Showing posts with label சிறுகதைகள். Show all posts
Showing posts with label சிறுகதைகள். Show all posts

Sunday, November 04, 2007

தீபாவளி

முதல் சிறுகதை முயற்சி.... நல்லா இல்லேன்னா தாராளமா திட்டலாம்.

கருத்து சொல்ல விரும்பும் "கருத்து கந்தசாமி"களையும் வரவேற்கிறேன்!
----------------------------------------------------------------------------------

"பாலா...இருட்டிக்கிட்டு வருது, மழை வரும் போலிருக்கு... உன் பட்டாசை எல்லாம் எடுத்து வை"
அம்மாவின் குரல் கேட்டு நாலு கால் பாய்ச்சலில் மொட்டை மாடிக்கு ஓடினான் பாலா. கார் மேகங்களால் சூழப்பட்ட வானம் மிரட்டியது. அவசர அவசரமாக, காய வைத்த பட்டாசுகளை எல்லம் அள்ளி சாக்கு பையில் கொட்டினான். அந்த அவசரத்திலும் வெடிகளையும் மத்தாப்புகளையும் எண்ணிப் பார்த்து, கணக்கை சரி பார்துக்கொள்ளத் தவறவில்லை!
பட்டாசுகளை வாங்கிய நாளிலிருந்து, தினமும் மதியம் வெடிகளை மொட்டை மாடியில் காய வைப்பதும், அவற்றை எண்ணிப் பார்ப்பதும் பாலாவிற்கு வாடிக்கையாகிவிட்டது.

எந்த வருடமும் இல்லாமல், இந்த வருடம் தீபாவளிக்கு பத்து நாட்களுக்கு முன்னரே அப்பா பட்டாசு வாங்கித் தந்ததால், தீபாவளியன்று வெடிக்க வேண்டிய வெடிகளை எல்லாம் அட்டவணை போட்டு வைத்திருந்தான்!
காலை எழுந்தவுடன் ஆயிரம் வாலா, இரெட்டை சரம், ஒற்றை சரம், பிறகு லெக்ஷ்மி வெடி. மதியம் சாப்பிட்டுவிட்டு அணுகுண்டு, ஒற்றை வெடி போன்றவற்றை வெடிக்கலாம் என்றும், இரவு மத்தாப்பு வகையறாக்கள் என்றும் திட்டம் தீட்டியிருந்தான்.

இந்த தீபாவளிக்கு, கிராமத்தில் வசிக்கும் பாட்டி வரப்போவதாக அம்மா கூறியதும், மகிழ்ச்சியின் உச்சத்திற்கே போனான் பாலா. பாட்டி என்றால், பாலாவிற்கு கொள்ளைப் பிரியம். வம்பு செய்துவிட்டு அம்மாவிடமோ, அப்பாவிடமோ அடி வாங்க நேரும் போது, பாட்டி தலையிட்டு காப்பாற்றுவாள். பேரன் மீது அதீத அன்பு செலுத்துவாள்.
பாட்டி ஊரிலிருந்து சுவையான பலகாரங்கள் எடுத்து வருவாள் என்று நினைக்கும் போதே பாலாவிற்க்கு நாக்கில் எச்சில் ஊறியது.

பாலா, தன் நண்பர்களை எல்லாம் அழைத்து வந்து மத்தப்புகளைக் காட்டுவதும் அவற்றை வெடிக்க, தான் போட்டு வைத்திருந்த அட்டவணையை சொல்வதுமாக பொழுதை கழித்தான். மேலும் தன் பாட்டி ஊரிலிருந்து வரவிருக்கிறாள் என்ற செய்தியையும் சொல்லி பெருமை பட்டுக் கொண்டான். தினமும் இரவு உறங்கச் செல்லும் முன், காலெண்டரின் தேதியைக் கிழித்து தீபாவளி நெருங்குவதைக் கண்டு பரவசமடைந்தான்.

இன்னும் இரெண்டே நாட்கள் தான்... தீபாவளி வந்துவிடும்! நாளை பாட்டி வந்து விடுவாள். பாட்டி வந்தவுடன் மத்தாப்புகளையும், புத்தாடைகளையும் காட்ட வேண்டும்... பாட்டியின் கை முறுக்கை ருசிக்க வேண்டும்... இப்படியெல்லாம் யோசித்துக் கொண்டிருந்ததில், தூக்கம் வரவில்லை...நேரம் போனதே தெரியவில்லை. நாளை காலை சீக்கிரம் எழுந்து, பாட்டி வருவதற்குள் குளித்து, சாப்பிட்டுத் தயாராகிவிட வேண்டும் என்ற முடிவோடு கண்களை இறுக மூடி, தூக்கத்தை வரவழைக்க முயன்றான்.

ஏதோ சத்தம் கேட்டு பாலாவின் தூக்கம் கலைந்தது. அம்மா, அப்பா இருவரும் பரபரப்பாக ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். தூக்கக் கலக்கத்தில் அவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று புரியவில்லை. பாட்டியையும் காணவில்லை. போர்வையை விலக்கிக் கொண்டு எழுந்து வந்து அறையின் கதவருகே நின்றான். அப்பா, கலங்கிய கண்களோடு யாரிடமோ தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார். என்ன நடந்தது என்று சுதாரிப்பதற்குள், அம்மா அருகில் வந்து, "பாட்டி இறந்துட்டாங்க பாலா! திடீர்னு நெஞ்சு வலி வந்து இறந்துட்டாங்களாம். நாம எல்லாரும் கிராமத்துக்குப் போறோம். நமக்கு இந்த வருஷம் தீபாவளி கிடையாது, சீக்கிரம் கிளம்பு" என்று சொல்லிவிட்டு, தன் பதிலைக் கூட எதிர்ப்பார்க்காமல் உள்ளே சென்றுவிட்டாள்.

பாலாவிற்கு தொண்டையை அடைத்துக் கொண்டது. கண்களிலிருந்து தாரை தாரையாக நீர் கொட்டியது... பாட்டியின் மேல் கோபம் கோபமாக வந்தது. முதன் முறையாக, பாட்டியை பாலாவிற்குப் பிடிக்கவில்லை!