அமெரிக்கா டைரி - கான்கார்டு கோவில்
கான்கார்டு கோவில் பார்ப்பதற்கு கோவில் மாதிரியே இல்லை! விசாரித்தபோது, அது முன்பு சர்சாக இருந்தது என்றும், அந்த சர்ச்சில் பணிபுரிந்த பாதிரியார் இந்துவாக மதம் மாறியவர் என்றும் தெரியவந்தது. பின்பு, அவரிடமிருந்து ஒருவர் அந்த இடத்தை வாங்கி, கோவிலாக மாற்றியிருக்கிறார். இந்த தகவல் என்னை ஆச்சரியப்படுதியதோடு, கோவிலுக்குள் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தையும் தூண்டியது.
உள்ளே...
நுழைந்தவுடன் கண்ணில் தென்பட்டது அந்த பிரம்மாண்டமான மணி. நம் கோவில்களில் காணப்படும் அதே மணி. முருகப்பெருமானுக்கு திருக்கல்யண வைபவம் நடந்து கொண்டிருந்தது. ஹோம குண்டம் வளர்த்து, அதில் சந்தனக்கட்டைகளை போட்டவாறு மந்திரங்களை ஓதிக்கொண்டிருந்தார் அந்த குருக்கள். நம் கோவில்களுக்கே உரிய மணம் வீசத்தொடங்கியது... மக்கள் வந்த வண்ணம் இருந்தனர். பழங்கள், புஷ்பங்கள், பூர்ணாஹதி பட்டு முதலிய அனைத்தும் காணப்பட்டன. இவற்றிற்கு மத்தியில், குருக்கள் கை துடைத்துக்கொள்வதற்காக வைத்திருந்த டிஷ்யூ பேப்பர் ரோல் மட்டும், நாம் அமெரிக்காவில் தான் இருக்கிறோம் என்பதை நினைவூட்டியது. இரெண்டு மணிநேரம் முழுமையாக ஹோமத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. கிளம்பும் போது கிடைத்த பிரசாதங்களை நினைவில் நிறுத்துவது கடினம்! பாயாசம், வடை, பழம், பாதாம், பிஸ்தா, இவற்றைத் தவிர வந்திருந்த அனைவருக்கும், பர்ஸில் வைத்துக்கொள்ளும் அளவிலான அறுபடை வீடு முருகன் படமும் வழங்கப்பட்டது. கோவிலுக்கு கீழே உள்ள மண்டபத்தில், (சர்சாக இருந்த போது, பாதிரியார்களின் அலுவலகமாக செயல்பட்ட இடம்) "டேக் ஹோம்" டப்பாக்களில், சாம்பார் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம் ஆகியவற்றை அடைத்துக் கொண்டு எடுத்துச் சென்றுகொண்டிருந்தனர். அங்கே பால், சர்க்கரை, காபி பவுடர் ஆகியவையும் வைக்கப்பட்டிருந்தன. காபி விரும்பிகள், காபி கலந்து கொண்டு அதை அருகில் இருந்த மைக்ரோவேவில் வைத்து சூடாக்கி, அருந்தி விட்டுச்சென்றனர். பொதுவாகவே, இங்குள்ள
கோவில்களில், பிரசாதம் என்றாலே, ஒரு "மினி-லஞ்ச்" ரேஞ்சிற்கு தான் வழங்குகிறார்கள். நம்மூர் கோவில்களில் என்றைக்காவது வரிசையில் நின்று பிரசாதத்தை வாங்கியதாக நினைவில் இல்லை. இங்கு, கோவிலுக்கு வரும் அனைவரும், வரிசையில் நின்று, நிச்சயமாக பிரசாதம் வாங்கிச் செல்கின்றனர்.
"பழனி மலை முருகனுக்கு அரோகரா
என்று குருக்கள் சொல்ல, அனைவரும், "அரோகரா" என்று கோஷமிட, திருக்கல்யாண வைபவம், நிறைவடைந்தது. திருக்கல்யாணத்தை வெகு சிறப்பாக நடத்தி வைத்த குருக்களுக்கும், என்னை அங்கு அழைத்துச்சென்ற நண்பருக்கும் நன்றி! மனதிற்கு நிறைவாக இருந்தது.