம் இன்று கேட்டு விடுவது என்று முடிவு செய்தான். நட்டு மற்றும் பாலாவை அருகில் வைத்துக்கொண்டு தான் பேச வேண்டும் என்று நினைத்திருந்தான். விபரீதமான விளைவுகள் ஏற்பட்டால், அதைப் பகிர்ந்து கொள்ளலாம் என்கிற நல்லெண்ணம் தான்!
'மிட்-டெர்ம்'இல் தேறாதவர்களுக்கு கட்டாயமாக, அந்தந்த பாடங்களில் டியூஷன் நடைபெறும். விருப்பம் இல்லையென்றாலும், அதில் சேர்ந்து தான் ஆக வேண்டும். தினமும் மாலை, பள்ளி முடிந்தவுடன் 5 முதல் 6.30 வரை நடைபெறும் இந்த சிறப்பு டியூஷனுக்கு, ஒரு மாணவருக்கு 100 ரூபாய் வீதம், அந்த ஆசிரியருக்கு சம்பளமாக அளிக்கப்படும். இதிலே செல்வம் சார் நன்றாக காசு பார்த்துக் கொண்டிருந்தார்.
அவரைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. பள்ளியில் சேர்ந்த புதிது வேறு. "சார், டியூஷன் எடுக்குறீங்களா?" என்று கேட்டால், "க்ளாஸ்-ல நான் எடுக்குறது புரியலையா?" என்று கேட்டு, திட்டம் 'பேக்-ஃபயர்' ஆகிவிட்டால் என்ன செய்வது என்றும் யோசனையாக இருந்தது. முதல் நாளே அவர் அப்படி நடந்துகொண்டு கலவரப்படுத்தியது அவன் கண் முன் நிழல் போல வந்து போனது. நட்டு வேறு அருகிலிருந்து அதை ஞாபகப்படுத்திக்கொண்டிருந்தான்.
"இதையெல்லாம் கரெக்டா ஞாபகப்படுத்து" என்று கடிந்துகொண்டான் பாபு.
போலீசிடம் நேரடியாக லஞ்சம் வாங்கிக்கொள்ளுங்கள் என்று சொல்ல முடியாமல் தவிக்கும் பொதுஜனம் போல, மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவித்தான் பாபு . ஒருவேளை, அவர் மேடத்திடம் போட்டுக்கொடுத்து விடுவாரோ என்றும் பயமாக இருந்தது. காலை முதல் வகுப்பே 'பிசிக்ஸ்' என்பதால், அனைவரும் திகிலோடு காத்திருந்தனர். 'டெரர்' மாதிரியே ஆரம்பித்தார்....
வந்ததும் வராததுமாய், முதலில் ஒரு 'கேள்வி நேரம்'. ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு, ஒவ்வொருவராக எழுப்பி விடை கேட்பார். தெரியாதவர்கள் எல்லாம் மௌனமாக நிற்க, தெரிந்தவர்கள் மட்டும் பதில் கூறுவார்கள். அந்த கேள்விக்கான பதிலை ஒருவர் கூறிவிட்டால், அடுத்த கேள்வி கேட்கப்படும். இது தான் கேள்வி நேரம். முதல் 15 நிமிடங்கள் இதிலே கழிந்துவிடும். பதில் தெரியாதவர்களுக்கெல்லாம் ஒரு அடி கொடுத்துவிட்டு அமர வைப்பார்.
அடுத்த சுற்று, 'ஹோம்-வொர்க்' சுற்று. இந்த சுற்றிலும் இதே மாதிரி தான். வீட்டுப்பாடம் எழுதாதவர்களுக்கு, அவர் பிரம்பில் இரெண்டு அடி விழும். அவர் கொடுக்கும் வீட்டுப்பாடத்திற்கு, அந்த இரெண்டு அடிகளே மேல் என்பதால், அனைவரும் பொதுக்குழுவில் கூடி, அதைப் புறக்கணிப்பது என்று முடிவெடுத்திருந்தனர். இந்த வகுப்பில் மட்டுமின்றி, 'கம்ப்யூட்டர்' வகுப்பிற்கும் இது பொருந்தும்.
அவர் அணிந்திருக்கும் மோதிரத்தினால், மேஜையின் மீது 'டொக் டொக்' என்று தட்டுவார். தட்டிவிட்டு, "ஒய் ஆர் யூ ஷௌட்டிங் பாய்?" என்று ஸ்டைலாக(?) மாணவர்களைப் பார்த்து திருநெல்வேலி இங்கிலிஷில் கேட்பார். இதுவே அவரது வழக்கமாக இருந்தது.
பாலாவிடம், "டேய், ஒரு விஷயம் கவனிச்சியா??" என்றான் நட்டு.
"என்னடா?"
"எப்பவுமே இவரு க்ளாஸ்-ல எல்லாரும் சத்தம் போட்டுக்கிட்டு இருந்தாலும், வலது பக்கம் மட்டும் திரும்பி "ஒய் ஆர் யூ ஷௌட்டிங்?"ன்னு கேக்குறாரே... ஏன் டா?" என்றான்.
"உனக்கு மட்டும் எப்படி இப்படியெல்லாம் தோணுது?" என்று கேட்டு வழக்கம்போல் அவனை அசிங்கப்படுத்தினான் பாலா.
முதல் சுற்றுக்கும் இரெண்டாவது சுற்றுக்கும் கொஞ்சம் இடைவெளி விட்டிருந்தார் செல்வம். அந்த 'கேப்'பில் அவர் பாபுவிற்கு அருகில் வந்தபோது,
"சார்" என்று அழைத்தான் பாபு.
அவர், "என்ன?" என்பதைப்போல் பார்த்தார்.
அப்போது, தயங்கித் தயங்கி "நீங்க தனியா டியூஷன் எடுக்குறீங்களா சார்?" என்று, நீண்ட நேரம் யோசித்து வைத்திருந்ததை ஒரு வழியாகக் கேட்டே விட்டான்.
என்ன நடக்கப்போகிறதோ என்று பயந்துகொண்டிருந்தான். ஆனால், அவர் பதிலேதும் சொல்லாமல், பாபுவை ஆழமாகப் பார்த்துவிட்டுக் கடந்து சென்றார்.
அவர் பதில் கூறாதது, பாபுவை மேலும் கவலையில் ஆழ்த்தியது.
இரெண்டாவது சுற்று ஆரம்பித்தது. 'ஹோம்-வொர்க்' எழுதாதவர்களை வரிசையாக அடித்துக் கொண்டே வந்தார். பாபுவிடம் வந்ததும், அவனையும் அவன் பெஞ்ச்சில் அமர்ந்திருந்த நட்டு மற்றும் பாலாவையும் அடிக்காமல், "கம் அண்ட் மீட் மீ இன் த ஸ்டாஃப் ரூம்" என்று கூறிவிட்டு சென்றார். மூவருக்கும் வயிற்றில் புளியைக் கரைத்தது.
முதல் வகுப்பு முடிந்தவுடன், பக்கத்து கிளாசிலிருந்து, ஷங்கர், குமார் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் எதிர்பார்ப்புடன் ஓடி வந்தனர்.
"என்னடா நடந்தது?" என்று பாபுவிடம் ஆர்வமாகக் கேட்டான் ஷங்கர்.
நடந்ததையெல்லாம் கூறினான் பாபு.
"கேட்டவன் இவன். இவனை மட்டும் கூப்பிடாம, எங்க ரெண்டு பேரையும் கூப்பிட்டாரு டா..." என்று கவலையுடன் கூறினான் பாலா.
கிருஷ்ணா, "ஏதாவது எடுபிடி வேலைக்கு கூப்பிட்டிருப்பார். உங்க ரெண்டு பேர் மூஞ்சிலேயும் அந்த களை இருக்கு" என்று வெறுப்பேத்தினான்.
கடுப்பான பாலா, கிருஷ்ணாவை அடிக்க முயல, கிருஷ்ணா ஓடினான். துரத்திக்கொண்டு பாலாவும் பின்னால் ஓட, இரெண்டு வகுப்புகளுக்கும் நடுவில் போடப்பட்டிருந்த 'ஸ்க்ரீன்' எனப்படும் கார்டுபோர்டு தடுப்பின் மீது பாலா மோதியதில், அது கீழே விழுந்தது.
பக்கத்து கிளாசில் அது சாய, நல்லவேளையாக யார் தலையிலாவது அது விழும் முன், அதைத் தாங்கி பிடித்தனர். ஒரு புறத்தை மட்டும் அந்த மாணவர்கள் தாங்கிப்பிடித்திருக்க, மறுபக்கத்தை ஷங்கர், குமார் ஆகியோர் பிடித்து அதை நிமிர்த்தினார்.
யாருக்கும் ஒன்றும் ஆகவில்லை என்பதை உறுதி செய்துகொண்டபின்னரே, கிருஷ்ணாவும் பாலாவும் மூச்சு விட்டனர்.
அதை ஒழுங்கு படுத்திவிட்டு நிமிர்ந்து பார்க்கையில், செல்வம் சார் அங்கு நின்றுகொண்டிருந்தார். ஒரு நிமிடம் பாலாவும் கிருஷ்ணாவும் ஆடிப்போய் நின்றனர். அவர் எப்போது அங்கு வந்தார் என்று யாருக்கும் விளங்கவில்லை.
எப்போதுமே டெரராக இருக்கும் அவர், அப்போது சாந்தசொரூபியாகக் காட்சியளித்தார். அமைதியாக நடந்து வந்து, அவர்கள் மூவரையும் அழைத்து, "கம் டு த ஸ்டாஃப் ரூம்" என்று கூறிவிட்டு சென்றார்.
அவர் அப்படி சொல்லிவிட்டு சென்றதும், பலவித எண்ணங்கள் அவர்களுக்குத் தோன்றின.
"நேரா மேடம் ரூமுக்கு தான்" என்று கிசுகிசுத்தான் பாலா.
"டேய், மூடிக்கிட்டு வா" என்று அவனைத்திட்டினான் பாபு.
'ஹட்ச்' நாய் போல, மூவரும் செல்வம் சாரைப் பின் தொடர்ந்து சென்றனர். அவர் டெரரா, காமெடியா என்கிற கேள்வி மறுபடியும் எழுந்தது.....
தொடரும்...
2 comments:
கௌரி...
ஒரு டியூஷன் மேட்டருக்கு இவ்ளோ சஸ்பென்சா? ஒரே டெரரா இருக்குபா!
Hi Gowri..
I got this blog link from Orkut Rajni community...
Wow.. you have excellent storing telling capability.. I am waiting to read more on what happens...
Lets see how it goes....
best wishes..
Vijay
Post a Comment